மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள ஒரு  கிராமத்தைச் சேர்ந்த குணசேகரன் என்பவரின் மகன் காரல்மார்க்ஸ். 23 வயதான கார்ல் மார்க்ஸ் கட்டிடம் கட்டும் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இவர் அதே ஊரைச் சேர்ந்த 16 வயது சிறுமி  ஒருவரை திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்டு, கடந்த பல மாதங்களாக சிறுமியை பின்தொடர்ந்து கட்டாயப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அதனையும் மீறி கார்ல் மார்க்ஸ் நேற்று சிறுமின் வீட்டில் யாரும் இல்லாதபோது அங்கு சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மீண்டும் வற்புறுத்தியுள்ளார். இதற்கு சம்மதம் தெரிவிக்ககாத சிறுமி மீது ஆத்திரமடைந்த கார்ல் மார்க்ஸ் அந்த சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டுள்ளார், இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி கூச்சலிட்டதை தொடர்ந்து கார்ல் மார்க்ஸ் தப்பிச் சென்றுள்ளார். 

இதனையடுத்து வெளியில் சென்று வீடு திரும்பிய தன் தாயிடம் நடந்தவற்றை சிறுமி கூறியதைத் தொடர்ந்து, அதனை கேட்டு அதிர்ந்துபோன சிறுமியின் தாய் ஆணைக்காரன் சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட ஆணைக்காரன் சத்திரம் காவல்நிலைய காவலர்கள் புகாரின் அடிப்படையில் காவல் நிலைய காவல் ஆய்வாளர் அமுதாராணி தலைமையிலான காவலர்கள் தொடர்ந்து சம்பவம் நடைபெற்ற கிராமத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். 

விசாரணை தொடந்து காரல் மார்க்சை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்து கைது செய்து சீர்காழி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் ஊரடங்கு உத்தரவு நடைமுறை உள்ளதால் தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், கடைகள், கல்லூரிகள், பள்ளிகள் மூடப்பட்டு இயங்காமல் உள்ளது. குறிப்பாக பள்ளி,கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லாமல் குழந்தைகள் அனைவரும் வீடுகளில் முடங்கி கிடக்கின்றன. இதனால் குழந்தைகள் வீடுகளிலும், வீடுகளில் அருகிலுள்ள நபர்களை மட்டுமே நம்பி விளையாடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனை தவறாக பயன்படுத்திக்கொள்ளும் வக்கிர புத்தி கொண்ட மனித வடிவிலான மிருகங்கள் குழந்தைகளுக்கு பாலியல் ரீதியாக சீண்டல்களிலும், துன்புறுத்தல்களும் செய்து வருகின்றனர்.

உறவினர்கள், நண்பர்கள், நம்பிக்கைக்கு உரியவர்கள், இளைஞர்கள், வயதானவர்கள் என குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவை அளிப்பதில் தற்போது விதிவிலக்காக யாரும் இல்லை. குறிப்பாக இந்த கொரோனோ வைரஸ் தொற்று பரவ தொடங்கி கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பள்ளி கல்லூரிகள் முறையாக இயங்காத சூழலில் ஏராளமான பெண் குழந்தைகள் இந்த பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகி வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது. மேலும் இந்த கொரோனா வைரஸ் தொற்றின் காலத்தில் குழந்தை திருமணங்களும் அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இதனை தமிழ்நாடு அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டு கூடுதல் முக்கியத்துவம் அளித்து இவற்றை தடுக்க வழிவகை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.