ஐடி துறையில் கெத்து காட்டும் ஹைதராபாத்:
பெங்களூருக்கு அடித்தபடியாக நாட்டின் தகவல் தொழில்நுட்பத்துறை தலைநகராக திகழ்வது ஹைதராபாத். தெலங்கானா தலைநகரான ஹைதராபாத் ரியல் எஸ்டேட் டெவலப்பர்களின் கவனத்தை தொடர்ந்து ஈர்த்து வருகிறது.
இந்த நிலையில், ஹைதராபாத் கோகபேட்டில் உள்ள 45 ஏக்கர் நிலங்களை ஏலத்தில் விட்டு 3,300 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது ஹைதராபாத் பெருநகர வளர்ச்சி ஆணையம். உலகின் தலைசிறந்த பன்னாட்டு நிறுவனங்கள், கோகபேட்டுக்கு அருகில் உள்ள பகுதிகளில்தான் அமைந்துள்ளது.
போட்டி போட்டு கொண்ட மனையை ஏலத்தில் கேட்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்கள்:
கோகபேட்டில் உள்ள ஒரு நிலத்தை ஏலதாரர் ஒருவர், ஏக்கருக்கு 100 கோடி ரூபாய் ஏலம் கேட்ட சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. சராசரியாக ஒரு ஏக்கர் நிலம் 73 கோடி ரூபாய்க்கு ஏலம் கேட்கப்பட்டுள்ளது.
எம்எஸ்என் ஃபர்மேச்சம் பிரைவேட் லிமிடெட், நவராத்திரி இன்வெஸ்ட்மென்ட்ஸ், ராஜபுஷ்பா பிராபர்ட்டிஸ், பிரிகேட் எண்டர்பிரைசஸ், டி ப்ளூவோக், பி மங்கத்ரம், பிராபர்ட்டிஸ் எல்எல்பி, ஹேப்பி ஹைட்ஸ் நியோபோலிஸ் உள்ளிட்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் போட்டி போட்டி கொண்டு நிலங்களை ஏலத்தில் எடுத்தன.
ஹைதராபாத் நகரின் வளர்ச்சியை பிரதிபலிக்கும் ஏல தொகை:
கோகபேட் நியோபோலிஸில் உள்ள மனைகளை ஹைதராபாத் மாநகராட்சி இணைய ஏலத்தில் விட்டு வருவாய் ஈட்டியுள்ளது. ஏழு மனைகள், மொத்தமாக 1,586.50 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளது. இணைய ஏலத்தின் போது கேட்கப்பட்ட மனையின் ஏல தொகை ஹைதராபாத் நகரின் வளர்ச்சியை பிரதிபலிப்பதாக தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "இவ்வளவு பெரிய விலைக்கு நிலங்களை வாங்குவது பொருளாதாரக் கண்ணோட்டத்தில் மட்டுமல்ல, தெலங்கானாவின் வளர்ச்சியின் கண்ணோட்டத்திலும் பார்க்கப்பட வேண்டும்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "ஆந்திராவை இரண்டு மாநிலமாக பிரித்தால் ஹைதராபாத் நகரம் அதன் பொலிவை இழக்கும். நிலத்தின் விலை குறையும் என கூறி நகரின் இமேஜை சிலர் கேவலப்படுத்த முயன்றனர். ஹைதராபாத்தை ஒரு காஸ்மோபாலிட்டன் நகரமாக மேம்படுத்துவதில் மாநில அரசின் முயற்சிகள் வெற்றி பெற்றன" என்றார்.
தெலங்கானாவில் தற்போது பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 2014ஆம் ஆண்டு, ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் இருந்து பிரித்து, உருவாக்கப்பட்ட தெலங்கானா மாநிலம், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் முனைப்பு காட்டி வருகிறது. இந்தாண்டின் இறுதியில், அங்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு முக்கிய அரசியல் மாற்றம் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.