தொடரும் அவலம்:


கையால் மலம் அள்ளும் முறை தடை செய்யப்பட்டுள்ள போதிலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் இதில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இந்த தொழிலில் ஈடுபடுபடுபவர்கள், முறையான கருவிகளுடன் சாக்கடையில் இறங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டாலும், இது தொடர்பான விதிகள் முறையாக அமல்படுத்துவதில்லை என குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.


தற்போது, நாடு தழுவிய அளவில் சாக்கடைகள் மற்றும் கழிவுநீர் தொட்டிகளை அபாயகரமான முறையில் சுத்தம் செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ள அனைவரையும் மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் (MoSJ&E) கணக்கெடுத்துள்ளது. அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செயலியான ஸ்வச்சதா அபியானில் இது தொடர்பான தரவுகள் வெளியிடுப்பட்டுள்ளது.


அதன்படி, நாடு முழுவதும் கையால் மலம் அள்ளும் முறையில் 6,253 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தரவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
ஆனால், இந்த எண்ணிக்கை உண்மையானதா என்பதை அமைச்சகம் இன்னும் உறுதி செய்யவில்லை. 


கையால் மலம் அள்ளும் முறை தமிழ்நாட்டில் நடைமுறையில் இருக்கிறதா?


இதுதொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த அறிக்கையில், "நாட்டில் எத்தனை சுகாதாரமற்ற கழிப்பறைகள் இருக்கிறது? அதில், கையால் மலம் அள்ளும் முறையில் எத்தனை பேர் ஈடுபடுத்தப்படுகிறார்கள் போன்ற தரவுகளை சேகரிப்பதற்காக கடந்த 2020ஆம் ஆண்டு, டிசம்பர் 24ஆம் தேதி, ஸ்வச்சதா அபியான் செயலி அறிமுகம் செய்யப்பட்டது.


சுகாதாரமற்ற கழிவறைகள் மற்றும் கையால் மலம் அள்ளுபவர்களின் தரவை யார் வேண்டுமானாலும் பதிவேற்றலாம். அதன்பிறகு, சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகத்தால் தரவுகள் சரிபார்க்கப்படும். சேகரிக்கப்பட்ட தரவுகளின்படி, கையால் மலம் அள்ளும் முறையில் ஈடுபடுத்தப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,253 ஆக உள்ளது.


இந்தத் தரவின் நம்பகத்தன்மையை சரிபார்க்க அமைச்சகத்தின் திட்ட கண்காணிப்பு பிரிவு (PMU) குழுவால் நேரடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆனால், ஒரு சுகாதாரமற்ற கழிப்பறை கூட ஆய்வில் உறுதி செய்யப்படவில்லை. போர்ட்டலில் பதிவேற்றப்பட்ட புகைப்படங்கள், மற்ற விவரங்களையே சுட்டி காட்டுகின்றன. ஆனால், சுகாதாரமற்ற கழிவறை இருப்பதாகவோ கையால் மலம் அள்ளும் முறை நடைமுறையில் இருப்பது தொடர்பாக பதிவேற்றப்படவில்லை.


அமைச்சகத்தின் மத்திய கண்காணிப்புக் குழுவின் எட்டாவது கூட்டத்தில், "மொபைல் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்ட பெரும்பாலான தரவுகள் தேசிய திட்ட கண்காணிப்பு பிரிவால் சரிபார்க்கப்பட்டதாகவும், அவற்றில் எதுவுமே சரியானவையாக இல்லை என்று கண்டறியப்பட்டது. எந்த மாவட்டமும் போர்ட்டலில் பதிவேற்றிய தரவை உறுதிப்படுத்தவோ அல்லது நிராகரிக்கவோ இல்லை.


நாட்டிலுள்ள 766 மாவட்டங்களில் 551 மாவட்டங்கள், கையால் மலம் அள்ளும் முறை நடைமுறையில் இல்லை என்று அறிவித்துள்ளன. மீதமுள்ள 215 மாவட்டங்களில் இருந்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வெளியாகவில்லை. கையால் மலம் அள்ளும் முறை தங்கள் மாநிலத்தில் நடைமுறையில் இல்லை என தமிழ்நாடு, பீகார், சத்தீஸ்கர், புதுச்சேரி, ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம், சிக்கிம், லடாக், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்கள் அறிவித்துள்ளன" என குறிப்பிடப்பட்டுள்ளது.