Govt Job Scam: ஒரே நேரத்தில் ஆறு அரசு வேலைகளை செய்துகொண்டு சம்பளம் வாங்கி வந்தவரிடம் இருந்து பணத்தை திரும்பப் பெறுவது எப்படி என உ.பி., அரசாங்கம் வழி தேடி வருகிறதாம்.
ஒரே நபருக்கு 6 அரசு வேலைகள், 6 ஊதியங்கள்:
ஒரு நபர் 6 வெவ்வேறு மாவட்டங்களில், ஒரே துறையில் ஒரே நேரத்தில் பணியாற்ற முடியுமா? அர்பித் சிங் எனும் நபர் கடந்த ஒன்பது ஆண்டுகளாக உத்தரபிரதேச மாநில சுகாதாரத் துறையில் இதை தான் செய்துள்ளார். இந்த வியக்கத்தகு மோசடியானது, மாநில அரசின் மானவ் சம்படா போர்ட்டலின் ஆன்லைன் சரிபார்ப்பு இயக்கத்திற்குப் பிறகுதான் அம்பலமாகியுள்ளது. அதில் ஒரு நபர் ஒரே மாதிரியான பெயர், தந்தையின் பெயர் மற்றும் பிறந்த தேதியை கொண்டு, 9 ஆண்டுகளாக எக்ஸ்-ரே ஊழியராக 6 வெவ்வேறு மாவட்டங்களில் பணியாற்றி வந்ததும், மாதா மாதம் ஒவ்வொரு பணிக்கும் 69 ஆயிரத்து 595 ரூபாயை ஊதியமாக பெற்று வந்ததும் தெரிய வந்துள்ளது.
ரூ.4.5 கோடியை ஆட்டையை போட்ட ஃப்ராட் கேங்:
போலி ஆதார் அட்டைகள் மற்றும் மோசடி செய்து உருவாக்கப்பட்ட நியமனக் கடிதங்கள் மூலமாக, அந்த ஆயுதம் ஏந்திய ஆள்மாறாட்டம் செய்யும் கும்பல், சுகாதாரத் துறையின் சம்பளப் பட்டியலில் இருந்து கிட்டத்தட்ட ரூ.4.5 கோடியை கையாடல் செய்து தலைமறைவாகி இருப்பது தற்போதைய விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மோசடியில் ஈடுபட்டவர்கள் வீடுகளைப் பூட்டிவிட்டு, தொலைபேசிகளை அணைத்துவிட்டுத் தப்பிச் சென்றுவிட்டதால், அவர்களிடமிருந்து சம்பளத்தைத் திரும்பப் பெறுவது ஒரு கனவாக இருக்கும் என்பதே உத்தரபிரதேச அரசு நிர்வாக தரப்பின் தகவல்களாக உள்ளது. மோசடி தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த கும்பலைச் சேர்ந்த வேறு யாரேனும் இதே போன்ற மோசடியில் ஈடுபட்டுள்ளார்களா? என்ற விசாரணையையும் போலீசார் முடுக்கிவிட்டுள்ளனர்.
ஊழல் தொடங்கியது எங்கே?
கடந்த 2016 ஆம் ஆண்டில் உத்தரபிரதேச அரசின் துணை சேவைகள் தேர்வு ஆணையம் (UPSSSC) எக்ஸ்ரே தொழில்நுட்ப வல்லுநர் பதவிகளுக்கு 403 பேரை தேர்ந்தெடுத்தது. அப்போது, ஆக்ராவைச் சேர்ந்த அர்பித் சிங் அவர்களில் ஒருவர், வரிசை எண் 80 இல் பட்டியலிடப்பட்டார். இருப்பினும், காலப்போக்கில், மேலும் 5 அர்பித் சிங்குகள் 5 வெவ்வேறு மாவட்டங்களில் பணியில் சேர்ந்துள்ளனர். ஆக்ராவைச் சேர்ந்த உண்மையான அர்பித்தின் ஆதார் விவரங்கள் மற்றும் நியமனக் கடிதங்களை போலியாக உருவாக்கி மேலும் 6 பேர் பணியில் சேர்ந்துள்ளனர். இதுதொடர்பாக அரசு தரப்பில் அளிக்கப்பட்ட புகாரில், பல்ராம்பூர், ஃபரூக்காபாத், பண்டா, ராம்பூர், அம்ரோஹா மற்றும் ஷாம்லி ஆகிய இடங்களில் போலி நபர்கள் பணியில் சேர்ந்தது தெரிய வந்துள்ளது.
வழக்குப்பதிவு செய்த போலீசார்
உண்மையான அர்பித் சிங் ஆக்ராவில் வேலை செய்து வர, அவரது பெயரில் மோசடியில் ஈடுபட்ட மற்ற 6 பேர் மீது ஆள்மாறாட்டம் மூலம் ஏமாற்றுதல் (419), மோசடி செய்தல் மற்றும் நேர்மையற்ற முறையில் சொத்துக்களை வழங்க தூண்டுதல் (420), மதிப்புமிக்க பாதுகாப்பை போலியாக உருவாக்குதல் (467), ஏமாற்றுவதற்கான போலி ஆவணம் (468), மற்றும் போலி ஆவணங்களை உண்மையானதாக பயன்படுத்துதல் (471) ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அகிலேஷ் யாதவ் தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் நடத்தப்பட்ட ஆட்சேர்ப்பு நடவடிக்கையானது, இப்போது அரசியல் ரீதியாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.