தமிழ்நாடு முழுவதும் 5 நாட்கள் பொங்கல் விடுமுறை முடிந்து நாளை (ஜனவரி 17) பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. 


தமிழ்நாடு முழுவதும் காணும் பொங்கல் பண்டிகை இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் விழாவின் மூன்றாவது நாள் காணும் பொங்கல் என்றழைக்கப்படுகிறது. கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பண்டிகை என்றும் இந்த நாள் அழைக்கப்படுகிறது. 


மார்கழி கடைசி நாள் போகிப் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், தை 1ஆம் தேதி வீட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்டது. இரண்டாம் நாளான நேற்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்டது. சனி, ஞாயிறு கிழமைகளுக்குப் பிறகு திங்கள் அன்று பொங்கல்  பண்டிகை வந்ததால், பள்ளி  மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் 5 நாட்களுக்குப் பிறகு நாளை (ஜன.17) தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. 


வட மாவட்டங்களையும் தென் மாவட்டங்களையும் புரட்டிப் போட்ட மழை, வெள்ளம்


முன்னதாக கடந்த டிசம்பர் மாதம் வட மாவட்டங்களையும் தென் மாவட்டங்களையும் புயலும் மழை, வெள்ளமும் புரட்டிப் போட்டது. டிசம்பர் முதல் வாரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. 


ஒரு வாரம் கழித்து வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்கள் கடும் சேதத்துக்கு ஆளாகின. இதனால் இந்த மாவட்ட மாணவர்கள் கற்றல் இழப்புக்கு ஆளாகினர். அரையாண்டுத் தேர்வும் ஒத்தி வைக்கப்பட்டது. ஒரு வாரத்துக்கும் மேலாக, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், மீண்டும் இயல்பு நிலை திரும்பிய பிறகு கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகள் தொடர்ந்தன. 


தேர்வு எப்போது?


10ஆம் வகுப்புக்கு பிப்ரவரி 23 முதல் 29ஆம் தேதி வரை செய்முறைத் தேர்வுகள் நடைபெற உள்ளன. இவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 26ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.


மார்ச் 1 முதல் 22ஆம் தேதி வரை 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளன. மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, முன்கூட்டியே தேர்வு நடைபெற உள்ளது. 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 4 முதல் 25ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.


தேர்வு முடிவுகள் எப்போது?


12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் மே 6ஆம் தேதி வெளியாக உள்ளன. அதேபோல மே 10ஆம் தேதி 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். 


இந்த நிலையில் 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கும் ஆண்டுத் தேர்வுக்கும் மாணவர்கள் தீவிரமாகத் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.