சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு முடிவற்ற பணிகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி எடப்பாடி ஆய்வு மாளிகையில் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: பருவமழையின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 நாள்களுக்கு முன்பு அறிக்கை மூலம் அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தேன். ஆனால் சுகாதாரத்துறை அமைச்சர் ஏதேதோ பேசி பிதற்றுகிறார். காய்ச்சலை கட்டுப்படுத்த வேண்டும். எதிர்க்கட்சி என்ற முறையில் அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தால் திட்டமிட்டு தவறான செய்தி பரப்புவது கண்டனத்துக்குரியது. டெங்கு காய்ச்சல் நன்னீரில் உள்ள கொசுக்கள் மூலம் பரவுகிறது. மழை நீர் தேங்கும் இடங்களில் நீரை அப்புறப்படுத்த உள்ளாட்சித்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிக அளவில் காய்ச்சல் தடுப்பு முகாம்கள் நடத்த வேண்டும். ஆனால் அதை விடுத்து எதிர்க்கட்சித் தலைவர்களை விமர்சிப்பதுதான் தமிழக சுகாதாரத்துறை அமைச்சரின் வாடிக்கையாகி விட்டது. திறமையற்ற, முதிர்ச்சியில்லாத அமைச்சராக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் இருப்பது வேதனைக்குரியது. போக்குவரத்துத் துறையில் நகரப்பேருந்துகளில் பயணிக்கும் பெண்களிடம் சாதியைக் குறிப்பிட்டு, தொலைபேசி எண்களை கேட்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. திமுக தேர்தல் அறிக்கையில் நகரப் பேருந்துகள் அனைத்திலும் இலவச பயணம் என வாக்குறுதி அளித்து விட்டு, இன்றைக்கு ஒரு சில பேருந்துகளில் மட்டுமே இலவச பயணம் அளிக்கப்படும் தந்திர மாடலாக திமுக ஆட்சி உள்ளது. இதில் பயணம் செய்யும் மகளிரை சாதியின் பெயரைக் கேட்பது, தொலைபேசி எண்ணைக் கேட்பது பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தும். இனிமேலாவது எதிர்க்கட்சிகள் சொல்லும் கருத்துக்களை ஆராய்ந்து உரிய தீர்வு காண வேண்டும் என்றார்.
மேலும், கடந்த ஆண்டு திமுக அரசு அற்புதமான பொங்கல் பரிசு கொடுத்தார்கள், அண்டை மாநிலத்தில் வெல்லம் வாங்கி மிகப்பெரிய முறைகேடு நடந்தது. மக்களுக்கு மறக்க முடியாத பொங்கல் தொகுப்பாக அமைந்து விட்டது. இனிமேலாவது முறையான பொங்கல் தொகுப்பு வழங்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். சட்டத்தை பாதுகாக்கும் காவல்துறை நிகழ்வுகளில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது. குறுவை சாகுபடிக்கு மேட்டூர் வந்தபோது முதல்வர் டெல்டாகாரன் என்றார். ஆனால் முறையாக தண்ணீர் கொடுத்தால் மட்டுமே டெல்டாகாரன் என்பது பொருந்தும். முறையாக தண்ணீரை கணக்கிடாமல் அரசு திறந்துவிட்டதால் 5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெற்றது. ஆனால் உரிய நீர் கிடைக்காததால் ஒன்றரை லட்சம் ஏக்கர் மட்டுமே சாகுபடி செய்ய முடிந்தது. மூன்றரை லட்சம் ஏக்கர் பயிர்கள் தண்ணீரின்றி கருகிவிட்டன. இண்டியா கூட்டணிக்காக பெங்களூர் சென்ற முதல்வர் ஸ்டாலின் நம்முடைய நிலையை கர்நாடக அரசிடம் எடுத்து சொல்லி இருந்தால் தண்ணீர் கிடைத்திருக்கும். விவசாயிகளின் வாழ்வாதார பிரச்சினையை கவனத்தில் கொண்டிருந்தால் கர்நாடாகாவிடம் நீர் கேட்டு பெற்று காப்பாற்றி இருக்கலாம். குறுவை சாகுபடி பயிர்கள் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கவில்லை. இதனால் தண்ணீரின்றி கருகிய பயிர்களுக்கு உரிய இழப்பீடு கிடைக்கவில்லை. அதிமுக ஆட்சியில் உரிய முறையில் பயிர் காப்பீடு செய்ததால், ஒரு ஹெக்டேருக்கு ரூ.84 ஆயிரம் வழங்கப்பட்டது. அரசின் சார்பில் கூடுதல் ரூ.20 ஆயிரம் வழங்கப்பட்டது. ஆனால் இப்போது அந்த அளவிற்கு வழங்கப்படவில்லை என்று கூறினார்.
நெடுஞ்சாலைத்துறை திட்ட மதிப்பே ரூ.4800 கோடிதான். அதில் முழுமையாக ஊழல் எப்படி நடைபெற்றிருக்க முடியும். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு வந்தபோது, டெண்டரே நடைபெறாத போது எப்படி ஊழல் செய்ய முடியும் என நீதிபதி கேள்வி எழுப்பினார். எங்களிடம் மடியில் கனமில்லை. வழியில் பயமில்லை. திமுக அமைச்சர்கள் அச்சத்தில் உறைந்துபோயுள்ளனர். இரண்டரை கால திமுக ஆட்சியின் மிகப்பெரிய சாதனை ஊழல்தான். இதனை அக்கட்சியினரே சொல்லி இருக்கிறார்கள். அமலாக்கத்துறை சோதனை குறித்து முழுமையான தகவல் கிடைக்காததால் அது பற்றி என்னால் சொல்லமுடியாது. அதிமுக ஆட்சியில் ஒற்றை சாளர முறையில் தொழில்களுக்கு உடனடியாக அனுமதி கிடைத்தது. திமுக ஆட்சியில் கடுமையான மின் கட்டணம் காரணமாக தொழில்துறையினர் அண்டை மாநிலங்களுக்கு செல்கின்றனர். மேலும் சிறு குறு நடுத்தர தொழில்துறையினர் தொடர்ந்து பாதிக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் தாக்குபிடிக்க முடியாத அளவிற்கு மின் கட்டணம் உயர்ந்துள்ளது. இன்றைய தினம் விவசாயிகள், அரசு அலுவலர்கள், தொழில் துறையினர் என ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் அனைவரும் போராடக் கூடிய சூழ்நிலைதான் உள்ளது என்பதே யதார்த்தமான உண்மை என்று கூறினார்.