தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதியில் ஏற்பட்ட பாதிப்புகளையும் அங்கு மேற்கொள்ளப்படும் சீரமைப்பு பணிகளையும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.




தூத்துக்குடி திருநெல்வேலி மாவட்டங்களில் கடந்த டிசம்பர் மாதம் 17, 18 ஆம் தேதிகளில் பெய்த அதிகமழையால் தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி கரையோரங்களான ஏரல், ஸ்ரீவைகுண்டம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் பெரும்பாலான கிராமங்கள் கடும் பாதிப்பை சந்தித்தன. கலியாவூர் கிராமத்தில் அமைந்துள்ள மருதூர் அணைக்கட்டு முதல் தாமிரபரணி ஆறு கடலில் கலக்கும் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள பல இடங்கள் கரையோர பகுதிகளில் உள்ள கண்மாய்கள், குளங்கள் கால்வாய்கள், ஆற்றுப் பாலங்கள், மேம்பாலங்கள் மற்றும் தடுப்பணைகளில் உடைப்பு ஏற்பட்டது. பல இடங்களில் இந்த உடைப்பு சீரமைக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் சில இடங்களில் சீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.




இதனைத் தொடர்ந்து சீரமைப்பு பணிகளை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மருதூர் கீழக்கால்வாய், மேல கால்வாய், கலியாவூர் மற்றும் உழக்குடிக் கண்மாய், வல்லநாடு தாமிரபரணி மேம்பாலம், வசப்பபுரத்தில் மேல கால்வாய் பகுதி, கருங்குளம் தாமிரபரணி மேம்பாலம், வெள்ளூர் குளம், ஏரல் தாமிரபரணி ஆற்றுப்பாலம், உமரிக்காட்டில் ஆற்றின் கரை மற்றும் புன்னக்காயல் தடுப்பணை பாலம் ஏற்பட்ட உடைப்புகள் சீரமைக்கப்பட்டுள்ளதையும் நடைபெற்று வரும் சில சீரமைப்பு பணிகளையும் ஆட்சியர் லட்சுமிபதி ஆய்வு மேற்கொண்டார். சீரமைப்பு பணிகளை விரைவில் முடிக்குமாறு அதிகாரியிடம் அறிவுறுத்தினார்




ஆய்வின் போது தூத்துக்குடி கோட்டாட்சியர் ராஜ மனோகரன், திருச்செந்தூர் கோட்டாட்சியர் குருச்சந்திரன், செயற் பொறியாளர்கள் மாரியப்பன் (தாமிரபரணி வடிநிலக் கோட்டம்), வசந்தி ( கோரம்பள்ளம் வடிநிலக் கோட்டம்) மற்றும் தூத்துக்குடி, ஏரல், திருச்செந்தூர் வட்டாட்சியர்கள் உடன் இருந்தனர்.