வெற்றி என்பது நாம் இருக்கும் இடத்திலேயே இருந்து கொள்வதால் நம்மை தேடி வருவது அல்ல, அதற்கான முழு முயற்சியோடு நாம் அதனை தேடி சென்று சாதிப்பது ஆகும், அப்படி சாதித்து காட்டி உள்ளனர் நெல்லையை சேர்ந்த 7 அரசு பள்ளி மாணவிகள். அப்படி அவர்கள் சாதித்ததுதான் என்ன என்று கேட்கிறீர்களா? அவர்கள் கடின உழைப்பால் பல ஆண்டு கண்ட கனவான மருத்துவ கனவு நிறைவேறியதுதான்.
நெல்லை மாவட்டம் டவுண் அருகே உள்ளது கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, இங்கு சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர், குறிப்பாக நெல்லை மாநகரில் மட்டுமின்றி மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களிலும் இருந்து வந்தும் ஏழை எளிய பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தை சேர்ந்த பெண்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி மாணவிகளுக்கு தனியாக நீட் தேர்விற்கான வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது. மருத்துவ கனவோடு நீட் தேர்விற்கு மாணவிகளும் தங்களை தயார்படுத்தி வருகின்றனர். இந்த சூழலில் தான் இந்தாண்டு நீட் தேர்வில் இந்த பள்ளியை சேர்ந்த 7 மாணவிகள் தேர்வாகி உள்ளனர். அரசு பள்ளி மாணவர்களுக்காக ஒதுக்கி உள்ள 7.5% இட ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பிற்கு தேர்வாகி உள்ளனர்.
குறிப்பாக ஞாழினி, இசக்கியம்மாள், நட்சத்திர பிரியா ஆகிய 3 பேரும் திருநெல்வேலி அரசு மருத்துக்கல்லூரிக்கும், காயத்ரி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரிக்கும், சௌந்தர்யா கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரிக்கும், கிருத்திகா கோவையிலுள்ள மருத்துவக் கல்லூரிக்கும், அஃப்ரின் ஃபாத்திமா கோவை தனியார் பல் மருத்துவக் கல்லூரிக்கு தேர்வாகியுள்ளனர்..
இவர்களுக்கு பலர் நேரடியாகும் சமூக வலைதளங்கள் மூலமாகமும் பாராட்டுகளை தெரிவித்து வரும் நிலையில் பள்ளி நிர்வாகமும் இவர்களை பாராட்டுவதற்கான விழா ஒன்றை எடுத்தது, அதில் வெற்றி பெற்ற மாணவிகளை பாராட்டி கவுரப்படுத்தும் விதமாக அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து பரிசுகள், இனிப்புகள் வழங்கி கவுரவப்படுத்தினர். மேலும் இந்த விழாவில் கலந்துகொண்ட மற்ற மாணவிகளை ஊக்கப்படுத்தும் விதமாக அரசு பல்வேறு திட்டங்களை அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்கியுள்ளது.
குறிப்பாக அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு அறிவித்து உள்ளதை அனைவரும் பயன்படுத்தி சாதித்து காட்ட வேண்டும், கடின உழைப்பால் சாதித்த 7 பேரையும் முன்னுதாரணமாக கொண்டு வாய்ப்புகளை நல்ல முறையில் பயன்படுத்தி பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும, பள்ளிக்கும் பெருமையை தேடி தர வேண்டும் என ஊக்கப்படுத்தினர்.
அதே போல வெற்றி பெற்ற மாணவிகள் கூறும்பொழுது, ”பலர் அரசுப்பள்ளியில் படித்துவிட்டு மருத்துவராக முடியாது என்ற நெகட்டிவான வார்த்தைகளை மட்டுமே உதிர்த்தனர். ஆனால் எங்களின் கடின உழைப்பும் ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் எங்களை வெற்றி பெற செய்து உள்ளது. அதே போல மாவட்டம் முழுவதும் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் பயிலும் நீட் பயிற்சிக்கான வாட்ஸ்-அப் குழுவை உருவாக்கி அதன் மூலம் படிப்பதற்கான முயற்சியையும் ஆட்சியர் விஷ்ணு ஏற்படுத்தி கொடுத்தார். மற்ற மாவட்டங்களில் இல்லாத ஒரு ஏற்பாட்டை ஆட்சியர் எங்களுக்காக உருவாக்கி கொடுத்தார்.
இப்படி நெகட்டிவான வார்த்தைகளை உதிர்க்கும் ஒரு சிலருக்கு மத்தியில் பலரின் ஆதரவு எங்களின் தன்னம்பிக்கையை மேலும் எங்களை ஊக்கப்படுத்தி முன்னேற செய்தது, இதே போல எங்களை தொடர்ந்து வரும் மாணவிகளும், வறுமை, நெகட்டிவான எண்ணங்களை உதறி தள்ளிவிட்டு முன்னேறி செல்வதற்கான பாதையை மட்டுமே தேடினால் அனைவருக்கும் வெற்றி நிச்சயம் சாத்தியமே” என்கின்றனர்.
தொடர்ந்து நிகழ்ச்சியின் இறுதியாக வெற்றி பெற்ற மாணவிகள் தங்களின் அனுபவங்களையும், எவ்வாறு படித்தால் சாதிக்கலாம், எப்படி தேர்வு செய்து படிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கருத்துகளையும் மற்ற மாணவிகளுக்கு எடுத்துரைத்து அவர்களையும் ஊக்கப்படுத்தினர். கடின உழைப்பும், விடாமுயற்சியுமே நம் வாழ்வின் அடுத்த கட்ட இலக்கை நோக்கி நகர்த்தும் என்பதற்கு இந்த அரசு பள்ளி மாணவர்களே உதாரணம் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை..