12 ஆம் வகுப்பு தேர்வின் போது தந்தை இறந்த துக்கத்திலும் தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற மாணவிக்கு KPY பாலா ரூ.1 லட்சம் உதவி வழங்கியுள்ளார். 


கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் KPY பாலா. இவர் தனக்கு கிடைக்கும் வருமானத்தில் பொருளாதார சூழலால் கஷ்டப்படுபவர்களுக்கு பல்வேறு விதமான உதவிகளை செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் பாலா செய்த உதவிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்த நிலையில், அவருடன் நடிகர் ராகவா லாரன்ஸூம் கைகோர்த்துள்ளார். இவர்கள் இருவருடன், நடிகர் எஸ்.ஜே.சூர்யாவும் இணைந்து “மாற்றம்” என்ற அமைப்பின் மூலம் உதவி செய்வதாக அறிவித்துள்ளனர். 


இதனிடையே கடந்த மே 6 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் கடலூர் சூரப்ப நாயக்கன் சாவடி சேர்ந்த மாணவி ராஜேஸ்வரி 12 ஆம் வகுப்பு தேர்வில் 600க்கு 474 மதிப்பெண்கள் பெற்று சாதனைப் படைத்தார். இதில் மார்ச் 15 ஆம் தேதி இயற்பியல் தேர்வு நடைபெற்றது. அன்றைய தினம் எதிர்பாராதவிதமாக பத்திரப்பதிவுத்துறையில் பணியாற்றி வந்த ராஜேஸ்வரியின் தந்தை ரத்தின வடிவேல் உயிரிழந்தார். தந்தை இறந்த துக்கத்திலும் ராஜேஸ்வரி தேர்வெழுதினார். 






இதனிடையே 12 ஆம் வகுப்பு தேர்வில் தமிழிலும் 73, ஆங்கிலத்தில் 66, இயற்பியலில் 70, வேதியியலில் 83, கணினி அறிவியலில் 86, கணிதத்தில் 76 என 600க்கு 474 மதிப்பெண்கள் பெற்று அசத்தினார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர். மேலும் கல்லூரி படிப்புக்காக மாணவி உதவிகளை எதிர்பார்ப்பதாக சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவுகளை வெளியிட்டனர். இதனை வெளியிட்ட KPY பாலா சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக ராஜேஸ்வரி வீட்டுக்கு சென்றார். 


அங்கிருந்த ரத்தின வடிவேல் புகைப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பாலா, மாணவிக்கு ரூ.1 லட்சம் தன்னுடைய சொந்த பணத்தில் இருந்து அளித்தார். அதுமட்டுமல்லாமல் ஐடி படிக்க விரும்பிய மாணவிக்கு புதிதாக லேப்டாப் ஒன்றையும் பரிசளித்தார். பாலாவை பார்த்த மாணவி ராஜேஸ்வரி செய்வதறியாது திகைத்து போனார். மேலும் என் அம்மாவிடம் நான் அடிக்கடி சொல்வேன். உங்களை மாதிரி நானும் உதவிகளை செய்ய வேண்டும் என கூறுவேன் என சொல்லி கண் கலங்கினார்.


இதனைப் பார்த்த பாலா, “அப்பா இல்லாவிட்டாலும் அண்ணன் நான் இருக்கிறேன். உனக்கு எதாவது பண்ண வேண்டும் என ஆசைப்பட்டேன். என்ன உதவி வேண்டுமானாலும் என்னிடம் தயங்காமல் கேள்” என தெரிவித்தார். பாலா செய்த உதவியை பலரும் பாராட்டியுள்ளனர்.