2022ஆம் ஆண்டுக்கான அகில இந்திய குடிமைப் பணிகள் தேர்வில் ஐஏஎஸ் அதிகாரிகளின் வாரிசுகளான சத்ரியா கவின், ஈஷானி ஆனந்த் மற்றும் அரவிந்த் ராதாகிருஷ்ணன் ஆகியோர் இந்திய அளவில் வெற்றி பெற்று, சிறப்பான இடங்களைப் பிடித்துள்ளனர்.


மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யூபிஎஸ்சி)  சார்பில் ஆண்டுதோறும் சிவில் சர்வீஸ் எனப்படும் குடிமைப் பணித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதன்மூலம் நாடு முழுவதும் குடிமைப் பணிகளுக்கான உயர் அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், குரூப் ஏ, குரூப் பி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்குத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வுகள் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என மொத்தம் 3 கட்டங்களாக நடைபெறுகின்றன. ஏதாவது ஓர் இளங்கலைப் பட்டம் முடித்திருக்கும் தேர்வர்கள், யூபிஎஸ்சி தேர்வை எழுதத் தகுதியானவர்கள் ஆவர்.


இந்த நிலையில், ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட பணிகளுக்கு நடத்தப்பட்ட 2022ஆம் ஆண்டு தேர்வுக்கான அகில இந்திய குடிமைப் பணிகளுக்கான இறுதி முடிவுகள் யூபிஎஸ்சியால் வெளியிடப்பட்டுள்ளன. இதில் தமிழ்நாட்டில் இருந்து 39 தேர்ச்சி பெற்றுள்ளனர். 


புலிக்குப் பிறந்தவை பூனையாகுமா?


யூபிஎஸ்சி தேர்வில் சத்ரியா கவின் (D.J. Chathriya Kavin) என்னும் தேர்வர் அகில இந்திய அளவில் 169 ஆவது இடத்தை பிடித்துள்ளார். சத்ரியா கவின், இந்திய ஆட்சிப் பணி அதிகாரியும் தமிழ்நாடு அரசு கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசுச் செயலாளருமான ஜகந்நாதனின் மகள் ஆவார்.


அதேபோல தேர்வர் ஈஷானி (Eshani) 291 ஆவது இடத்தை பிடித்துள்ளார். இவர், இந்திய ஆட்சிப் பணி அதிகாரியும் தமிழ்நாடு அரசுத் தொழிலாளர் ஆணையரக அரசு முதன்மைச்  செயலாளர் / ஆணையருமான அதுல் ஆனந்த்தின் மகள் ஆவார்.


இதைத் தொடர்ந்து மருத்துவ மாணவர் அரவிந்த் இராதாகிருஷ்ணன் (Arvind Radhakrishnan) 361ஆவது இடத்தை பிடித்துள்ளார். இவர், இந்திய ஆட்சிப் பணி அதிகாரியும் பெருநகர சென்னை மாநகராட்சி அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் / ஆணையாளருமான டாக்டர் ஜெ.இராதாகிருஷ்ணனின் மகன் ஆவார்.


தமிழ்நாட்டில் பணிபுரியும் 3 ஐஏஎஸ் அதிகாரிகளின் வாரிசுகள், தங்களின் தந்தைகளைப் போலவே இந்தியக் குடிமைப் பணித் துறையில் சாதித்துக் காட்டி, தங்களின் தந்தைகளுக்குப் பெருமை சேர்த்திருக்கின்றனர்.