நீட் தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. எனினும் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.
நாடு முழுவதும் மே 5ஆம் தேதி நீட் தேர்வு நடந்து முடிந்தது. 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்த நிலையில், தமிழ்நாட்டில் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வெழுதினர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 557 நகரங்கள் மற்றும் வெளி நாடுகளைச் சேர்ந்த 14 நகரங்களிலும் தேர்வு நடைபெறுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தேசிய தேர்வு முகமை (NTA) நடத்தும் இந்த தேர்வில் பங்கேற்கும் தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட்டானது, கடந்த 2 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இத்தேர்வானது இன்று தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி என 13 மொழிகளில் தேர்வு நடைபெற்றது.
நீட் தேர்வின் கேள்வித்தாள் கசிந்ததா?
இந்த நிலையில், இளநிலை நீட் தேர்வின் கேள்வித்தாள் கசிந்ததாக புகார் எழுந்து வருகிறது. நேற்று நடந்த தேர்வின் கேள்வித்தாள் தேர்வு நடைபெறுவதற்கு முன்னதாகவே சமூக வலைத்தளங்களில் வெளியானதாக கூறப்பட்டது. பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் இத்தகைய முறைகேடு நடந்ததாகக் கூறப்பட்டது. இதுதொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 14 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த தேசிய தேர்வு முகமை, "இவை முற்றிலும் ஆதாரமற்றவை. இதற்கு எந்த அடிப்படையும் இல்லை. சமூக ஊடகங்களில் பரவும் வினாத்தாள்களுக்கும் உண்மையான தேர்வு வினாத்தாளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
நுழைவு வாயில்கள் மூடப்பட்டு தேர்வு தொடங்கிய பிறகு, எந்த வெளி நபரும் அல்லது நிறுவனமும் தேர்வு மையங்களை அணுக முடியாது. மையங்கள் சிசிடிவி கண்காணிப்பில் உள்ளன" என தெரிவித்தது.
நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடையில்லை
எனினும் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இதுதொடர்பான பொதுநல வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்த நீதிமன்றம், வினாத்தாள் கசிந்த விவகாரம் குறித்து மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. எனினும் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடையில்லை என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நீட் தேர்வு வினாத்தாள் தொடர்பான பொதுநல வழக்கு கோடைக்கால விடுமுறைக்கு பிறகு, ஜூலை மாதம் விசாரிக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஜூன் 14ஆம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.