அங்கன்வாடி மையங்களில் 1 முதல் 2 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஏற்கெனவே வாரம் ஒரு முறை வழங்கப்பட்டு வந்த முட்டையோடு, கூடுதலாக 2 முட்டைகள் வழங்கப்பட உள்ளன. இதற்கான அரசாணை சமூல நலத்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.


புரட்சித் தலைவர் எம்ஜிஆர் சத்துணவுத் திட்டத்தின்கீழ் கூடுதல் முட்டைகள் வழங்கப்படுவதற்கான நிதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டம் 


முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரால் 1982ஆம் ஆண்டு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டம் உருவாக்கப்பட்டது. தொடங்கிய நாள் முதல் 1982 மே 1990 வரை பள்ளிக் கல்வித்துறை, இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தியது. ஜூன் 1990 முதல் செப்டம்பர் 1992 வரை ஊரக வளா்ச்சித்துறை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தைச் செயல்படுத்தி வந்தது. 


அதைத் தொடர்ந்து அக்டோபர் 1992 முதல் செப்டம்பர் 1997 வரை சமூக நலத்துறையும் அக்டோபர் 1997 முதல் 19 ஜூலை 2006 வரை ஊரக வளா்ச்சித்துறையும் இந்தத் திட்டத்தை செயல்படுத்தின. அப்போதில் இருந்து இன்று வரை சமூக நலத்துறை சத்துணவுத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.




சத்துணவுத் திட்டத்தின் நோக்கம்


* பொருளாதாரத்தில் நலிவடைந்த குழந்தைகளுக்கு சத்தான உணவு கிடைக்க வழிசெய்தல்.


*ஊட்டச்சத்து குறைபாடுள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்குவதன் மூலம் கல்வித் தரத்தை மேம்படுத்துதல்.


*பள்ளி பயிலும் மாணவ, மாணவியர் கல்வி இடைநிற்றல் ஆவதைத் தடுத்தல்


இந்த நிலையில், அங்கன்வாடி குழந்தைகளுக்கு கூடுதலாக 2 முட்டைகள் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதேபோல், ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு  சத்துக்கள் அடங்கிய செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 






முன்னதாகத் தமிழகத்தில் இன்று முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், ’’அங்கன்வாடி மையங்களில் ஒன்று முதல் இரண்டு வயது வரையிலான குழந்தைகளுக்கு வாரம் ஒரு முட்டை வழங்கப்பட்டு வந்ததை அடுத்து, 3 முட்டைகளாக உயர்த்தி வழங்கப்பட உள்ளது’’ என்று தெரிவித்தார். இதையடுத்து சமூக நலத்துறை இதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது.