நெடு நாட்களாக வெளியாகாமல் இருக்கும் சென்னைப் பல்கலைக்கழகத் தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 24ஆம் தேதி வெளியாகும் என்று பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இறுதி செமஸ்டர் மாணவர்களுக்கு மட்டுமே ஆக.24 அன்று தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. 


பாரம்பரியம் மிக்க பல்கலைக்கழகத்தில் நீளும் தாமதம்!


சென்னைப் பல்கலைக்கழகம் பாரம்பரியம் வாய்ந்த தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது 1851ஆம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்டது. இது இந்தியாவின் மிகப் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். லண்டன் பல்கலைக்கழகத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சென்னைப் பல்கலைக்கழகம் , 1857-ம் ஆண்டு இந்திய சட்டப்பேரவையின் கீழ் இணைக்கப்பட்டது. 


எனினும் தற்போது மத்திய அரசின் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) அமைக்கும் வழிமுறைகளுக்கு உட்பட்டு, சென்னைப் பல்கலை. செயல்பட்டு வருகிறது. அண்மையில்தான் சென்னைப் பல்கலைக்கழகத்தின் 165ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கலந்துகொண்டு, பட்டங்களை வழங்கினார்.  


ஏப்ரல் மாதத்தில் செமஸ்டர் தேர்வுகள்


இதற்கிடையே சென்னைப் பல்கலைக்கழகத்தின் வளாக மற்றும் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளுக்கான இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான 2, 4 மற்றும் 6ஆம் செமஸ்டர் தேர்வுகள் கடந்த ஏப்ரல் மாதம் ஆஃப்லைன் முறையில்  நடைபெற்றன. இரண்டு ஷிஃப்டுகளில் காலை 10 மணி முதல் 1 மணி வரையிலும் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் தலா 3 மணி நேரம் செமஸ்டர் தேர்வுகள் நடந்தன.


இதற்கான தேர்வு முடிவுகள் இதுவரை வெளியாகாத நிலையில், மாணவர்கள் தேர்வு முடிவுகள் எப்போது வரும் என்று கவலையில் ஆழ்ந்தனர். வழக்கமாக விடைத் தாள்கள், தேர்வு முடிந்து 4 முதல் 6 வாரங்களில் திருத்தப்பட்டு, வெளியாகும். இதனால், ஜூன் மாதம் 2 ஆவது வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் ஆகஸ்ட் மாதமே முடியப் போகும் சூழலில், இதுவரை தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. இதனால் தேர்வர்கள் கவலையில் ஆழ்ந்தனர். 


Madras University Result: இன்னும் எவ்வளவு நாட்கள்தான்? பாதிப்புக்குள்ளாகும் உயர்கல்வி - காத்துக்கிடக்கும் சென்னை பல்கலை., மாணவர்கள்!


கவலையில் தேர்வர்கள்


தேர்வு முடிவுகள் வெளியாகாதது  குறித்து சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் தனியார் கல்லூரி இளங்கலை மாணவி விலாசினி ABP Nadu-விடம் பேசினார். இதுகுறித்து அவர் கூறும்போது, ''இளங்கலை மூன்றாம் ஆண்டு, 6ஆவது செமஸ்டர் தேர்வை எழுதியுள்ளேன். விரைவில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எண்ணி, பெங்களூருவில் உயர் கல்விக்குச் சேர விண்ணப்பித்திருந்தேன். ஆனால் இதுவரை தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. 




என்னுடைய நண்பர்கள் சிலர் வேலைக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் இன்னும் தேர்வு முடிவுகள் வெளியாகாததால், அவர்களால் நிறுவனங்களில் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர முடியவில்லை. எங்களின் உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பாதிக்கப்படுவதால் சென்னைப் பல்கலைக்கழகம் உடனடியாக தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும்’’ என்று தெரிவித்து இருந்தார்.


ஆகஸ்ட் 24ஆம் தேதி தேர்வு முடிவுகள்


இந்த நிலையில், சென்னைப் பல்கலைக்கழகத் தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 24ஆம் தேதி வெளியாகும் என்று பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இறுதி செமஸ்டர் மாணவர்களுக்கு மட்டுமே 24ஆம் தேதி அன்று தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. அடுத்த ஒரு வாரத்தில் பிற ஆண்டு மாணவர்களுக்கும் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. 


விடைத் தாள் திருத்தும் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாகவும் தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிப்பாட விடைத் தாள்களைத் திருத்தும் பணி மட்டும் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். 


தொடர்ந்து தாமதமாகும் தேர்வு முடிவுகள்


ஏற்கெனவே கடந்த முறையே சென்னை பல்கலைக்கழக இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளின் 1, 3 மற்றும் 5ஆவது செமஸ்டர் தேர்வு முடிவுகள் நீண்ட இடைவெளிக்குப் பிறகே வெளியாகி இருந்தன. இந்நிலையில் 2, 4 மற்றும் 6ஆம் செமஸ்டர் தேர்வு முடிவுகளும் தாமதமாகி வருவது குறிப்பிடத்தக்கது.