கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் தாலுக்கா குச்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 22 வயதான இளைஞர் கவியரசன். இவர் மயிலாடுதுறையை அடுத்த மணல்மேடு காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கவியரசன் அதே பகுதியில் குடியிருக்கும் ஏழாம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுமியை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமியின் கழுத்தில் மஞ்சள் கயிறை கட்டி அவரை திருமணம் செய்து கொண்டதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.
இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், இது குறித்து மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் துறையினர் இளைஞர் கவியரசனை போக்சோ மற்றும் குழந்தைகள் திருமண தடைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 12 வயது என்பதால் மாவட்ட குழந்தைகள் நல அலுவலகம் மூலம் கவுன்சிலிங் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் விதிக்கப்பட்டுள்ள பல்வேறு காட்டுப்பாடுகள் காரணமாக தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், கடைகள், கல்லூரிகள், பள்ளிகள் என அனைத்தும் செயல்படாமல் இருந்தது. குறிப்பாக பள்ளி, கல்லூரிகள் முழுமையாக இன்னும் பழைய முறையில் செயல்படவில்லை என்பதால் பள்ளி, கல்லூரிகளுக்கு சரியாக செல்லாமல் குழந்தைகள் அனைவரும் வீடுகளில் அதிக நேரம் செலவிடுகின்றனர். இதனால் குழந்தைகள் வீடுகளிலும், வீடுகளில் அருகிலுள்ள நபர்களை மட்டுமே நம்பி விளையாடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
இதனை தவறாக பயன்படுத்திக் கொள்ளும் வக்கிர புத்தி கொண்ட மனித வடிவிலான மிருகங்கள் குழந்தைகளை கடவுளுக்கு நிகராக எண்ணாமல், அதுவும் குறிப்பாக பெண் குழந்தைகளை பாலியல் ரீதியாக சீண்டல்களிலும், சிறு பிள்ளைகளுக்கு திருமண ஆசை ஏற்படுத்துவதும் என துன்புறுத்தல்களும் செய்து வருகின்றன. உறவினர்கள், நண்பர்கள், நம்பிக்கைக்கு உரியவர்கள், இளைஞர்கள், வயதானவர்கள் என குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவை அழிப்பதில் தற்போது விதிவிலக்காக யாரும் இல்லை. குறிப்பாக இந்த கொரோனோ வைரஸ் தொற்று பரவ தொடங்கி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பள்ளி கல்லூரிகள் முறையாக இயங்காத சூழலில் ஏராளமான பெண் குழந்தைகள் இந்த பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகி வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது. மேலும் இந்த கொரோனா வைரஸ் தொற்றின் காலத்தில் குழந்தை திருமணங்களும் அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இதனை தமிழ்நாடு அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டு கூடுதல் முக்கியத்துவம் அளித்து இவற்றை தடுக்க வழிவகை செய்ய வேண்டும் என பல பெற்றோர்களும், சமூக ஆர்வலர்கள் பலரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.