முதுநிலை படிப்புகளுக்கான கல்வி உதவித் தொகை பெற விரும்பும் மாணவர்கள் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஏஐசிடிஇ எனப்படும் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் ராஜீவ் குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
ஏஐசிடிஇ அங்கீகாரம் பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் எம்.இ., எம்.டெக்., எம்.பார்ம்., எம்.ஆர்க். அல்லது எம்.டெஸ் (முதுகலை வடிவியல் படிப்பு) ( M.E/M.Tech./M.Pharm./M.Arch./M.Des ) படிக்கும் மாணவர்கள் இந்த உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். அதாவது பொறியியல், தொழில்நுட்பம், கட்டிடவியல், பார்மசி ஆகிய படிப்புகளில் முதுநிலை படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கேட் , ஜிபிஏடி நுழைவுத் தேர்வு அல்லது சீட் தேர்வு (GATE/ GPAT/ CEED) அடிப்படையில் சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கு மாதம்தோறும் உதவித் தொகை வழங்கப்பட உள்ளது.
தகுதி பெறும் மாணவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம்தோறும் ரூ.12,400 உதவித் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் பகுதி நேரம், தொலைதூரக் கல்வி அடிப்படையில் முதுகலை படிப்புப் படிப்பவர்கள், மத்திய அரசின் உதவித் தொகையைப் பெற முடியாது.
இதற்கான இணையதள விண்ணப்ப பதிவு கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கி நடந்து வருகிறது. இதற்கான விண்ணப்பிக்கக் கடைசித் தேதி நவம்பர் 30 ஆக இருந்தது. எனினும் பல்வேறு மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்று, உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதேபோல உயர் கல்வி நிறுவனங்கள் தங்கள் மாணவர்களின் விவரங்களை ஜனவரி 15ஆம் தேதிக்குள் சரிபார்த்து, ஏஐசிடிஇ இணையதளத்தில் தகவல்களைப் பதிவேற்ற வேண்டும்’’.
இவ்வாறு அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம் தெரிவித்துள்ளது.
உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்கள் https://pgscholarship.aicte-india.org/ என்ற இணைய முகவரி மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
பிற கல்வி உதவித் தொகைகள் குறித்து ஏஐசிடிஇ-ன் https://www.aicte-india.org என்ற தளத்தில் அறிந்துகொள்ளலாம்.
முதுநிலை படிப்பு உதவித்தொகை குறித்த முழுமையான அறிவிப்பைக் காண: https://www.aicte-india.org/sites/default/files/PG%20scholarship%20Notification%20for%20A.Y.%202022-23.pdf
கூடுதல் விவரங்களுக்கு: 011-29581119 | இ- மெயில்: PGSCHOLARSHIP@AICTE-INDIA.ORG
இதையும் வாசிக்கலாம்: Illam Thedi Kalvi: 'இல்லம் தேடிக் கல்வி, எண்ணும் எழுத்தும் திட்டங்களை முற்றிலும் கைவிடுக'- அகில இந்திய கல்வி பாதுகாப்பு கமிட்டி வலியுறுத்தல் https://tamil.abplive.com/education/abolish-illam-thedi-kalvi-ennum-eluthum-schemes-aisec-to-tn-govt-88678/amp