3 ஆண்டு கால எல்எல்பி சட்டப் படிப்புகளில் சேர விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்து, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின்கீழ் (Tamil Nadu Dr. Ambedkar Law University) அரசு, தனியார் சட்டக் கல்லூரிகள், சீர்மிகு சட்டப் பள்ளிகள் ஆகியவை இயங்கி வருகின்றன. பல்கலைக்கழகத்தில், பி.ஏ. எல்எல்பி ஹானர்ஸ், பிபிஏ எல்எல்பி ஹானர்ஸ், பி.காம். எல்எல்பி ஹானர்ஸ், பி.சி.ஏ. எல்எல்பி ஹானர்ஸ் ஆகிய 4 படிப்புகளும் வழங்கப்படுகின்றன. 3 ஆண்டு எல்எல்பி சட்டப் படிப்புகளுக்கு மொத்தம் 2,290 இடங்கள் உள்ளன. இந்த இடங்கள் அனைத்தும் இணையவழிக் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.
நடைபெறும் விண்ணப்பப் பதிவு
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் மற்றும் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தின்கீழ் செயல்பட்டு சட்டக் கல்லூரிகளில், ஏதாவதொரு இளநிலைப் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான மூன்று ஆண்டு கால அளவிலான இளநிலைச் சட்டப்படிப்பில் (L.L.B) 2023-2024 ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு அண்மையில் வெளியானது. இந்த நிலையில் 3 ஆண்டு எல்எல்பி சட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கி, நடைபெற்று வருகிறது.
குறிப்பாக தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்ற அனைத்து அரசு சட்டக் கல்லூரிகளிலும் மற்றும் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தின் சீர்மிகு சட்டப் பள்ளியிலும் பயிற்றுவிக்கப்படும் 3 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளுக்கு ஜூலை 17 முதல் மாணவர்கள் விண்ணப்பித்து வந்தனர். இதற்கு, 20.08.2023 வரை பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான tndalu.ac.in என்ற இணைய முகவரி வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அவகாசம் நீட்டிப்பு
இந்நிலையில் மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்து, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகப் பதிவாளர் (பொறுப்பு) ரஞ்சித் ஓமன் ஆபிரஹாம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
3 ஆண்டு எல்எல்பி ஹானர்ஸ் படிப்பு மற்றும் 3 ஆண்டு எல்எல்பி பட்டப் படிப்பு ஆகிய படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்கு மாணவர்கள் ஆகஸ்ட் 20ஆம் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இதற்கான விண்ணப்பப் பதிவு நீட்டிக்கப்படுவதாக, தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
2ஆவது முறையாக கால அவகாசம் நீட்டிப்பு
குறிப்பாக ஆன்லைன் வழியாக மாணவர்கள் ஆகஸ்ட் 31ஆம் தேதி மாலை 5.45 மணி வரை நீட்டிக்கப்படுவதாகத் தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகப் பதிவாளர் (பொறுப்பு) ரஞ்சித் ஓமன் ஆபிரஹாம் தெரிவித்துள்ளார். 3 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க 2ஆவது முறையாக கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த அறிவிப்பை மாணவர்கள் https://www.tndalu.ac.in/pdf/2023/aug/Admission_News.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.
கூடுதல் தகவல்களுக்கு: https://www.tndalu.ac.in/