Fullsize SUV Offer: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஜிஎஸ்டி திருத்தத்தால் ரூ3.49 லட்சம் வரை, விலை குறைப்பை பெற்றுள்ள பெரிய சைஸ் எஸ்யுவிக்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
பெரிய சைஸ் எஸ்யுவிக்களுக்கான விலை குறைப்பு:
மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி திருத்தத்தால், வெகுஜன மக்களின் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கும் கார் மற்றும் பைக்குகளின் விலை கணிசமாக குறைய உள்ளது. தீபாவளி மற்றும் ஆயுத பூஜையை முன்னிட்டு, வரும் செப்டம்பர் 22ம் தேதி முதல் இந்த விலை குறைப்பு அமலுக்கு வரவுள்ளது. பெரும்பாலான இன்ஜின் அடிப்படையிலான கார்களின் விலை குறைந்துள்ளதால், வரும் மாதங்களில் விற்பனை பெரிய ஏற்றத்தை பெறக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மிகவும் பிரபலமான பெரிய சைஸ் எஸ்யுவிக்கள் ஜிஎஸ்டி திருத்தத்தால், எந்த அளவிற்கு விலைக் குறைப்பை எதிர்கொள்கின்றன என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
1. டொயோட்டா ஃபார்ட்சுனர்
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பெரிய சைஸ் எஸ்யுவி பிரிவில், ஒரு தசாப்தத்திற்கும் மேலாக போட்டியில்லாத தலைவனாக, டொயோட்டாவின் ஃபார்ட்சுனர் தொடர்ந்து முதலிடத்தை ஆக்கிரமித்துள்ளது. ஜிஎஸ்டி திருத்தம் காரணமாக, வேரியண்ட் அடிப்படையில் அந்த காரின் விலை தற்போது ரூ.3.49 லட்சம் வரை குறைய உள்ளது. காரின் அடிப்படை வேரியண்டான 4x2 பெட்ரோல் க்ரேட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் ரூ.2.4 லட்சம் வரை சலுகை பெறும் நிலையில், டாப் வேரியண்டான GRS அதிகபட்சமாக ரூ.3.49 லட்சம் வரையில் விலை குறைப்பை பெறுகிறது. இதன்மூலம் ஃபார்ட்சூனர் கார் மாடலின் விலை 50 லட்சத்திற்கும் குறைவான வரம்பை எட்டியுள்ளது. இந்த காரானது 2.7 லிட்டர் பெட்ரோல், 2.8 லிட்டர் டீசல் இன்ஜின்களை கொண்டு, ஆட்டோமேடிக் மற்றும் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன்களை 4x2 மற்றும் 4x4 ட்ரைவ் அம்சங்களுடன் கொண்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு தான் டொயோட்டா நிறுவனம், டீசல் ஹைப்ரிட் எஸ்யுவி எடிஷனை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
2. ஸ்கோடா கோடியாக்
ஸ்கோடாவின் கோடியாக் கார் மாடலானது ஸ்போர்ட்லைன் மற்றும் செலக்ஷன் L&K என இரண்டு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் விலை முறையே ரூ.46.89 லட்சம் மற்றும் ரூ.49.24 லட்சம் ஆகும். இந்நிலையில் புதிய ஜிஎஸ்டி திருத்த நடவடிக்கைகள் காரணமாக இந்த காரின் விலை 3.28 லட்சம் வரை குறை உள்ளது. அதன் படி, ஸ்போர்ட்லைன் மற்றும் செலக்ஷன் L&K புதிய விலை முறையே ரூ.43.76 லட்சம் மற்றும் ரூ.45.96 லட்சமாக இருக்கும். இரண்டு வேரியண்ட்களுமே, ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் உடன் கூடிய 2.0 லிட்டர் TSI பெட்ரோல் இன்ஜினை நிலையாக பெறுகிறது.
3. ஜீப் மெரிடியன்
ஜீப் நிறுவனத்தின் 7 சீட்டர் எஸ்யுவி ஆன மெரிடியன் காரின் விலை ரூ.2.47 லட்சம் வரை குறைய உள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் இந்த காரின் விலை ரூ.24.99 லட்சத்தில் தொடங்கி ரூ.36.79 லட்சம் வரை நீள்கிறது. ஜிஎஸ்டி திருத்தத்தின் விளைவாக ரூ.1.66 லட்சத்தில் தொடங்கி ரூ.2.47 லட்சம் வரை விலை குறைந்து, இனி மெரிடியன் கார் மாடலானது ரூ.23.33 லட்சம் தொடங்கி ரூ.34.34 லட்சம் வரையிலான விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது.
4. MG க்ளோஸ்டர்
MG நிறுவனத்தின் க்ளோஸ்டர் கார் மாடலானது 50 சதவிகித வரி அடுக்கிலிருந்து, 40 சதவிகித வரி அடுக்கிற்கு வந்துள்ளதால் அதன் மீது பயனர்கள் இனி ரூ.3.04 லட்சம் வரை சேமிக்கலாம். தற்போதைய சூழலில் இந்த காரானது, ரூ.41.07 லட்சத்தில் தொடங்கி ரூ.46.23 லட்சம் வரையிலான விலையை கொண்டுள்ளது. ஜிஎஸ்டி திருத்தத்தின் விளைவாக இந்த காரின் விலையானது இனி ரூ.38.36 லட்சம் தொடங்கி ரூ.43.19 லட்சமாக மாற உள்ளது. அதாவது ரூ.2.71 லட்சம் தொடங்கி ரூ.3.04 லட்சம் வரை பயனர்கள் பலன் பெறலாம்.
5. சிட்ரோயன் C5 ஏர்க்ராஸ்
சிட்ரோயன் நிறுவனத்தின் C5 ஏர்க்ராஸ் கார் மாடலின் தொடக்க விலையானது, ஜிஎஸ்டி திருத்தத்தால் ரூ.37.32 லட்சமாக குறைய உள்ளது. அதிகபட்சமாக ஷைன் வேரியண்டானது ரூ.2.7 லட்சம் வரை பலனை வழங்க உள்ளது. சிட்ரோயன் C5 ஏர்க்ராஸ் கார் மாடலானது தற்போதைய சூழலில் ஒரே வேரியண்டாக ரூ.39.99 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
Car loan Information:
Calculate Car Loan EMI