மாணவர்களின் கோரிக்கையை ஏற்று செமஸ்டர் கட்டண உயர்வு ரத்து செய்யப்படுவதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். மீண்டும் சிண்டிகேட் குழு கூடி செமஸ்டர் கட்டணம் உயர்வு என அறிவிப்பு வெளியாகும் வரை அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு கட்டணம் நிறுத்தி வைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:


2023ஆம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் குழுவில் செமஸ்டர் தேர்வு கட்டணங்கள் உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது மாணவர்கள் நலன் கருதி கடந்த ஆண்டு பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு கட்டணங்கள் உயர்த்தப்படாது எனவும் பழைய கட்டண முறையே பின்பற்றப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.


கட்டண உயர்வு மீண்டும் அமலா?


இந்த கல்வி ஆண்டு தொடக்கத்தின்போது சிண்டிகேட் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்ட சமச்சீர் கட்டண உயர்வு மீண்டும் அமலுக்கு வருவதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது. மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் மீண்டும் சிண்டிகேட் குழு கூடி செமஸ்டர் கட்டணம் உயர்வு என அறிவிப்பு வெளியாகும் வரை அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு கட்டணம் நிறுத்தி வைக்கப்படுகிறது.


இந்த கல்வி ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் செமஸ்டர் தேர்வு கட்டணம் உயராது. தன்னாட்சி பெற்ற கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வு கட்டணம் எவ்வளவு வசூலிக்கப்பட வேண்டும் என்பதை வரையறை செய்து அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் சுற்றறிக்கை வழங்கப்பட உள்ளது’’.


இவ்வாறு அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.


இதைத் தொடர்ந்து


சிண்டிகேட் கூட்டத்தில் தீர்மானம்


இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் குழு கூட்டம் நேற்று (ஆக.25) நடைபெற்றது. இதில், செமஸ்டர் தேர்வு கட்டணம் உயர்வு ரத்து, மோசடி செய்த ஆசிரியர்களுக்கு வாழ்நாள் தடை உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.


இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பணியாற்றிய 353 பேராசிரியர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட உள்ளது. மோசடி கணக்கு காட்டிய 224 தனியார் பொறியியல் கல்லூரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இதையும் வாசிக்கலாம்: Professors Ban: 353 பேராசிரியர்களுக்கு வாழ்நாள் தடை; கல்லூரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை- அதிரடி அறிவிப்பு