19 குழந்தைத் தொழிலாளர்களைத் தனியொருவராக மீட்டெடுத்து பள்ளிக்கு அனுப்பி இருக்கிறார் 16 வயதே ஆன அரசுப் பள்ளி மாணவி. இவரும் ஒரு காலத்தில் குழந்தைத் தொழிலாளியாய் இருந்தவர் என்பது அதிர்ச்சி கலந்த ஆச்சர்யம். 


திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வரும் மாணவி பிரியதர்ஷினி. கொரோனா காலத்தில் தன் ஊரில் பள்ளிப் படிப்பை பாதியில் விட்டுவிட்டு வேலைக்குச் சென்ற மாணவர்கள் 19 பேரைத் தன் விடா முயற்சியால் மீட்டிருக்கிறார். 


அத்தனை பேருக்கும் கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி , அவர்களை மீண்டும் பள்ளிக்குச் செல்ல வைத்திருக்கிறார். இவரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தொடங்கி, ஆட்சியர் பள்ளிக் கல்வித்துறை ஐஏஎஸ் அதிகாரிகள் வரை பலர் நேரில் அழைத்துப் பாராட்டி உள்ளனர்.


19 பேரின் எதிர்காலத்திற்கு வழி அமைத்து வாழ்க்கை கொடுத்ததற்காக எந்தப் பெருமையும் கொள்ளாமல் மிக இயல்பாகவே பேசுகிறார் பிரியதர்ஷினி. அவர் ஒன்றும் தொண்டு நிறுவனமோ அரசாங்க இயந்திரமோ அல்ல. அவரும் அவர்களைப்போலவே வறுமையில் உழன்று, கல்வி பயிலும் இன்னோர் ஏழைச் சிறுமிதான்... இங்கே வறுமைக்கு வழிகாட்டுவதும் வறுமைதான் போல...




தன்னுடைய பணி குறித்து ’ஏபிபி நாடு’விடம் விரிவாகப் பேசினார் மாணவி பிரியதர்ஷினி.


''அப்பா பெயிண்டராக இருக்காரு. அம்மா பூண்டு கம்பெனிக்கு வேலைக்குப் போறாங்க. 4 வருசத்துக்கு முன்னாடி, அம்மா தனியார் நிதிக் குழுவுல இருந்தாங்க. அப்போ அம்மா பேர்ல மோசடி பண்ணி நிறையப் பேர் கடன் வாங்கிட்டாங்க. வீடு பிரச்சினைலயும் கடன் ஆகிடுச்சு. அதை அடைக்கறக்காக அம்மாவும் அப்பாவும் வெளியூர்ல வேலைக்குப் போனாங்க. 


கடன்காரங்களுக்கு பதில் சொல்றதுக்காக நானும் தம்பியும், பாட்டிகூட ஊர்லயே இருந்தோம். அப்போ 7ஆவது படிச்சிட்டு இருந்தேன். ஸ்கூல் முடிச்சிட்டு பக்கத்துல இருக்கற மளிகைக் கடைல பொட்டலம் போடப் போவேன். ஆனா அது யாருக்கும் தெரியாது. ட்யூஷன் போறேன்னு சொல்லி நோட்டு, புத்தகத்தை எல்லாம் எடுத்துக்கிட்டு, வேலைக்குப் போயிடுவேன். 


’ரத்த வாந்தி எடுத்தேன்’


அப்போ சாப்பாட்டுக்கே ரொம்ப கஷ்டப்பட்டோம். சோறையும், குழம்பையும் வச்சு 4, 5 நாளைக்கு சூடு பண்ணி, சூடு பண்ணி சாப்பிடுவோம். இட்லிப் பானைல சாப்பாட்டை அவிச்சி, சூடு பண்ணி அதுல தயிர் ஊத்தி சாப்பிடுவோம். நாளாக ஆக, அது எனக்கு ஒத்துக்காம ஸ்கூல்லயே வாந்தி எடுத்துட்டேன். அப்போ ரத்த ரத்தமா வந்ததைப் பார்த்து எல்லோரும் பயந்துட்டாங்க. 




அப்போதான் வீட்டு நிலவரம் கொஞ்சப் பேருக்குத் தெரிஞ்சுது. சத்துணவும் எனக்கு சேரலை. வண்டார்குழலின்னு ஒரு மேம், தினமும் எனக்காக மதியம் சாப்பாடு கொண்டு வந்து குடுப்பாங்க. ஃப்ரண்ட்ஸ் கொஞ்சப் பேரும் மாறி மாறி சாப்பாடு கொண்டுவருவாங்க'' என்கிறார் பிரியதர்ஷினி.  


6ஆம் வகுப்பில் இருந்தே படிப்பில் சூட்டிகையாக இருந்திருக்கிறார் பிரியதர்ஷினி. வேலைக்குச் சென்றுகொண்டிருந்த காலத்திலும் முதல் மதிப்பெண்களைத்தான் பெற்று வந்திருக்கிறார். வீட்டு வேலை, மளிகைக் கடைப் பணி, தம்பியை கவனித்துக் கொள்வது, கடன்காரர்களுக்கு பதில் சொல்வது ஆகியவற்றுக்கு இடையிலும் பிரியதர்ஷினி படிப்பைக் கைவிடவில்லை. ஆனால் படிக்கும்போது வேலைக்குச் செல்வது தவறு என்று ஒருவர் உணர்த்தியதாகச் சொல்கிறார்.


’சின்ன வயசுல வேலைக்குப் போறது தப்பு’


''வேலைக்குப் போகும்போது எதிர் வீட்டுல ஒரு பெரியம்மா இருந்தாங்க. அவங்கதான், படிக்கும்போது இப்படிலாம் வேலைக்குப் போகக்கூடாது. அப்படிப் போறது தப்புன்னு புரிய வச்சாங்க. அதுக்கப்புறம் 9ஆவதுல இருந்து வேலைய விட்டுட்டு, முழுசா படிக்க ஆரம்பிச்சேன். 


ஸ்கூல் மிஸ், அண்ணா உதவியால, உள்ளூர்ல இருந்த கடனை அடைச்சுட்டோம். ஆனா வெளியூர்ல வட்டிக்கு வாங்கின கடன் ரூ.1.5 லட்சம் மட்டும் பாக்கி இருக்கு'' என்கிறார்.





ஊரடங்கின்போதும் படிப்பில் கவனம் செலுத்தியுள்ளார் பிரியதர்ஷினி. ஆனால் கொரோனா ஊரடங்கு முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகும், தன்னைப் போல ஏராளமான குழந்தைகள் பள்ளி செல்லாமல், வேலைக்குச் செல்வதைக் கண்டிருக்கிறார். அவர்களிடம் கல்வியின் முக்கியத்துவம் குறித்துப் பேசியிருக்கிறார். இதற்கிடையே தேசிய அறிவியல் குழந்தைகள் மாநாட்டுக்கு மேற்கொள்ள வேண்டிய செயல்திட்டம் குறித்து, தன் பள்ளி ஆசிரியர் புவனேஸ்வரி கூற, தான் செய்வதையே செயல்திட்டமாக்கினால் என்ன என்று பிரியதர்ஷினிக்குத் தோன்றி இருக்கிறது. 


அதற்குப் பிறகு நடந்ததை மாணவியே சொல்கிறார். ''முன்னாடிலாம் ஸ்கூலுக்குப் போகாத பசங்ககிட்ட நானே போய்ப் பேசுவேன். நம்மை மாதிரி குடும்பக் கஷ்டத்தைப் பொறுக்க முடியாமதானே வேலைக்குப் போறாங்கன்னு தோணும். அப்புறம் புவனேஸ்வரி மிஸ், ப்ரொஜெக்ட் பத்தி பேசினாங்க. குழந்தைத் தொழிலாளர்களை மீட்கறதையே ப்ரொஜெக்ட்டா செய்ய முடிவெடுத்தோம்.


 



மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உடன்


'உனக்கு எதுக்கு இந்தத் தேவையில்லாத வேலை?'


புவனேஸ்வரி மிஸ் வழிகாட்டலோட பேரண்ட்ஸ்கிட்ட பேச ஆரம்பிச்சேன். பேரண்ட்ஸ் எல்லோரும் நல்லபடியா பதில் சொன்னாலும், குழந்தைகளை ஸ்கூலுக்கு அனுப்பல. 'கூட இருக்கறவங்க எல்லாம் உனக்கு எதுக்கு இந்தத் தேவையில்லாத வேலை?'ன்னு திட்ட ஆரம்பிச்சாங்க. ஆனாலும் திரும்பத் திரும்ப போய்ப் பேசினேன். 


புவனேஸ்வரி மேம் கஷ்டப்படற பசங்க படிக்க ஹெல்ப் பண்ணுவாங்க. அதை பேரண்ட்ஸ்கிட்ட எடுத்துச்சொல்லி, படிக்க என்ன உதவி வேணாலும் செய்வோம்னு சொன்னேன். படிச்சு வேலைக்குப் போனா இன்னும் நிறைய சம்பாதிக்கலாம்னு பேசினேன். அவங்களும் மெல்ல மெல்லப் புரிஞ்சுக்கிட்டு, பிள்ளைகளை ஸ்கூலுக்கு அனுப்பி வைச்சாங்க. இப்போ இதுமாதிரி 19 குழந்தைத் தொழிலாளர்கள் பள்ளிக்குத் திரும்பி இருக்காங்க. இன்னும் கொஞ்ச பசங்ககிட்ட பேசிட்டு இருக்கேன். அவங்களையும் கண்டிப்பா ஸ்கூலுக்குப் போக வைச்சிருவேன். எதிர்காலத்தில் ஐஏஸ் ஆகணும்னு ஆசை'' என்பவரின் குரலில் தெறிக்கிறது நம்பிக்கை.


 



ஐஏஎஸ் அதிகாரிகளுடன்


மாணவி பிரியதர்ஷினியின் தன்னிகரற்ற செயலைக் கேள்விப்பட்ட  சமக்ர சிக்ஷா மாநிலத் திட்ட இயக்குநர் சுதன் ஐஏஎஸ், இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் சிறப்பு அதிகாரியும் பொது நூலகத்துறை இயக்குநருமான இளம்பகவத் ஐஏஎஸ், திருவாரூர் ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் ஐஏஎஸ் ஆகியோர் நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளனர். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தியாகராஜன் மாணவி பிரியதர்ஷினியைப் பாராட்டினார்.