வந்தவாசி அடுத்த தெள்ளார் பகுதியில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் மோதலில் ஈடுபட்ட காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதால் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் சக மாணவர்களை ரேகிங் செய்வது, ஆசிரியர்களை மிரட்டும் தொனியில் பேசுவது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் தற்போது திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தெள்ளாரில் தனியார் கலை அறிவியல் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது.
இந்த கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பயின்று வருகிறார்கள். மேலும் இக்கல்லூரியில் நேற்று மூன்றாம் ஆண்டு படித்து முடித்துவிட்டு கல்லூரியில் இருந்து வெளியேறும் மாணவர்களுக்கு, இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் ஆண்டு விழா நடத்தியுள்ளனர். இந்த ஆண்டு விழாவில் வணிகவியல் துறை மாணவர்களுக்கும் மற்றும் வேதியல் துறை மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த வாக்குவாதம் இருவருக்கிடையே கைகலப்பாக மாறியுள்ளது. இதனால் மாணவர்கள் ஒருவருக்கொருவர் மிகக் கடுமையான முறையில் தாக்கிக் கொண்டனர். இவர்கள் இருவருக்கு இடையில் தாக்கிக் கொண்ட போது சக மாணவர்கள் தடுக்காமல் அதை செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளனர். இந்த சண்டைக் காட்சிள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அந்த வீடியோ காட்சிகளில் கல்லூரி மாணவர்கள் ஒருவருக்கொருவர் தாக்கிகொண்ட போது கல்லூரி ஆசிரியர்கள் மோதலில் ஈடுபட்ட மாணவர்களை தடுத்து நிறுத்தியும் சண்டையில் ஈடுபட்ட மாணவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர் .இதுகுறித்து கல்லூரி நிர்வாகம், சண்டையிட்ட மாணவர்களை அழைத்து அவர்களிடம் எதற்காக சண்டையிட்டுக் கொண்டனர் என்பதை விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தவறுகள் செய்த மாணவர்கள் மீது கல்லூரி நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர். தனியார் கல்லூரி மாணவர்கள் ஆண்டு விழாவின்போது ஒருவருக்கொருவர் கண்மூடித்தனமாக தாக்கிக் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதால் வந்தவாசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்