பொங்கல் திருவிழாவின் இறுதி நாளான இன்று தென்பெண்ணை ஆற்று திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
உத்தராயண புண்ணிய காலம் என்று கூறப்படும் தை மாதத்தில் புண்ணிய நதியாம் கங்கை, அனைத்து ஆறுகளிலும் சங்கமிக்கிறது என்பது ஐதீகம். இதனால் பொங்கல் பண்டிகையின் 5-ம் நாளில் ஆற்றில் தீர்த்தவாரி நடத்தினால் கங்கை நதியில் தீர்த்தவாரி நடத்திய பயன் ஏற்படும். அதனால் ஆற்றில் சாமிகள் கொண்டு வரப்பட்டு தீர்த்தவாரி நடத்தப்படுகிறது.
அந்த வகையில் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் தென்பெண்ணையாற்றின் கரையோரம் ஆற்றுத்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகை நிறைவடைந்து ஐந்தாம் நாளான இன்று இன்று ஆற்றுத்திருவிழா நடத்தப்படுகிறது. பொங்கல் திருவிழா கடந்த 15ஆம் தேதி தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இதனை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் கடலூர் தென்பெண்ணையாற்றில் ஆற்று திருவிழா இன்று நடந்தது. இதை முன்னிட்டு அதிகாலையிலேயே கடலூர் வண்டிப்பாளையம், புருகீஸ்பேட்டை, முதுநகர், பச்சாங்குப்பம், பாதிரிக்குப்பம், மஞ்சக்குப்பம், செம்மண்டலம், சாவடி, புதுப்பாளையம், வன்னியர்பாளையம், தேவனாம்பட்டினம், ஆனைக்குப்பம், குண்டுஉப்பலவாடி, தாழங்குடா, உச்சிமேடு, நானமேடு உள்ளிட்ட ஏராளமான பல்வேறு கிராம பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட சாமிகள் அலங்கரிக்கப்பட்டு பெண்ணையாற்றிற்கு கொண்டு வரப்பட்டன. சாமிகள் பெண்ணையாற்றில் புனித தீர்த்தவாரி செய்து ஆற்றங்கரைகளில் வரிசையாக நிறுத்தப்பட்டன. கடலூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் ஆற்றுத் திருவிழாவில் கலந்துகொண்டு வழிபட்டனர். இதில் ஒரு சிலர் ஆற்றில் புனித நீராடினர். மேலும் இந்த திருவிழாவில் ஒருநாள் மட்டும் கிடைக்கும் சுருளிகிழங்கு ஆற்றுத்திருவிழாவின் முக்கியமாகும். எனவே இந்த கிழங்கின் மகத்துவம் அறிந்த கிராம மக்கள் ஏராளமானோர் சுருளிகிழங்கு வாங்குவதற்காகவே ஆற்றுத் திருவிழாவிற்கு வருகின்றனர். ஆற்று திருவிழாவில் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.