கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பதவிகள் அடங்கிய குரூப் 4 தேர்வுக்கு இதுவரை இல்லாத வகையில் மொத்தம் 21,85,328 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரித்தண்டலர், தட்டச்சர் உள்ளிட்ட பதவிகள் அடங்கிய தமிழ்நாடு அரசின் குரூப் 4 பணிகளில் மொத்தம் 7,382 காலி இடங்கள் உள்ளன. இதில் 81 இடங்கள் - விளையாட்டு வீரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 7,301 இடங்கள் போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்படும். ஜூலை 24ஆம் தேதி காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை 3 மணி நேரம் தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்தப் பதவிகளுக்கு அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் வரை ஊதியம் அளிக்கப்படுகிறது.
இதற்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 28 கடைசித் தேதியாக இருந்தது. இந்த நிலையில் மொத்தம் விண்ணப்பித்தவர்களின் விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி, குரூப் 4 தேர்வுக்கு இதுவரை இல்லாத வகையில் 21,85,328 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இதற்கு முன்னதாக 2017-ம் ஆண்டில் 20.76 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், தற்போது விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 21.5 லட்சத்தைக் கடந்துள்ளது. இதில், பெண்களே அதிக எண்ணிக்கையில் விண்ணப்பித்துள்ளனர்.
குரூப் 4 தேர்வு - மொத்தம் 21,85,328 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
பாலின வாரியான விவரம்
ஆண்கள் - 9,26,583
பெண்கள் - 12,58,616
3-ம் பாலினத்தவர் - 129
தேர்வு முறை எப்படி?
மொத்தம் 200 கேள்விகளுக்கு குரூப் 4 தேர்வு நடத்தப்படுகிறது. முதல் 100 கேள்விகள் தமிழ் சார்ந்து கொள்குறி வகையில் கேட்கப்படும். பொது அறிவு பகுதியில் இருந்து 75 கேள்விகளும் கணக்கு மற்றும் நுண்ணறிவு பகுதியில் இருந்து 25 கேள்விகளும் கேட்கப்படும். மொத்தம் 200 கேள்விகள் 300 மதிப்பெண்களுக்குக் கேட்கப்படும்.
முதல் பகுதியில் 150 மதிப்பெண்களுக்கு 60 மதிப்பெண்கள் பெற்றவர்களின் தேர்வுத்தாள் மட்டுமே திருத்தப்படும். மொத்தம் 90 மதிப்பெண்களைக் குறைந்தபட்சமாகத் தேர்வர்கள் பெற வேண்டும். அவர்களின் பெயர்கள் மட்டுமே தரவரிசைப் பட்டியலில் இடம்பெறும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்