ராதாபுரம்‌ தொகுதியில்‌ உள்ள அனைத்து அரசு மற்றும்‌ அரசு உதவி பெறும்‌ பள்ளிகளில்‌ ரூ.6.86 கோடி செலவில்‌ அமைக்கப்பட்டுள்ள 303 திறன்‌ வகுப்பறைகளை திறந்து வைத்து, கருணை அடிப்படையில்‌ 61 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌‌ வழங்கினார்‌.


இதுகுறித்துத் தமிழக அரசு தெரிவித்து உள்ளதாவது:


’’ தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ அவர்கள்‌ இன்று (31.7.2023) தலைமைச்‌ செயலகத்தில்‌, பள்ளிக்கல்வித்‌ துறை சார்பில்‌ திருநெல்வேலி மாவட்டம்‌, இராதாபுரம்‌ தொகுதியில்‌ உள்ள அரசு மற்றும்‌ அரசு உதவி பெறும்‌ பள்ளிகளில்‌ 6.60 கோடி செலவில்‌ அமைக்கப்பட்டுள்ள 303 திறன்‌ வகுப்பறைகளை காணொலிக்‌ காட்சி வாயிலாக திறந்து வைத்தார்‌. மேலும்‌, பள்ளிக்‌ கல்வித்‌ துறையில்‌ பணிபுரிந்து பணிக்காலத்தில்‌ உயிரிழந்த 61 பணியாளர்களின்‌ வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில்‌ பணிநியமன ஆணைகளை வழங்கிடும்‌ அடையாளமாக 4 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்‌.


அரசுப்‌ பள்ளிகளில்‌ பயிலும்‌ மாணவர்களின்‌ நலனிற்காக பள்ளிகளில்‌ இணைய வசதிகளை, 1 முதல்‌ 5ஆம்‌ வகுப்பு வரை பயிலும்‌ அரசுப்‌ பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும்‌ முதலமைச்சரின்‌ காலை உணவுத் திட்டம்‌, மாணவர்களின்‌ கற்றல்‌ திறனை அதிகரித்து, தமிழகத்தின்‌ கல்வித்‌ தரத்தினை உயர்த்திட இல்லம்‌ தேடி கலவி, நம்‌ பள்ளி நம்‌ பெருமை, எண்ணும் எழுத்தும்‌, நம்ம ஸ்கூல்‌ பவுண்டேசன்‌, பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு போன்ற சிறப்பு திட்டங்கள்‌, பள்ளிகளின்‌ வகுப்பறைக்‌ கட்டடங்கள்‌, குடிநீர்‌ வசதி, கழிவறைகள்‌, மின்சாதன வசதிகள்‌ போன்ற அடிப்படைக்‌ கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல்‌, திறன்‌ வகுப்பறைகள்‌ அமைத்தல்‌, காலியாகவுள்ள ஆசிரியர்‌ பணியிடங்களை நிரப்புதல்‌ போன்ற பல்வேறு திட்டங்களை அரசு சீரிய முறையில்‌ செயல்படுத்தி வருகிறது.


தற்போதைய தொழில்நுட்ப உலகிற்கு ஏற்ற வகையில்‌ மாணவர்களைத்‌ தயார்படுத்துதல அவசியம்‌ ஆகும்‌. தொழில்நுட்ப உள்கட்டமைப்பை வழங்குவதன்‌ முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்துள்ள தமிழ்நாடு அரசு, மாணவர்களுக்கு பொருத்தமான கற்றல்‌ சூழலை உருவாக்குவதற்கு அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும்‌ மேல்நிலைப்‌ பள்ளிகளில்‌ உயர்‌ தொழிலநுட்ப ஆய்வகங்களை நிறுவவும்‌, அனைத்து அரசுப்‌ பள்ளிகளில்‌ திறன்மிகு வகுப்பறைகளை அமைக்கவும்‌ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.


20 ஆயிரம் ஸ்மார்ட் வகுப்பறைகள்


தமிழ்நாடு அரசின்‌ வரவு செலவு திட்ட அறிக்கைகளில்‌ 20,000 திறன்‌ வகுப்பறைகள்‌ 400 கோடி செலவில்‌ அமைக்கப்படும்‌ என்ற அறிவிப்பின்படி, அனைத்து அரசு மேல்நிலை, உயர்நிலை மற்றும்‌ நடுநிலைப்‌ பள்ளிகளில்‌ திறன்‌ வகுப்பறைகள்‌ அமைக்கப்பட்டு வருகின்றது.


அந்த வகையில்‌, சட்டப்பேரவைத்‌ தலைவர்‌ அப்பாவு தொகுதியான இராதாபுரம்‌ தொகுதியில்‌, சட்டமன்ற உறுப்பினர்‌ மேம்பாட்டு நிதி மற்றும்‌ பிற நிதியிலிருந்து 6 கோடியே 66 இலட்சம்‌ ரூபாய்‌ செலவில்‌ அரசு மற்றும்‌ அரசு உதவி பெறும்‌ மேல்நிலை, உயர்நிலை மற்றும்‌ நடுநிலைப்‌ பள்ளிகளில்‌ அமைக்கப்பட்டுள்ள 303 திறன்‌ வகுப்பறைகளை தமிழ்நாடு முதலமைச்சர்‌‌ இன்று காணொலிக்‌ காட்சி வாயிலாக திறந்து வைத்தார்‌.


திறன்‌ வகுப்பறை அமைக்கப்பட்டுள்ள அனைத்து பள்ளிகளிலும்‌, வெப்‌ கேமரா வசதியும்‌, தடையில்லா மின்சாரம்‌ வழங்குவதற்கான யூபிஎஸ் வசதியும்‌ ஏற்படுத்தித்‌ தரப்பட்டுள்ளது. மேலும்‌, இந்த வகுப்பறைகள்‌ அனைத்தும்‌ கம்ப்யூட்டர்‌ சர்வர்‌ மூலமாக மாவட்டக்‌ கல்வி அலுவலகங்களுடன்‌ இணைக்கப்பட்டுள்ளன. 


இதன்மூலம்‌, ஒரு இடத்தில்‌ இருந்து கல்வி வல்லுநர்கள்‌, பயிற்சி வகுப்புகளை நடத்தினால்‌ திறன்‌ வகுப்பறைகள்‌ அமைக்கப்பட்டுள்ள அனைத்து பள்ளிகளின்‌ மாணவ, மாணவியர்களும்‌ கற்க இயலும்‌.


கருணை அடிப்படையில்‌ பணிநியமன ஆணைகள்‌ வழங்குதல்‌


பள்ளிக்கல்வித்‌ துறையில்‌ பணிபுரிந்து பணிக்காலத்தில்‌ உயிரிழந்த 61 பணியாளர்களின்‌ வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில்‌ இளநிலை உதவியாளர்‌ பணியிடங்களுக்கு பணிநியன  ஆணைகளை வழங்கிடும்‌ அடையாளமாக தமிழ்நாடு முதலமைச்சர்‌‌ 4 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்‌.