அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்கள் பணி நியமன விவகாரத்தில் உண்மை மறைக்கப்பட்டதாகப் புகார் எழுந்த நிலையில், அதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.


குத்தகை முறையில்தான் உதவிப் பேராசிரியர்கள் நியமனம் செய்யப்படுவர் என்று அண்ணா பல்கலைக்கழகம் அண்மையில் அறிவித்தது. இந்த அறிவிப்பு காரணமாக, அண்ணா பல்கலைக்கழகத்தில் இனிமேல் நிரந்தர உதவிப் பேராசிரியர்களோ, ஊழியர்களோ நியமிக்கப்படாத சூழல் ஏற்பட்டது.  இதனால் ஆசிரியர்களும் கல்வியாளர்களும் அதிர்ச்சி அடைந்தனர். அண்ணா பல்கலைக்கழகத்தின் கல்வித் தரம் இதனால் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் அவர்கள் கவலை தெரிவித்தனர். 


அண்ணா பல்கலை. உண்மையை மறைக்கிறதா?


தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்கள் மட்டுமே அவுட்சோர்சிங் முறையில் நியமிக்கப்படுவர் என்று பல்கலைக்கழக நிர்வாகம் விளக்கம் அளித்தது.  எனினும் ஒரே மாதிரியான 2 சுற்றறிக்கைகள், அடுத்த தேதியிட்டு, ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணிகளுக்கு தொகுப்பூதியம் என்று குறிப்பிட்டிருந்தது சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அண்ணா பல்கலை. உண்மையை மறைக்கிறதா என்று கேள்வி எழுந்தது. 




எனினும் இதுகுறித்து, அதற்கு பல்கலைக்கழக பதிவாளர் விளக்கம் அளித்துள்ளார். அதில் கூறப்பட்டு உள்ளதாவது:


அவுட்சோர்சிங்‌ மூலம்‌ ஆசிரியர்‌ அல்லாத தற்காலிக தினக்கூலி ஊழியர்களைப்‌ பணியில்‌ ஈடுபடுத்துவதற்கு 20/11/2024 அன்று வெளியிடப்பட்ட சுற்றறிக்கை தொடர்பான விளக்கம்‌ (Rejoinder)


நிதிக்குழுவின்‌ தீர்மானத்தின்படி மற்றும்‌ ஆட்சிமன்றக்குழு (சிண்டிகேட்) ஒப்புதல்‌ அளிக்கப்பட்ட தீர்மானத்தின்படி அவுட்சோர்சிங்‌ அடிப்படையில்‌ ஆசிரியர்‌ அல்லாத தற்காலிக தினக்கூலி ஊழியர்களைப்‌ பல்வேறு பிரிவுகளின்கீழ்‌ பணியில்‌ ஈடுபடுத்துவதற்கு ஒப்புதல்‌ அளிக்கப்பட்டது.


அதைத்‌ தொடர்ந்து இந்த தீர்மானத்தை நடைமுறைப் படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை வழங்குவதற்காக 2011/2024 தேதியிட்ட உள் சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. இருப்பினும்‌ கவனக் குறைவின்‌ காரணமாக அவுட்சோர்ஸிங்‌ மூலம்‌ ஆசிரியர்கள்‌ ஈடுபடுத்தப்படுவார்கள்‌ என்று சுற்றறிக்கையில்‌ தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது.


ஆசிரியரல்லாத ஊழியர்களைப் பணியில்‌ ஈடுபடுத்துவதற்கு மட்டுமே பொருந்தும்‌


இந்த பிழையை உணர்ந்து 21.11.2024 அன்று ஒரு திருத்தப்பட்ட உள்‌ சுற்றறிக்கை உடனடியாக வெளியிடப்பட்டது. இந்த கொள்கையானது அவுட்சோர்சிங்‌ அடிப்படையில்‌ பல்வேறு பிரிவுகளின்‌ கீழ்‌ உள்ள ஆசிரியரல்லாத தற்காலிக தினக்கூலி ஊழியர்களைப் பணியில்‌ ஈடுபடுத்துவதற்கு மட்டுமே பொருந்தும்‌ என்பதை தெளிவுபடுத்துகிறோம்‌.


இந்த உள்சுற்றறிக்கை குறித்து ஊடகங்களில்‌ செய்தி வெளியானதால்‌ அது தொடர்பான விளக்கம்‌ அளிக்கப்படுகிறது. முந்தைய சுற்றறிக்கையிலிருந்து எழும்‌ குழப்பத்தை சரி செய்வதற்காகவும்‌ ஆசிரியர்களை இந்த முறையில்‌ பணியில்‌ ஈடுபடுத்துதல்‌, அவுட்சோர்சிங்‌ ஏற்பாடுகளுக்கு உட்பட்டது அல்ல என்றும்‌, ஒருபோதும்‌ அந்த நிலைப்பாடு இருந்ததில்லை என்பதை மீண்டும்‌ உறுதிப்படுத்தவும்‌ இந்த விளக்கம்‌ அனுப்பப்படுகிறது.


சிரமத்திற்கு வருந்துகிறோம்‌.


இவ்வாறு அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.