அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் அனைத்து பொறியியல் கல்லூரிகளின் இளநிலை மற்றும் முதுநிலை தேர்வுகள் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. 


முன்னதாக மாண்டல் புயல் காரணமாக விடுக்கப்பட்ட கன மழை எச்சரிக்கை காரணமாக, டிசம்பர் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது. அதேபோல், வேலூர் திருவள்ளூவர் பல்கலைக்கழகத்தில் டிசம்பர் 9,10 ம் தேதி நடைபெறவிருந்த பருவத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன. 


மேலும், சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில்  டிசம்பர் 9ஆம் தேதி நடைபெறவிருந்த பருவத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. அதேபோல பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.


அண்ணா பல்கலைக்கழகத்தில் டிசம்பர் 9, 10 அன்று நடைபெறுவதாக இருந்து ஒத்தி வைக்கப்பட்ட தேர்வுகள் டிசம்பர் 24 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 




இந்நிலையில் நிர்வாகக் காரணங்களுக்காக மீண்டும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் அனைத்து கல்லூரிகளின் இளநிலை மற்றும் முதுநிலை தேர்வுகள் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இதன்படி, டிசம்பர் 24 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நடத்தப்படுவதாக இருந்த தேர்வுகள், 2023ஆம் ஆண்டு ஜனவரி 19 மற்றும் 20ஆம் தேதிகளில் நடைபெற உள்ளதாக  அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.


கூடுதல் விவரங்களுக்கு: https://aucoe.annauniv.edu/


மாண்டஸ் புயலுக்காக அறிவிக்கப்பட்ட விடுமுறை


மாண்டஸ் புயல்க்காலில் இருந்து 270 கி.மீ. கிழக்கு- தென் கிழக்கே மற்றும் சுமார் 350 கி.மீ. தெற்கே- சென்னைக்கு தென் கிழக்கே நிலை கொண்டுள்ளது. 


இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை,விழுப்புரம், கடலூர், திருப்பத்தூர், திருவாரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாமக்கல், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, சேலம், நாகை, திருவண்ணாமலை, திருச்சி, தருமபுரி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட 27 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் தேனி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டது.


மேலும் புதுச்சேரி - காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு டிசம்பர் 9 மற்றும் 10 ஆகிய இரண்டு நாள்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.


அதைத் தொடர்ந்து மாண்டஸ் புயலானது, மேற்கு- வடமேற்கு திசையைக் கடந்து, வட தமிழ்நாடு- புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தென் ஆந்திர பிரதேச கடற்கரைகளுக்கு இடையே புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டா மாகாணத்திற்கு இடையே கரையை கடக்கக் கூடும் என ஏற்கெனவே வானிலை மையம் தெரிவித்த நிலையில், மாமல்லபுரம் அருகே மாண்டஸ் புயல் கரையைக் கடந்தது.