7.5% Reservation: 7.5 சதவீத ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது என மருத்துவ கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. 


7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் 606 மாணவர்கள்:


தமிழ்நாட்டில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள், கே.கே. நகர் இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி, 21 சுயநிதி மருத்துவக் கல்லூரிகள், 13 நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் என 71 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்த 71 மருத்துவக் கல்லூரிகளிலும் எம்பிபிஎஸ் படிப்பிற்கு 11475 இடங்களும், பிடிஎஸ் படிப்பிற்கு 2150 இடங்களும் உள்ளன.


அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 6326 எம்பிபிஎஸ் இடங்களும், அரசு பல் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் 1768 பிடிஎஸ் இடங்களும் உள்ளன. 7.5 சதவீதத்திற்கான உள் ஒதுக்கீட்டிற்கான அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் சுயநிதி மருத்துவ கல்லுரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டின் கீழ் 473 எம்பிபிஎஸ் இடங்களும், பிடிஎஸ் படிப்பிற்கு 133 இடங்களும் உள்ளன. மொத்தமாக நடப்பாண்டில் 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் 606 மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர உள்ளனர்.


செப்டம்பர் 1ஆம் தேதி முதல் வகுப்புகள்:


இந்த ஆண்டு, மொத்தம் 40,200 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் 7.5 சதவீதம் அரசு பள்ளி மாணவர்களின் உள் ஒதுக்கீட்டிற்கு 3042 விண்ணப்பங்களும், விளையாட்டு பிரிவிற்கு 179 விண்ணப்பங்களும், முன்னாள் படைவீரர் பிரிவு ஒதுக்கீட்டிற்கு 401 விண்ணப்பங்களும் மற்றும் மாற்றுதிறனாளிகள் ஒதுக்கீட்டு பிரிவிற்கு 98 விண்ணப்பங்களும் பெறப்பட்டன. 


தொடர்ந்து கலந்தாய்வு நடைபெற்று நிலையில் முதல்கட்டக் கலந்தாய்வு ஜூலை 28ஆம் தேதி முடிவடைந்தது. மாணவர்கள் ஆகஸ்ட் 4ஆம் தேதிக்குள் கல்லூரியில் சேர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 4 கட்டக் கலந்தய்வுக்குப் பிறகு, செப்டம்பர் 1ஆம் தேதி வகுப்புகள் தொடங்க உள்ளன. எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு செப்டம்பர் 1ஆம் தேதியில் வகுப்புகளைத் தொடங்க வேண்டும் என்றும் மருத்துவ ஆணையம் அறிவுறுத்தியிருந்தது. 


மருத்துவ கல்வி இயக்குநரகம் ஆணை:


இந்நிலையில், 7.5 சதவீத ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது என மருத்துவ கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து வெளியட்டுள்ள செய்திகுறிப்பில், ”தமிழக அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில், அரசு பள்ளி மாணவர்கள் சேரும் வகையில், 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. மருத்துவ கல்லுாரிகளில் 7.5 சதவீத ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., படிப்பில் சேரும் மாணவர்களிடையே, கல்வி கட்டணம், புத்தகம், உணவு, விடுதி உட்பட எவ்வித கட்டணத்தையும் வசூலிக்கக்கூடாது.


இந்த ஒதுக்கீட்டில் படிக்கும் மாணவியர், ‘புதுமை பெண் திட்டம்’ நிதியுதவி உட்பட அனைத்து வித கல்வி உதவித் தொகை பெறுவதற்கும் தகுதி உடையவர்கள். அரசு பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவ படிப்பில் சில இடர்பாடுகள் இருப்பதால், கல்வி நிறுவனங்கள் கூடுதல் கவனம் செலுத்தி, அவர்களின் கற்கும் திறனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என  மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனர் சாந்திமலர், அனைத்து மருத்துவ கல்லுாரிகளுக்கும்  சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.