பிராமணர்களுக்கு எதிராக வாசகங்கள் ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் வைரலான நிலையில், வளாகத்தில் புதிய கட்டுப்பாடுகளை நிர்வாகம் அறிவித்துள்ளது. 


இந்தியாவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம். ஜேஎன்யூ என்று அழைக்கப்படும் இந்த பல்கலைக்கழகத்தில், தலைசிறந்த அறிஞர்கள், பேராசிரியர்கள் படித்துள்ளனர். 


ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் மாணவர் அமைப்புகள் வலிமை வாய்ந்தவையாகத் திகழ்கின்றன. இதில் இடதுசாரி சிந்தனைகளைக் கொண்ட மாணவர் அமைப்பான எஸ்எஃப்ஐ, வலதுசாரி சிந்தனைகளைக் கொண்ட மாணவர் அமைப்பான ஏபிவிபி உள்ளிட்ட அமைப்புகளுக்கு இடையே கடந்த சில ஆண்டுகளாக மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. 


இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக . ஜேஎன்யூ வளாகச் சுவற்றிலும் ஆசிரியர்களின் அறை வாசலிலும் எழுதப்பட்டிருந்த வாசகங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. அதில் ஷாகாவுக்குத் (ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாம்) திரும்பிச் செல்லுங்கள், ஜேஎன்யூ வளாகத்தை விட்டு பிராமணர்கள் வெளியேறுங்கள், பிராமணர்கள் - பனியாக்களே உங்களைத் தேடி வருகிறோம், ரத்தம் நிச்சயம் இருக்கும் என்பன உள்ளிட்ட வாசகங்கள் சிவப்பு நிறத்தில் எழுதப்பட்டிருந்தன. 


இந்தப் புகைப்படங்கள் கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தின. இந்த சம்பவத்துக்கு ஏபிவிபி மாணவர் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்தது. இடதுசாரி மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்களே இதற்குக் காரணம் என்று குற்றம் சாட்டியது. 


 






இந்நிலையில், ஜேஎன்யூ வளாகத்தில் துணை வேந்தர் நேற்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்து பேசினார். அதைத் தொடர்ந்து புதிய கட்டுப்பாடுகளை நிர்வாகம் அறிவித்துள்ளது. இதில் கூறப்பட்டுள்ளதாவது:


* அனைத்து மையங்களும் ஒரே வழியில் மட்டுமே மாணவர்களை அனுமதிக்க வேண்டும். அதே வழியில்தான் மாணவர்களை வெளியேற்ற வேண்டும். 


* மாணவர்கள் உள்ளே செல்லும் இடத்தில் வருகை மற்றும் வெளியேறும் பதிவேடு கொண்டு பராமரிக்க வேண்டும். 


* கல்வி மையங்களின் ஒவ்வொரு தளத்திலும் சிசிடிவி கேமராக்களைப் பொருத்த வேண்டும். 


* கட்டிடங்களில் தேவையான இடங்களில் பொதுச் சொத்துகளைப் பாதுகாப்பது பற்றி அறிவிப்புப் பலகையில் தெரிவிக்கப்பட வேண்டும். 


* கல்வி மையங்களின் ஒவ்வொரு நடைபாதையிலும் போதிய வெளிச்சம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். 


* குறிப்பிட்ட கால இடைவெளியில் ஜேஎன்யூ மாணவர்களுக்கு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட வேண்டும். 


இவ்வாறு ஜேஎன்யூ நிர்வாகம் தெரிவித்துள்ளது.