மழை காலத்தில் விடப்படும் விடுமுறை நாட்களை ஈடு செய்ய தேவைப்படும் சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்தப்பட்டு, பாடத்திட்டங்களை முழுமையாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் பொது நூலகத் துறையும், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகமும், தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கல் சங்கமும் (பபாசி) இணைந்து சென்னையில் அடுத்த ஆண்டு (2023) ஜனவரி மாதம் 16, 17 மற்றும் 18ம் தேதிகளில் முதல் முறையாக சர்வதேச புத்தக கண்காட்சி நடத்த உள்ளது.
இந்த கண்காட்சியின் இலச்சினையையும் (லோகோ), நிகழ்ச்சி நிரலையும் வெளியிடும் நிகழ்ச்சி சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடந்தது. இதில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு, கண்காட்சிக்கான இலச்சினையையும், நிகழ்ச்சி நிரலையும் வெளியிட்டார்.
அப்போது பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் மேலாண்மை இயக்குனர் கஜலட்சுமி, பொது நூலக இயக்குனர் க.இளம்பகவத் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
''சர்வதேச ஒலிம்பியாட் போட்டி எப்படி அறிவுசார்ந்த போட்டியாக இருந்ததோ, அதனைத் தொடர்ந்து தற்போது சர்வதேச புத்தக கண்காட்சி அறிவுசார்ந்த வாசிப்பை ஊக்கப்படுத்தும் நிகழ்வாக நடக்க இருக்கிறது. சிறந்த தமிழ் இலக்கியங்கள், தமிழ் படைப்புகள் உலகளவில் கொண்டு செல்லும் பணியில் நம்மை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ள வேண்டும் என்ற நோக்கில் முதலமைச்சர் உத்தரவின்பேரில் இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பபாசி நடத்தும் புத்தக கண்காட்சியின் இதற்கென்று சிறப்பு அரங்கம் அமைக்கப்பட்டு, தமிழ்நாட்டில் உள்ள வாசிப்பாளர்களின் ஆர்வத்தின்படி, அதன் மூலம் எந்த இலக்கியம், படைப்புகளுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது என்பதெல்லாம் உணர்ந்து, வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு அதற்கான வெளியீட்டு உரிமைகள் வழங்குவதற்கும், அதேபோல் வெளிநாட்டில் இருந்து வரும் படைப்புகளின் வெளியீட்டு உரிமைகளை பெறுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகளவில் நம்முடைய தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் எடுத்துச்செல்லப்பட இருக்கிறது''.
இவ்வாறு அமைச்சர் அன்பில் தெரிவித்தார்.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. கன மழை பெய்யக்கூடிய மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு வருகிறது. அந்த வகையில் மழைக் காலத்தையொட்டி விடுமுறை விடப்படும் நாட்களை எவ்வாறு ஈடுசெய்ய போகிறீர்கள்? அதற்கு எதுவும் திட்டம் இருக்கிறதா? என்று அமைச்சரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், '’பாடத்திட்டத்தை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். எனவே மழைக் காலத்தில் விடப்படும் விடுமுறை நாட்களை ஈடு செய்ய தேவைப்படும் சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்தப்பட்டு, பாடத்திட்டங்களை முழுமையாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.