பொறியியல்‌ கலந்தாய்வில் விளையாட்டு வீரர்களுக்கான முதல்கட்ட சான்றிதழ்‌ சரிபார்ப்பு ஜூன் 5ஆம் தேதி அன்று தொடங்குகிறது. இதில் மாணவர்கள் நேரில் கலந்துகொள்ள வேண்டியது அவசியம். எனினும் மற்ற மாணவர்களின்‌ சான்றிதழ்‌ சரிபார்ப்பு இணையதளம்‌ வாயிலாகவே நடைபெற உள்ளது. 


தமிழ்நாட்டின் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்குகின்றன. இவற்றில் இளநிலைப் படிப்புகளில் உள்ள சுமார் 1.5 லட்சம் இடங்கள் ஆண்டுதோறும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான பொறியியல் கலந்தாய்வு இணைய வழியில் ஜூலை 2ஆம் தேதி தொடங்குகிறது. ஆகஸ்ட் 2ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட கலந்தாய்வு ஒரு மாதம் முன்னதாகவே ஜூலை 2ஆம் தேதி தொடங்க உள்ளது. 


1.01 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்


இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த மே 5-ம் தேதி தொடங்கியது. பொறியியல் படிப்பில்  10,89,881 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 1,39,953 பேர் கட்டணம் செலுத்தினர். 1,01,342 மாணவர்கள் கட்டணம் செலுத்தி, சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்துள்ளனர். கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் ஜூன் 4-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. 


விளையாட்டு வீரர்கள்‌ பிரிவுக்கான சான்றிதழ்‌ சரிபார்ப்பு


2023-ஆம்‌ கல்வியாண்டில்‌ நடைபெறும்‌ பொறியியல்‌ கலந்தாய்வுக்கு விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பித்த மாணக்கர்களுக்கான முதல்‌ கட்ட சான்றிதழ்‌ சரிபார்ப்பு வரும் 05.06.2023 முதல்‌ 14.06.2023 வரை நடைபெற உள்ளது. இந்த சரிபார்ப்பு  அண்ணாபல்கலைக்கழக வளாகத்தில்‌ நடைபெறுகிறது. இதற்கான கால அட்டவணையை www.tneaonline.org என்ற இணையதளத்தில் காணலாம். 


அதில்‌ மாணவர்கள்‌ தங்களது பெயருக்கு எதிரே கொடுக்கப்பட்டுள்ள நாள்‌ மற்றும்‌ நேரத்தில்‌ நேரடியாக கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்‌. மேலும்‌, சான்றிதழ்‌ சரிபார்ப்பிற்கான நாள்‌மற்றும்‌ நேரம்‌ மாணக்கர்களின்‌ பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல்‌ மற்றும்‌ கைப்பேசிக்குக் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்‌. 


என்னென்ன ஆவணங்கள் தேவை?


சான்றிதழ்‌ சரிபார்ப்புக்கு வரும்‌ விளையாட்டு வீரர்கள்‌ தங்களது அனைத்து அசல்‌ சான்றிதழ்கள்‌ மற்றும்‌ அவற்றின்‌ 2 நகல்களுடன், தேவையான படிவங்களையும்‌ கொண்டு வர வேண்டும். விளையாட்டு வீரர்களுக்கான சான்றிதழ்‌ சரிபார்ப்புக்கு வரும்‌ மாணக்கர்கள்‌ மட்டும்‌ நேரில்‌ வர வேண்டும்.‌ மற்ற மாணவர்களின்‌ சான்றிதழ்‌ சரிபார்ப்பு இணையதளம்‌ வாயிலாகவே நடைபெறும்‌. விளையாட்டு வீரர்களுக்கான இரண்டாம்‌ கட்ட சான்றிதழ்‌ சரிபார்ப்பு கால அட்டவணை விரைவில்‌ அறிவிக்கப்படும்‌.


மாணவர்கள் www.tneaonline.org, www.tndte.gov.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்‌ என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 


விண்ணப்ப பதிவுக்‌ கட்டணம்‌


பதிவுக்‌ கட்டணத்தை விண்ணப்பதாரர்‌ டெபிட் கார்டு / Credit Card / நெட் பேங்க்கிங் ஆகியவற்றின் மூலம் இணையதளம் மூலமாகச் செலுத்தலாம்‌. 


கட்டணம்- ஓசி, பிசி, பிசிஎம், எம்பிசி- ரூ.500
எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி- ரூ.250


கூடுதல் விவரங்களுக்கு:


தொடர்பு எண்‌: 044 - 2235 1014 / 1015
அழைப்பு எண்‌: 1800 - 425 - 0110


இ- மெயில் முகவரி: tneacare@gmail.com