சேலம் ஜலகண்டபுரத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து மருத்துவம் படிக்க 9 மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒரு மாணவிக்குப் பல் மருத்துவம் கிடைத்த நிலையில், இரண்டாம்கட்டக் கலந்தாய்வுக்காகக் காத்திருக்கிறார்.


மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வு மூலம் கிராமப்புற, ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, அப்போதைய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மருத்துவக் கலந்தாய்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீட்டை அறிமுகம் செய்தார். 


அந்த வகையில் உள் இட ஒதுக்கீட்டின் மூலம், ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான அரசுப் பள்ளி மாணவர்கள், தங்களின் மருத்துவக் கனவை நனவாக்கி வருகின்றனர். இந்த ஆண்டு, சேலம் மாவட்டம், ஜலகண்டபுரத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து மருத்துவம் படிக்க 9 மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒரு மாணவிக்குப் பல் மருத்துவம் படிக்க இடம் கிடைத்த நிலையில், அதைத் தேர்ந்தெடுக்காமல் இரண்டாம்கட்ட மருத்துவக் கலந்தாய்வுக்காகக் காத்திருக்கிறார்.


தேர்வு செய்யப்பட்ட மாணவிகளின் விவரம்


7.5% இட ஒதுக்கீட்டின் மாநில அளவிலான தரவரிசைப் பட்டியலில் 17வது இடம்பெற்ற மாணவி லாவண்யா, சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் படிக்கத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 73வது இடம்பெற்ற மாணவி முகிலா, சேலம் மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரியிலும் 93ஆவது இடம்பிடித்த மாணவி காயத்ரி, கோவை இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியிலும் படிக்கத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும் இரண்டாவது முறையாக நீட் தேர்வு எழுதித் தேர்ச்சி பெற்றவர்கள் ஆவர். 




அதேபோல மாணவி சந்தியா மாநில அளவிலான தரவரிசைப் பட்டியலில் 30வது இடம்பிடித்து, கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் படிக்கத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மாணவி லோகவர்தினி சேலம் மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரியிலும், மாணவி வைஷ்ணவி நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியிலும் படிக்கத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 


அதேபோல மாணவி பிரியாவுக்கு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியிலும் மாணவி ஹேமலதாவுக்கு கோவை கற்பகம் மருத்துவக் கல்லூரியிலும் படிக்க இடம் கிடைத்துள்ளது. மேலும் மாணவி கஸ்தூரிக்கு மதுராந்தகம் கற்பக விநாயக மருத்துவக் கல்லூரியில் படிக்க இடம் கிடைத்துள்ளது. 




இதுகுறித்துப் பேசிய ஜலகண்டபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மரிய மெர்லின், ''கடந்த ஆண்டு ஒரு மாணவிக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது, இந்த ஆண்டு மருத்துவம் படிக்க ஆசைப்பட்ட மற்ற மாணவிகளுக்கு உத்வேகமாக அமைந்தது. என்எம்எம்எஸ், ஊரகத் தேர்வுகளில் தேர்வான மாணவிகளும், சிறப்பு ஊக்கத்துடன் நீட் பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டனர். பள்ளி ஆசிரியர்களும் ரோட்டரி க்ளப் மூலம் வேலையில்லாப் பட்டதாரிகளும் இணைந்து மாணவிகளுக்குப் பயிற்சி அளித்தனர்.


ஆசிரியர்கள் எவ்வளவுதான் எடுத்துக்கூறினாலும் குழந்தைகளின் தாகமே எந்த ஒரு பயிற்சிக்கும் முக்கியம். எங்கள் மாணவிகளும் அதே ஆர்வத்தில் இருந்தனர். பள்ளி மாணவிகளில் 29 பேரை மருத்து நுழைவுத் தேர்வுக்குத் தயாராகும்படி அறிவுறுத்தினோம். அதில் 15 பேர் நீட் தேர்வுக்குத் தயாராகினர். 11 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் 10 பேர் மருத்துவக் கலந்தாய்வில் கலந்துகொண்டு, 9 பேர் மருத்துவ இடங்களை உறுதி செய்துள்ளனர். இதன்மூலம் வருங்காலத்தில் இன்னும் அதிக மாணவிகள் மருத்துவப் படிப்பைத் தேர்வு செய்வர் என்று நம்புகிறோம்'' என்று தலைமை ஆசிரியர் மரிய மெர்லின் தெரிவித்தார்.


புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள்7 பேர் நேற்று (ஜன.28) நடைபெற்ற மருத்துவக் கலந்தாய்வில் கலந்துகொண்டு மருத்துவப் படிப்பிற்குத் தேர்வாகினர். அதேபோல திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து ஒரே அரசுப் பள்ளியில் 6 மாணவிகளுக்கு மருத்துவ இடம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.