Crime: காதலை ஏற்க மறுத்த 12 வயது சிறுமியை இளைஞர் ஒருவர் பலமுறை கத்தியால் குத்திக் கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


காதலை ஏற்க மறுத்த சிறுமி:


மும்பை அருகில் உள்ள கல்யாண் திஷ்காவ் என்ற பகுதியைச் சேர்ந்தவர்  ஆதித்ய காம்ப்ளே (20). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமியை ஒருதலைப்பட்சமாக காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்த சிறுமியை அவரது காதலை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் கடும் கோபத்தில் இருந்த ஆதித்ய காம்ப்ளே, சிறுமியை சிறிது நாட்களாகவே பின்தொடர்ந்துள்ளார். சிறுமி தினமும் மாலையில் டியூசன் செல்வது வழக்கமான ஒன்று. அவரை டியூசனில் கொண்டுபோய் விட்டுவிட்டு திரும்ப அழைத்து வருவது அவரின் தாயாரின் வழக்கமாக இருந்து வந்தது. இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி இளைஞர் ஆதித்ய காம்ப்ளே, சிறுமியை கொலை செய்ய திட்டமிட்டிருந்தார்.


அதன்படி, நேற்று இரவு அந்தச் சிறுமி டியூசன் முடிந்து தனது தாயாருடன் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்துக் கொண்டிருந்தது. அப்போது, வீட்டிற்கு வந்து அந்த சிறுமியின் தாயார் தனது இருசக்கர வாகனத்தை பார்க் செய்து சிறுமியை அழைத்துக் கொண்டு மாடி படிக்கட்டில் ஏற முயன்றார். மாடி படிக்கட்டுக்கு அடியில் ஒளிந்துக் கொண்டிருந்த இளைஞர் ஆதித்ய காம்ப்ளே சட்டென எழுந்து சிறுமியின் தாயாரை தள்ளிவிட்டு, சிறுமியை தன்னிடம் இருந்த கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார்.  


8 முறை கத்தியால் குத்திய கொடூரம்:


உடனே சிறுமியின் தாயார் எழுந்துவந்து தடுக்க வந்தார். அவரை மீண்டும் தள்ளிவிட்டு, 8 முறை சிறுமியை கத்தியால் குத்தியுள்ளார். பின்பு, சிறுமியின் தாயாரின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தபோது, கத்தியால் குத்திய பிறகு அந்த இளைஞர் தன்னிடம் இருந்த பினாயில் பாட்டிலை எடுத்து குடிக்க முயன்றார். ஆனால் அப்பகுதி மக்கள் தடுத்து நிறுத்தி, அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.  கத்திக் குத்தால் ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுமியை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.


 இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், இளைஞர் ஆதித்ய காம்ப்ளேவை கைது செய்துள்ளனர். பின்னர், சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று கத்தி உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றியுள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், "சிறுமி தினமும் எந்த நேரம் டியூசன் முடிந்து வீட்டிற்கு வருவார் என்பதை தெரிந்துக் கொண்டு அவரைத் தாக்க வேண்டும் என்று முன்கூட்டியே திட்டமிட்டு ஆதித்யா பக்கத்து கட்டடத்தில் காத்திருக்கிறார். சிறுதி தன் தாயாருடன் வந்தவுடன் அவரை தாக்கியுள்ளார்” என்று போலீசார் தெரிவித்தனர்