தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சரகத்தில் ஃபாரஸ்டர் எனப்படும் வனவராகப் பணியாற்றி, குடிமைப்பணித் தேர்வு எழுதி ஐஎஃப்எஸ் ஆகத் தேர்ச்சி பெற்றுள்ளார் சுப்புராஜ். தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் இருந்து எளிய குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவர் சுப்புராஜ். 


வெளிநாட்டில் தொழிலாளியாய் இருந்த சுப்புராஜின் அப்பா, வேலையில்லாமல் நாடு திரும்பி பெட்டிக்கடை வைத்திருந்தார். அதில் வரும் வருமானம் வயிற்றுக்கே போதாத நிலை. சின்னச் சின்ன வேலைகள் செய்து அப்பா குடும்பத்தைக் காப்பாற்றினார். இல்லத்தரசியாய் இருந்த அம்மாவுடனும் பள்ளிப் படிப்பைப் படித்த தம்பியுடனும் வளர்ந்தார் சுப்புராஜ்.


தமிழ் வழியில் அரசு உதவிபெறும் பள்ளியில் படித்த சுப்புராஜ் 12ஆம் வகுப்பில் 1088 மதிப்பெண்களைப் பெற்றார். சிறு வயதில் இருந்தே விமானங்கள் மீதிருந்த ஆர்வத்தால், கோவையில் விமானவியல் பொறியியல் படிப்பில் சேர்ந்தார். இறுதி ஆண்டில் நண்பர்கள் மூலம் யூபிஎஸ்சி தேர்வுகள் குறித்த அறிமுகம் ஏற்பட்டது. ஐஏஎஸ் ஆக முடிவெடுத்தார். அதற்குப் பிறகு நடந்தவற்றை அவரே சொல்கிறார். 


’’நண்பர்கள் எல்லோரும் பேசிக் கொண்டிருந்தபோது போட்டித் தேர்வுகள் குறித்து விவாதித்தோம். அப்போதுதான் சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயாராகலாம் என்று முடிவெடுத்தேன். பொருளாதார ரீதியாகக் கஷ்டத்தில் இருந்தாலும், குடும்பத்தினர் என்னைப் படிக்க ஊக்குவித்தனர். சென்னையில் தாத்தா வீட்டில் இருந்து படிக்க ஆரம்பித்தேன். வாடகை உள்ளிட்ட செலவுகள் இல்லாததால், ஓரளவு சமாளிக்க முடிந்தது. 




பயிற்சி மையங்களுக்குச் செல்ல வசதி இல்லாததால், பொது நூலகங்களை முழுமையாகப் பயன்படுத்தினேன். படித்துக்கொண்டே இருந்ததால், வெளி உலகத்தில் இருந்து வேறுபட்ட உலகில் இருந்தேன். பிறகு தமிழ்நாடு அரசு ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் இணைந்து படித்தேன். கொஞ்சம் கொஞ்சமாக ஐஏஎஸ் படிப்பு குறித்த புரிதல் ஏற்பட்டது. 


தமிழ் வழியில் படித்து, யூபிஎஸ்சி தேர்வுக்குத் தயாரானது எப்படி?


ஆரம்ப காலகட்டங்களில் நிறைய கஷ்டப்பட்டேன். தி இந்து ஆங்கில நாளிதழ் வாசிப்பு ஐஏஎஸ் தேர்வர்களுக்கு முக்கியம். முதல்முறை 10 மணி நேரம் ஆகியும், என்னால் நாளிதழை முழுமையாகப் படிக்க முடியவில்லை. அதிலுள்ள பெரும்பாலான வார்த்தைகளின் அர்த்தம் புரியவில்லை. பேப்பரைக் கிழித்தெல்லாம் எறிந்திருக்கிறேன்.


4 மாத காலம், தினந்தோறும் 8 மணி நேரம் செய்தித்தாள் வாசிக்கவே செலவானது. அகராதி, கூகுள் உதவியோடு ஆங்கில வார்த்தைகளின் அர்த்தத்தைத் தெரிந்துகொண்டேன். தமிழ் செய்தித்தாளை வைத்து ஒப்பிட்டுப் படித்தேன். தொடர்ந்து படிக்கப் படிக்க, 8 மணி நேரம் 6 மணி நேரமாகவும், பிறகு 2 மணி நேரமாகவும் குறைந்தது.


என்சிஇஆர்டி புத்தகங்களையும் புதிதாகப் படிக்க ஆரம்பித்தேன். தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் இருந்து, தமிழ் மற்றும் ஆங்கிலப் புத்தகங்களை ஒரே நேரத்தில் பதிவிறக்கம் செய்து, படித்தேன்.


முதன்மைத் தேர்வை தமிழில் எழுதும் வாய்ப்பு இருந்தது. நேர்காணலில் ஆங்கிலத்தில் பேசத் தயங்கி, மொழிபெயர்ப்பாளரைத் தேர்வு செய்தேன். எனினும் ஒருவாறாக சமாளித்து நானே ஆங்கிலத்தில் பேசினேன்" என்கிறார்.




முதல் தலைமுறை பட்டதாரி நீங்கள். குடும்பத்தில் மூத்த மகன். பெற்றோர்களைச் சிரமப்படுத்தாமல், வேலைக்குப் போய்விட வேண்டும் என்று தோன்றவில்லையா? 


வீட்டில் பெற்றோர்கள் முழு அளவில் ஆதரவாக இருந்தனர்.  அங்கங்கே கடன் வாங்கியாவது எனக்கு அனுப்பி வைப்பர். அம்மாவின் நகைகளை அடகு வைத்தும் பணத்தைத் திரட்டி படிக்க வைத்தனர். அவர்களின் கஷ்டத்தை எனக்குக் காண்பிக்கவே இல்லை. 


அதே நேரத்தில் 3 ஆண்டுகளாகப் படித்துக்கொண்டே இருக்கிறோம். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. கல்லூரி நண்பர்கள் எல்லோரும் வேலைக்குச் சென்றுவிட்டனர். இதனால் 2019-ல் வேலைக்குச் செல்ல முடிவெடுத்தேன். 


வேலைக்குச் சென்றுகொண்டே, அதுவும் சீருடைப் பணியில் இருந்துகொண்டு எப்படிப் படித்தீர்கள்?


2017-ல் ஐஏஎஸ் முதல்நிலைத் தேர்விலேயே தேர்ச்சி பெறவில்லை. 2018-ல் முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றேன். முதன்மைத் தேர்வைத் தமிழில் எழுதினேன். ஆனால் கிடைக்கவில்லை. அப்போதுதான் வனத்துறைக்கான மாநிலத் தேர்வை எழுதினேன். அதில் தேர்ச்சி பெற்று, வனவராகப் பணியைத் தொடங்கினேன். 


காலையில் 5 மணியில் இருந்து இரவு 10 மணி வரை வனத்துறை பயிற்சி கடுமையாக இருக்கும். பயிற்சியில் இருந்துகொண்டே மீண்டும் 2019 முதல்நிலைத் தேர்வை எழுதினேன். நல்ல மதிப்பெண்களைப் பெற்றதால், யூபிஎஸ்சி மற்றும் ஐஎஃப்எஸ் இரு தேர்விலும் தேர்ச்சி பெற்றேன். மேல் அதிகாரிகளிடம் அனுமதி பெற்று, 4 மாதங்கள் படித்து, இரண்டுக்குமான முதன்மைத் தேர்வுகளையும் எழுதினேன். ஐஎஃப்எஸ் முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் எழுத வேண்டிய தேர்வு. நமக்குதான் ஐஏஎஸ் கிடைத்துவிடுமே என்ற எண்ணத்தில், அதையும் ஒழுங்காக எழுதவில்லை.




ஐஏஎஸ் நேர்காணல் தேர்வுக்கு அழைப்பு வந்தது. 2020 மார்ச்சில் டெல்லி சென்று, கலந்துகொண்டேன். தேர்ச்சி பெற்றுவிடுவேன் என்று நம்பிக்கையில் இருந்தேன். கொரோனா காரணமாக 8 மாதங்களுக்குத் தேர்வு முடிவுகள் தள்ளிப்போனது. கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில், புத்தகங்களைத் தொடாமலேயே இருந்தேன். ஆனால் தேர்வாகவில்லை. 4ஆவது முறையாக 2020 முதல்நிலைத் தேர்வையும் எழுதினேன். அதில், முதல்நிலைத் தேர்விலேயே தோல்வியைச் சந்தித்தேன்.


அந்தத் தருணத்தை எப்படிக் கடந்து வந்தீர்கள்? எது உங்களை ஆற்றுப்படுத்தியது?


4 வருட வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்தால் எதுவுமே இல்லை. கையில் எதுவுமே இல்லையே என்று யோசித்தேன். வனவர் பணி மட்டுமே மிச்சமிருந்தது. ஆனால் அந்த வேலைக்கு உண்மையாக இருக்கிறோமா என்று குற்ற உணர்ச்சியாகவும் இருந்தது. உறவினர் நிகழ்வுகள் எதற்குமே சென்றதில்லை. கிட்டத்தட்ட புத்தரின் வாழ்க்கையை வாழ்ந்தேன். ஆனால் இப்படி ஆகிவிட்டதே என்று கஷ்டமாக இருந்தது. வழிகாட்டிகளும் குடும்பத்தினரும் என்னை சமாதானப்படுத்தினர். 


2017-ல் இருந்து 5 முறை ஐஏஎஸ் தேர்வில் தோல்வி அடைந்திருக்கிறீர்கள். அப்போதெல்லாம் எப்படி உணர்ந்தீர்கள்? 


கல்லூரியை முடித்ததில் இருந்து 6 ஆண்டுகளாக ஐஏஎஸ் தேர்வை எழுதி வருகிறேன். அன்றில் இருந்து பொழுதுபோக்கு என்றால் என்னவென்றே தெரியாமல்தான் இருந்தேன். ஒவ்வொரு மாணவனுக்கும் பட்டமளிப்பு விழா ஒரு கனவு. ஆனால் பொறியியல் கல்லூரியில் நான் பல்கலைக்கழக ரேங்க்கைப் பெற்றிருந்தும், என்னுடைய பட்டத்தையே நேரில் சென்று வாங்க முடியவில்லை. 


தொடர்ந்து விடாமுயற்சியுடன் படிக்கத் தோன்றியது எப்படி?


ஏன் நமக்கு மட்டும் இப்படி நடக்கிறது என்று யோசித்தேன். என்னுடைய வழிகாட்டி, சங்கர சரவணன் சார், ஒரு குறளைச் சொன்னார். 


சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதைஅம்பின்
பட்டுப்பாடு ஊன்றும் களிறு


அதாவது, போர்க்களத்தில் செல்லும் யானை, உடம்பை மறைக்குமளவு அம்புகளால் புண்பட்டாலும், ரத்தம் வழிந்தாலும் தன் பெருமையை நிலைநிறுத்தும்; அதுபோல், நாமும் தளரவிடக்கூடாது என்று ஆறுதல் சொன்னார். 


9 முறை ஐஏஎஸ் முயற்சி செய்தும், பணி கிடைக்காமல் போனவர்களையும் நான் பார்த்திருக்கிறேன். இதையெல்லாம் நினைத்து மனதைத் தேற்றிக் கொண்டேன். 




ஃபாரஸ்டர் டூ ஐஎஃப்எஸ்- சாத்தியமானது எப்படி?


கொரோனா காரணமாக 2021 முதல்நிலைத் தேர்வு 6 மாதங்களுக்குத் தள்ளிப்போனது. கடுமையாக உழைத்தேன். நானும் நண்பனும் வீடியோ காலில் இணைந்து படித்தோம். ஐஏஎஸ், ஐஎஃப்எஸ் இரண்டு முதன்மைத் தேர்வுகளுக்குமே தேர்ச்சி பெற்றேன். 3 மாதங்கள் விடுமுறை எடுத்துப் படித்தேன். உயர் அதிகாரிகள் ஆதரவு அளித்தனர். யூபிஎஸ்சி தேர்வெழுதி 40 நாட்களில் ஐஎஃப்எஸ் தேர்வுக்குத் தயாராகி, எழுதினேன். இரண்டு தேர்வுகளிலுமே நேர்காணலுக்குத் தேர்வானேன். டெல்லி சென்று மாதிரி நேர்காணல்களில் கலந்துகொண்டேன். 


வீட்டில் அனைவரும் தூங்காமல் காத்திருந்து ஐஏஎஸ் தேர்வு முடிவுகளைப் பார்த்தோம். ஆனால் இந்த முறையும் கிடைக்கவில்லை. இரண்டு நாட்கள் பைத்தியம் போலவே திரிந்தேன். மீண்டு வந்து, ஐஎஃப்எஸ் நேர்காணலுக்குத் தயார் ஆனேன். முழுக்க முழுக்கத் துறை சார்ந்து இருக்கும் என்பதால் என்னுடைய பணி அனுபவம் நேர்காணலுக்கு உதவியாக இருந்தது. 


நேர்காணலுக்கு வந்த 250 பேரில், 3 பேர் மட்டுமே வனத்துறையில் இன்று சென்றிருந்தோம். முழுக்க முழுக்க ஆங்கிலத்திலேயே பேசி, தேர்ச்சியும் பெற்றுள்ளேன். 4ஆவது முறை எனக்கு வெற்றி கிடைத்தது. 6ஆவது முறையாக 2022ஆம் ஆண்டு முதல்நிலைத் தேர்வை எழுதி, தேர்ச்சி பெற்றுள்ளேன். முதன்மைத் தேர்வுக்குத் தயாராகி வருகிறேன். 


இளம் தலைமுறையினருக்கு உங்கள் ஆலோசனை என்ன?


தேர்வு நடைமுறை முழுமையாக ஆங்கிலத்தில் இருக்கும் என்று நினைத்தும், அதி உயர் தரத்தில் உள்ளடக்கம் இருக்கும் என யோசித்தும் பலர் யூபிஎஸ்சி தேர்வு கஷ்டம் என்று முயற்சிக்கத் தயங்குகின்றனர். ஆனால் நிஜம் அப்படியில்லை. பகுப்பாய்வு சிந்தனைதான் முக்கியம். மொழிப் பகுதியைப் பொறுத்தவரை 6 மாதங்கள் முயன்றால்போதும். ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ளலாம். 


எதையும் வேண்டும் என்று ஆழ்ந்து சிந்தித்து, அதற்கு ஏற்றவாறு உழைக்க வேண்டும். விடாமுயற்சியும் கடின உழைப்பும் இருந்தால் சாதித்துவிடலாம்’’.


இவ்வாறு சுப்புராஜ் தெரிவித்தார். 


படிப்பு மூலம் கடைநிலைப் பணியில் இருந்து உயர்நிலைப் பணிக்கு யார் வேண்டுமானாலும் செல்லலாம் என்பதைத் தனது விடாமுயற்சியாலும் தன்னம்பிக்கையாலும் நிரூபித்திருக்கிறார் சுப்புராஜ் ஐஎஃப்எஸ்.