பப்ஜி என்னும் மிக பிரபலமான விளையாட்டு இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள போதிலும், தற்போதும் பப்ஜி விளையாட்டுக்கு அடிமையான பலர் VPN (virtual private network) என்னும் முறையில் விளையாடி கொண்டு தான் இருக்கின்றனர். அப்படி சட்ட விரோதமாக பப்ஜி விளையாட்டை விளையாடி யூடியுப் பக்கத்தில் லைவ் ஸ்ட்ரீமிங் செய்பவர்தான் மதன். விளையாட்டை விளையாடியதோடு நிறுத்தாமல், ஆபாசம் நிறைந்த பேச்சுகளை பெண்களிடம் பேசுவது, தகாத வார்த்தைகளால் திட்டிக்கொண்டே பப்ஜி விளையாடுவது தான் மதனின் ஸ்டைல். பப்ஜி விளையாட்டிற்கு தமிழ்நாட்டில் ஏராளமான பள்ளி மாணவர்கள், சிறுவர்கள் அடிமையாக இருக்கின்றனர். அப்படிப்பட்ட சிலர் மதனின் தீவிர யூடியுப் ஃபாலோவராகவும் இருக்கின்றனர்.
இப்படியாக சுமார் 8 லட்சம் பேர் மதனின் யூடியுப் பக்கத்தை பின் தொடர்கின்றனர். இதில் பெரும்பாலும் இருப்பவர்கள் 18 வயதிற்கும் குறைவான டீனேஜ் பருவத்தை சேர்ந்தவர்கள். இவருடைய யூடியுப் பக்கத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்துடன் இணைத்து வைத்துள்ள மதன், யூடியுப் பக்கத்தில் ஆபாசமாக விளையாடுவது மட்டுமின்றி, சில சிறுமிகளை இன்ஸ்டாகிராம் பக்கத்துக்கு வருமாறு அழைப்பதும், அங்கே அந்தரங்க பேச்சுகளில் ஈடுபடுவதும் உண்டு.
சட்டவிரோமாக தடைசெய்யப்பட்ட பப்ஜி விளையாட்டிற்கு அடிமையாகி கண்முடித்தனமாக என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல், சிறுமிகள் பலரும் யூ ட்யூப் நேரலையில் ஆபாசமாக பேசும் அவலமும் இங்கே நடைபெற்று கொண்டு இருக்கிறது. தடைசெய்யப்பட்ட பப்ஜி விளையாட்டில் உள்ள சில ட்ரிக்ஸ் பற்றி பேச ஆரம்ப காலத்தில் உருவாக்கப்பட்ட மதனின் யூடியூப் சேனல் இன்று தமிழ்நாட்டின் இளம் தலைமுறையை தவறான பாதைக்கு அழைத்து செல்லும் பேரபாயமாக மாறியிருக்கிறது. இங்கே ட்ரிக்சைவிட மணிக்கணக்கில் ஆபாச வார்த்தைகள் தான் அதிகமாக பேசப்படுகிறது.
பள்ளி மாணவி ஒருவர் தனக்கு அனுப்பியுள்ள குறுஞ்செய்தியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு "பள்ளி பாப்பாக்கள் எப்போதும் அழகாக இருப்பார்கள்" என்று செய்துள்ள கமெண்ட்கள் வேதனையின் உச்சம். மறைமுகமாக யாருக்கும் தெரியாமல் இங்கே குற்றம் நடைபெறவில்லை, பகிரங்கமாக சமூக வலைத்தளங்களில் பாலியல் ரீதியிலான மிக மோசமான பதிவுகளை பதிந்து வருகிறார் மதன். இதில் சில பதிவில் தனியாக வீடியோ காலில் அந்தரங்கமாக பேசலாம் என்று சிறுமியை அழைக்கிறார் மதன், என்ன செய்கிறோம் என்றே தெரியாத சிறுமியும் அதற்கு இசைந்து கொடுக்கிறார்.
அதிக பார்வாயாளர்கள் இருப்பது மேலும் பலரிடமிருந்து நிதியுதவி பெரும் மதன் கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டியுள்ளார். அதன் மூலம் பலருக்கு தான் உதவுவதாகவும் பில்ட் அப் கொடுத்துள்ளார். இப்படி எல்லைகள் மீறியுள்ள மதனின் காணொளிகள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் நிறைந்துள்ள நிலையில், சென்னை குற்றவியல் பிரிவு காவல்துறையிடமும் - மாநில குழந்தைகள் நல ஆணையத்திடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விரைவாக வழக்கு பதிவுசெய்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு!