1 முதல் 18 வயது வரை பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் அன்புக் கரங்கள் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்தார். அண்ணாவின் பிறந்தநாளான இன்று இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
சென்னை கலைவாணர் அரங்கில், தமிழ்நாடு அரசின் தாயுமானவர் திட்டத்தின் ஒரு பகுதியாக அன்புக்கரங்கள் திட்டத்தை தொடங்கி வைக்கப்பட்டது. பெற்றோரை இழந்த 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு மடிக்கணினிகளையும் முதல்வர் வழங்கினார்.
திறன் மேம்பாட்டுப் பயிற்சி
இத்துடன், பள்ளிப்படிப்பு முடித்த பின்னர் கல்லூரிக் கல்வி மற்றும் உரிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் சம்பந்தப்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படும்.
மடிக் கணினிகள் வழங்கல்
மேலும், பெற்றோர் இருவரையும் இழந்து 12-ஆம் வகுப்பு முடித்து, பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களில் தமிழ்நாடு அரசின் முயற்சியால் சேர்க்கப்பட்டுள்ள மாணவ/ மாணவியர்களுக்கு மடிக் கணினிகளையும் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், ’’இதை வாக்கு அரசியலுக்காக நாங்கள் செய்யவில்லை. உங்களை பத்திரமாக பார்த்துக்கொள்ள நான் இருக்கிறேன். இனிமேல் நீங்கள் கவலைப்பட வேண்டாம்’’ என்று தெரிவித்தார்.
தாயுமானவர் திட்டத்தின் ஒரு பகுதி
மிகவும் வறுமையில் வாழும் குடும்பங்களை அடையாளம் கண்டு அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தமிழ்நாடு அரசின் “தாயுமானவர்“ திட்டத்தின் ஒரு பகுதியாக, பெற்றோர்கள் இருவரையும் இழந்த மற்றும் பெற்றோரில் ஒருவரை இழந்து மற்றொரு பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில், “அன்புக்கரங்கள்” திட்டம் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.