பொறியியல் தரவரிசை பட்டியலில் 102 பேர் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளதாகவும் இதில் 100 பேர் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்துள்ளதாகவும் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். நீட் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டாலும், மருத்துவ மாணவர் சேர்க்கை இன்னும் தொடங்கப்படாததால், பொறியியல் கலந்தாய்வ்ய் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  


தரவரிசை பட்டியலில் தூத்துக்குடியைச் சேர்ந்த நேத்ரா என்ற மாணவி முதலிடம் பெற்றுள்ளார். 


மாணவர்கள் https://static.tneaonline.org/docs/Academic_Rank_List.pdf?t=1687764500997 என்ற இணைப்பை க்ளிக் செய்து, தரவரிசைப் பட்டியலை அறிந்துகொள்ளலாம்.


சென்னை கிண்டி தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில் தரவரிசை பட்டியலை அமைச்சர் பொன்முடி மதியம் 12.30 மணிக்கு வெளியிட்டார்.  அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:


’’ஒட்டுமொத்தமாக 1,76,744 மாணவர்களுக்கு தரவரிசை வெளியாகி உள்ளது. இந்தப் பட்டியலில் 405 பேர் வெளிமாநில மாணவர்கள் ஆவர். 1,57,661 மாணவர்கள் மாநிலப் பாடத் திட்டத்தில் படித்திருக்கின்றனர். அதேபோல 20,084 பேர் மத்தியப் பாடத் திட்டத்தில் படித்த மாணவர்கள் ஆவர். 830 பேர் மற்ற மாநில பாடத்திட்டங்களில் படித்த மாணவர்கள் ஆவர்.


அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் தரவரிசைப் பட்டியல்


அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் 5842 மாணவர்கள் அதிகளவில் விண்ணப்பித்துள்ளனர். இது கடந்த ஆண்டைஇக் காட்டிலும்25 சதவீத அளவுக்கு அதிகமாகும். இது புதுமைப் பெண் திட்டத்துக்குக் கிடைத்த வெற்றி ஆகும். 


அதேபோல 13,284 பேர் புதுமைப் பெண் திட்டத்தின் நிதி வாங்கத் தகுதியான மாணவிகள் ஆவர். 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் 15,136 ஆண்களுக்கும் 5 மூன்றாம் பாலினத்தவருக்கும் கல்லூரியில் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் கிடையாது. 


தரவரிசைப் பட்டியலில் புகார் ஏதேனும் இருந்தால், மாணவர்கள் 5 நாட்களுக்குள் (ஜூன் 30)  ஆன்லைனிலேயே விண்ணப்பித்து சரிசெய்து கொள்ளலாம்.


கலந்தாய்வு தள்ளிப்போக வாய்ப்பு


நீட் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டாலும், மருத்துவ மாணவர் சேர்க்கை இன்னும் தொடங்கப்படாததால், பொறியியல் கலந்தாய்வு தள்ளிப்போக வாய்ப்புள்ளது. முதல்கட்ட மருத்துவக் கலந்தாய்வு நடந்து முடிந்தால்கூட உடனடியாக பொறியியல் கலந்தாய்வைத் தொடங்கலாம். செய்து, தரவரிசைப் பட்டியலை அறிந்துகொள்ளலாம்’’.


இவ்வாறு அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.