Su Venkatesan MP: மொழி விவகாரத்தில் “பொய்யும் ஏமாற்றும் காசியோடு போகும்” இதுதான் ஒன்றிய பாஜக அரசு என  எம்.பி. சு. வெங்கடேசன் ட்வீட் செய்துள்ளார். கடந்த நவம்பர் 11-ஆம் தேதி டெல்லி பல்கலைக் கழகத்தில் படிக்கும் மாணவர்களை இந்தி கட்டாயம் என பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள சுற்று அறிக்கையில் இளங்கலை மாணவர்களுக்கு இந்தி கட்டாயம் என குறிப்பிடப்பட்டுள்ளது. மாணவர்களை கட்டாயம் இந்தியை  படிக்கச் சொல்வது என்பது இந்தித் திணிப்பு என எழுத்தாளரும் மதுரை மக்களவை உறுப்பினருமான சு. வெங்கடேசன் டிவீட் செய்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,






“பொய்யும் ஏமாற்றும் காசியோடு போகும்” ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் டில்லி பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்தி மொழித் தேர்வு கட்டாயம். 11-11-2022 அறிவிப்பு. தமிழ் மொழியை காப்பது 130 கோடி இந்தியர்களின் வேலை என காசியில் நடைபெற்ற ஒன்றிய கல்வித்துறையின் நிகழ்வில் பிரதமர் பேசுவார். இந்தியை காப்பதே எங்களின் வேலை என அதே கல்வித்துறை டில்லியிலிருந்து உத்தரவு வெளியிடும். டெல்லி மத்திய பல்கலைக் கழகத்தில் இந்தி இல்லாவிட்டால் இளநிலைப் பட்டம் இல்லை. இது தான் ஒன்றிய பாஜக அரசு. “பொய்யும் ஏமாற்றும் காசியோடு போகும்” என்ற பழமொழி பொருத்தமானதே என குறிப்பிட்டுள்ளார். 






இதற்கு முன்னதாக கடந்த நவம்பர் மாதம் 19ஆம் தேதி உத்திர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள காசியில் நாட்டின் 75வது சுதந்திர தின அமுதப் பெருவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக  “தமிழ்ச் சங்கமம்” கொண்டாட்டம் தொடங்கப்பட்டது. வாரணாசி பிரதமர் மோடியின் சொந்த தொகுதி என்பதால் பிரதமர் மோடி தலைமையில் இந்த தமிழ்ச் சங்கமக் கொண்டாட்டம் நடைபெற்றது. அதில் பிரதமர் மோடி பேசுகையில். தமிழ் மொழியை இந்தியர்கள் அனைவரும் கற்க வேண்டும் என குறிப்பிட்டு பேசினார். இதனை குறிப்பிட்டு டெல்லி பல்கலைக்கழகத்தின் சுற்று அறிக்கையை குறிப்பிட்டு தனது டிவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். இவரது டிவிட்டர் பதிவுக்குப் பிறகு இந்த விவகாரம் ஊடக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.