செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கேளம்பாக்கத்தில் அமைந்துள்ளது தனியார் சர்வதேச உண்டு உறைவிடப்பள்ளி. இந்த பள்ளியை சிவசங்கர் பாபா என்பவர் நிர்வகித்து வருகிறார். இவர் மீது கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த பள்ளியில் பயின்று வெளியேறி  மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறினார். மேலும், அந்த மாணவிகள் சிவங்கர் பாபாதான் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணரின் அவதாரம் என்று கூறிக்கொண்டும், பள்ளியில் படிக்கும் மாணவிகள் பலரையும் கோபிகைகள் என்று மூளைச்சலவை செய்து அவர்களுடன் உறவில் ஈடுபட்டு வந்ததாகவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.



இதையடுத்து, அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் சமூக வலைதளங்களில் வலுவாக குரல் கொடுக்கத் தொடங்கினர். குற்றம்சாட்டிய மாணவிகள் இருவரும் அங்கிருந்து தப்பித்து வந்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவல்களை தெரிவித்தனர். இதையடுத்து, தமிழ்நாடு குழந்தைகள் நல பாதுகாப்பு ஆணைய அதிகாரி சரஸ்வதி ரங்கசாமி தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில், மாணவிகள் அளித்த பாலியல் குற்றச்சாட்டில் முகாந்திரம் இருந்ததால் கடந்த 11-ஆம் தேதி பாபாவை நேரில் ஆஜராகும்படி ஆணையம் உத்தரவிட்டு இருந்தனர். இந்நிலையில் சிவசங்கர் பாபா தான் உத்தரகாண்ட் மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் தன்னால் ஆஜராக முடியாது என்றும் விளக்கம் அளித்திருந்தார். 



 

சிவசங்கர் என்ற இயற்பெயர் கொண்ட இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தான் ஸ்ரீகிருஷ்ணரின் அவதாரம் என்று தன்னுடைய பெயரை சிவசங்கர் பாபா என்று மாற்றி வைத்துக் கொண்டார். பின்னர், தன்னுடைய பக்தர்கள் இருவர் இலவசமாக வழங்கிய இடத்தில்தான் இந்த பள்ளியை கட்டி நிர்வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுமட்டுமின்றி, சிவசங்கர் பாபா அங்கு பயிலும் மாணவிகள் அனைவரையும் கடந்த ஜென்மத்தில் நீங்கள் எல்லாம் கோபிகைகளாக பிறந்தீர்கள் என்று மூளைச்சலவை செய்து பாலியல் தொல்லைகள் அளித்து வந்ததாகவும், வெளிநாடு சென்றால்கூட சிறுமிகளை அழைத்துச் செல்வதை வாடிக்கையாக வைத்திருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

 

சென்னையில் கடந்த சில வாரம் முன்பு தனியார் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் ஆதாரங்களுடன் வெளியான நிலையில் அவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இதையடுத்து தொடர்ச்சியாக சென்னையில் மேலும் சில பள்ளிகளில் ஆசிரியர்கள் சிலர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் வெளியானது. இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக காவல்துறையினர் வழக்குகள் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 



இந்த நிலையில், சிவசங்கர் பாபா மீதும் மகாபலிபுரம் அனைத்து மகளிர்  காவல்துறையினர் 354, 355, 363, 365 மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. மொத்தம் 15 புகார்கள் வந்ததாகவும் அதில் ஐந்து புகார்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சிவசங்கர் பாபாவின் தரப்பில் தெரிவிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் அவர் உத்தரகாண்ட் மாநிலத்தில் இருப்பதால் சிபிசிஐடிக்கு இந்த விசாரணை மாற்றப்படும் பட்சத்தில் எளிதாகக் வேறு மாநிலங்களுக்குச் சென்று விசாரணை நடத்தவும் கைது செய்யவும் எளிதாக இருக்கும் காரணத்தினால் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கிற்கு என சிபிசிஐடி சார்பில் தனி விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டு அவர் மூலம் இந்த விசாரணை துவங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன