பிளஸ் 2 தேர்வில் 50 ஆயிரம் பேர் ஆப்சென்ட் ஆன விவகாரத்தில் சட்டப்பேரவையில் அதிமுக கொண்டுவந்த சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்துக்கு புள்ளிவிவரங்களுடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார். 


சட்டப்பேரவையில் அவர் கூறியதாவது:


கொரோனா காலத்துக்குப் பிறகு கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. 2020-21ஆம் ஆண்டில் 10ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் கொரோனா தொற்று மற்றும் பொது முடக்கம் காரணமாக ஆல்-பாஸ் என்று அறிவிக்கப்பட்டார்கள். இவர்கள்தான் தற்போது 12ஆம் வகுப்பு தேர்வை எழுதி வருகிறார்கள்.


2021- 22ஆம் ஆண்டில் 11ஆம் வகுப்பு தேர்வை எழுத 8,85,051 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 41,366 மாணவர்கள் வருகை பெறவில்லை. 83,811 மாணவர்கள்‌ தேர்ச்சி பெறவில்லை. 7,59,874 மாணவர்கள்‌ தேர்ச்சி பெற்றனர்‌. தேர்ச்சி பெறாதவர்களம்‌,வருகை புரியாதவர்களும்‌ 1,25,177 மாணவர்கள்‌ என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுள்‌, 11 ஆம்‌ வகுப்பைச்‌ சேர்ந்த சுமார்‌ 18,000 மாணவர்கள்‌ முந்தைய ஆண்டு பள்ளி செல்லாக்‌ குழந்தைகளுக்கான சிறப்புப்‌ பயிற்சி முன்னெடுப்புகள்மூலம்‌ பல்வேறு வகுப்புகளுக்கு மீண்டும்‌
சேர்க்கப்பட்ட 1,90,000 மாணவர்களில்‌ உள்ளடங்குவார்கள்‌


இங்கே பேசுகின்ற உறுப்பினர்கள்‌ பலர்‌ பல செய்திகளில்‌, பல தலையங்கங்களில்‌ சொல்லலாம்‌, ஏறத்தாழ 1,90,000 இடைநிற்றல்‌ மாணவர்களை பள்ளியில்‌ சேர்த்தீர்களே; என்ன ஆயிற்று? அவர்கள்‌ என்னவானார்கள்‌ என்று. அதற்கான விளக்கமாக, அதுபோன்று சேர்த்த சுமார்‌ 1,25,000 மாணவர்களில்‌ 78,000 மாணவர்களை நாங்கள்‌ இன்றைக்குத்‌ தேர்வு எழுத வைத்திருக்கிறோம்‌. இதை அப்படியே விட்டுவிட்டிருந்தோம்‌ என்றால்‌ அந்த 1,90,000
மாணவர்களும்‌ இன்றைக்குப்‌ பள்ளிக்கே வராமல்‌ போயிருப்பார்கள்.


11 ஆம்‌ வகுப்பு பொதுத்‌ தேர்வில்‌ தேர்ச்சி பெறாதவர்கள்‌ மற்றும்‌ தேர்விற்கு வராத 1,25,177 மாணவர்கள்‌, 2022-2023 ஆம்‌ கல்வியாண்டில்‌ 12 ஆம்‌ வகுப்பு பொதுத்‌ தேர்விற்கு பதிவு செய்த 8,36,593-ல்‌ உள்ளடங்குவார்கள்‌. 2022-2023 ஆம்‌ கல்வியாண்டில்‌ 12 ஆம்‌ வகுப்பு பொதுத்‌ தேர்விற்கு பதிவு செய்த மாணவர்கள்‌ 8,36,593. அதில்‌ மொழிப்பாடத்‌ தேர்விற்கு வருகை புரியாதவர்கள்‌ 47,943. அரசு பள்ளிகளிலிருந்து 38,015 மாணவர்கள்‌,அரசு உதவி பெறும்‌ பள்ளிகளிலிருந்து 8,848 மாணவர்கள்‌, தனியார்‌ பள்ளிகளிலிருந்து 1,060 மாணவர்கள்‌ ஆகும்‌. 


அம்மாணவர்கள்‌ இந்த கல்வியாண்டில்‌ பொதுத்‌ தேர்வு எழுதுவதற்கு வருகைப்‌ பதிவேட்டில்‌ எவ்விதமான வரன்முறைகளும்‌ கடைப்பிடிக்காமல்‌ வாய்ப்பளிக்கப்பட்டது. மேலும்‌, பள்ளிக்‌ கல்வியில்‌ 2017-2018 முதல்‌ 11 மற்றும்‌ 12 ஆம்‌ வகுப்பு மாணவர்களின்‌ கற்றல்‌ தொடர்ச்சியினை உறுதி செய்ய மேல்நிலைக்‌ கல்வி ஒரே தொகுதியாகக்‌ கருதப்படுகிறது. 11 ஆம்‌ வகுப்பில்‌ பொதுத்‌ தேர்விற்காக பதிவு செய்த மாணவர்கள்‌ அனைவரும்‌ 12 ஆம்‌ வகுப்பு பொதுத்‌ தேர்விற்கு தகுதியானவர்களாகக்‌ கருதப்படுகிறது. ஆனால்‌ 11 ஆம்‌ வகுப்பு மற்றும்‌ 12 ஆம்‌ வகுப்பு பொதுத்‌ தேர்விற்கான இறுதிப்‌ பெயர்‌ பட்டியல்‌ தயாரிக்கும்முன்‌, மாணவர்களின்‌ விவரங்களில்‌ மாற்றம்‌ அல்லது திருத்தம்‌ செய்ய, சார்ந்த பள்ளித்‌ தலைமை ஆசிரியர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
மேலும்‌, மாற்றுச்‌ சான்றிதழ்‌ பெற்ற மாணவர்களை நீக்கம்‌ செய்து, பொதுத்‌ தேர்விற்கான இறுதிப் பட்டியல் தயார் செய்யப்படுகிறது.


இவர்களுக்கெல்லாம் ஒருமுறை சிறப்பு நிகழ்வாக வருகைப் பதிவேட்டைத் தகுதியாகக் கொள்ளாமல், தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டது. 


அரசு என்ன செய்யும்?


* பொதுத்‌ தேர்வு எழுதாத மாணவர்களின்‌ பட்டியல் பள்ளி மேலாண்மைக்‌ குழு உறுப்பினர்களுடன்‌ பகிரப்படும்‌. பள்ளி மேலாண்மைக்‌ குழு உறுப்பினர்கள்‌ பட்டியலில்‌ உள்ள மாணவர்களைக்‌ கண்டறிந்து அவர்களுக்கும்‌, அவர்களின்‌ பெற்றோர்களுக்கும்‌ ஜூலை மாதம்‌ நடைபெறவுள்ள துணைத்‌ தேர்விற்கான ஆலோசனைகள்‌ வழங்கப்படும்‌.


* பொதுத்‌ தேர்வு எழுதாத மாணவர்களைக்‌ கண்டறிந்து தேர்வு எழுத வைக்கும்‌ செயல்பாட்டில்‌ கூடுதல்‌ உதவிகள்‌ தேவைப்படின்‌, சார்ந்த மாவட்ட ஆட்சியரின்‌ ஒத்துழைப்போடு பிற துறைகளின்‌ பங்களிப்பும்‌ பெறப்படும்‌.


* துணைத்‌ தேர்வு குறித்து மாணவர்களின்‌, பெற்றோர்களின்‌ சந்தேகங்கள்‌ மற்றும் ஆலோசனைகளைப்‌ பெற்றுக்கொள்ள 14417 இலவச உதவி மைய எண்ணை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்‌.


* ஒவ்வொரு பள்ளியிலும்‌ தலைமையாசிரியர்கள்‌, ஆசிரியர்கள்‌, வட்டார வளமை ஆசிரியர்‌ பயிற்றுநர்கள்‌ மற்றும்‌ பள்ளி மேலாண்மைக்‌ குழு உறுப்பினர்கள்‌ வாயிலாக மாணவர்கள்‌ மற்றும்‌ பெற்றோர்களுக்கு துணைத்‌ தேர்வின்‌ முக்கியத்துவம்‌ சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்‌.


* துணைத்‌ தேர்வு எழுதுவதற்கான, முன்தயாரிப்பிற்கும்‌, உயர்கல்வி பயில்வதற்கான ஆலோசனைகள்‌ வழங்குவதற்கும்‌ பள்ளி அளவில்‌ சிறப்பு பயிற்சி மையம்‌ ஏற்படுத்தப்பட்டு பாட ஆசிரியர்கள் மூலம்‌ பயிற்சிகள்‌ மற்றும்‌ ஆலோசனைகள்‌ வழங்கப்படுவதில்‌ பள்ளி மேலாண்மைக்‌ குழு ஒத்துழைப்பினை வழங்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.


* வரும்‌ கல்வியாண்டில்‌ நீண்ட நாட்கள்‌ பள்ளிக்கு வராத மாணவர்களை இடைநிற்றலுக்கு வாய்ப்புள்ளதாக கருதி அதனைக்‌ கண்டறிந்து மாணவர்கள்‌ தொடர்ந்து பள்ளிக்கு வருகை புரிய நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்படும்‌.


இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார்.