அண்ணா பல்கலைக்கழகத்தில் நீண்ட காலமாகப் பணியாற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கு அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஆதரவு தெரிவித்து, அவர்களின் கோரிக்கையை மனிதாபிமான அடிப்படையில் பரிசீலிக்கத் தமிழக முதலமைச்சரைக் கேட்டுக் கொண்டுள்ளது. 


இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:


’’சென்னையில் உள்ள 4 வளாகங்களை உள்ளடக்கிய அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். தினசரி ஊதிய அடிப்படையில், சுமார் 400 பேர் இவ்வாறு உள்ளனர். அவர்கள், இந்தப் பல்கலைக்கழகத்தில் சில வருடங்கள் முதல் அதிகபட்சம் 20 ஆண்டுகளாகப் பணிபுரிகின்றனர். 


“கலைஞர்  அய்யா திட்டம்” என்ற பெயரில் 10 வருடங்கள் தொடர்ந்து சேவையாற்றி வரும் இவர்களது சேவைகளை முறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. இந்நிலையில், கார்ப்பரேட் நிறுவனங்களில் பணி புரிவதுபோல் ஏஜென்சி மூலம் பணியாளர்களை நியமிக்க அண்ணா பல்கலைக்கழகம் முயற்சி மேற்கொண்டு வருகிறது. 


இவர்கள் அனைவரையும் ஒப்பந்த ஊழியர்களாக மாற்றி குறிப்பிட்ட காலத்திற்குள் வெளியேற்றினால் அவர்களது குடும்பங்கள் வீதிக்கு வரும். இந்த முடிவால் கிட்டத்தட்ட 400 குடுமங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளர் மற்றும் துணை வேந்தரிடம் பல முறை மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் இதுவரை தீர்வு எட்டப்படவில்லை. 


அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் தற்காலிக ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் சேவைகளை முறைப்படுத்தவும், அவர்களின் சேவைகள் தொடரவும் அண்ணா பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு உத்தரவிடுமாறு தமிழக முதலமைச்சரிடம் கேட்டுக்கொள்கிறோம்’’. 


இவ்வாறு அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.


இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் அண்ணா பல்கலைக்கழகமும் ஒன்றாகும். 1978ஆம் ஆண்டில், சென்னையில் நிறுவப்பட்ட இந்தப் பல்கலைக்கழகம், பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் அதன் தொடர்புடைய அறிவியல் துறைகளில் உயர் கல்வி பட்டப் படிப்புகளை வழங்குவதுடன் ஆராய்ச்சிப் பணிகளையும் மேற்கொள்கிறது. இதன் முதன்மை வளாகம் சென்னையின் கிண்டியிலும், துணை வளாகம் சென்னையின் குரோம்பேட்டையிலும் உள்ளன.


முதன்மை வளாகத்தில் கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பர் தொழில்நுட்பக் கல்லூரி, கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் பள்ளி மற்றும் சென்னை பல்கலைக்கழகத்தின் மூன்று தொழில்நுட்பத் துறைகள் உள்ளன. சென்னை தொழில்நுட்ப நிறுவன வளாகம் குரோம்பேட்டையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண