கொரோனா பெருந்தொற்றிலிருந்து விடுதலையாகியிருக்கும் 2021-ஆம் ஆண்டு முடிவடையவிருக்கிறது. 2020-ஆம் ஆண்டுபோல் இந்த ஆண்டு கடும் லாக்டவுனில் சிக்காமல் இருந்தாலும் மக்கள் அனைவரும் ஒருவித எச்சரிக்கையுடனேயே 2021ஐ அணுகினார்கள். பெரும்பாலானோர் வீட்டிலேயே இருந்தனர்.
இந்தக் காலக்கட்டத்தில் திரைப்பட பாடல்கள், தனி பாடல்கள் என ஏராளமான பாடல்கள் வெளியாகின. அந்தவகையில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்ட டாப் 10 பாடல்கள் பின்வருமாறு:
எஞ்சாயி எஞ்சாமி:
பாடலாசிரியர் தெருக்குரல் அறிவும், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணின் மகள் தீயும் சேர்ந்து பாடிய எஞ்சாயி எஞ்சாமி 2021ஆம் ஆண்டில் சென்சேஷனல் ஹிட். நிலம் குறித்தும், ஆதி மனிதர்கள் குறித்தும் பாடலில் இடம்பெற்ற வரிகள் கவனம் ஈர்த்தன.
அன்னக்கிளி அன்னக்கிளி
அடி ஆலமரக்கிளை வண்ணக்கிளி
நல்லபடி வாழச்சொல்லி
இந்த மண்ணை கொடுத்தானே பூர்வகுடி
கம்மங்கரை காணியெல்லாம்
பாடி திரிஞ்சானே ஆதிக்குடி
நாய் நரி பூனைக்கும் தான்
இந்த ஏரிகுளம் கூட சொந்தமடி போன்ற வரிகள் மிகவும் கவனம் ஈர்த்தன. மேலும் இந்த நிலமானது மனிதர்களுக்கு மட்டும் சொந்தமில்லை அனைத்து உயிர்களுக்கும் சமம், சொந்தம் என்ற கருத்தை கூறியது.
இந்தப் பாடல் ஹிட்டானது மட்டுமின்றி ஒரு ஹிட் கூட்டணியை முடிவுக்கும் கொண்டுவந்ததாக கூறப்படுகிறது. எஞ்சாயி எஞ்சாமி பாடலின் விளம்பரத்திலும் வெற்றியிலும் அறிவு ஓரம் கட்டப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு ரஞ்சித் எதிர்ப்பு தெரிவித்து ட்வீட்டும் செய்திருந்தார். இதன் காரணமாகவே ரஞ்சித் - சந்தோஷ் நாராயணன் கூட்டணி பிரிந்துவிட்டதாகவும் ஒரு பேச்சு இருக்கிறது.
குட்டி பட்டாஸ்:
எஞ்சாயி எஞ்சாமி பாடலுக்கு பிறகு தனி பாடல்களில் பெரும் கவனம் ஈர்த்தது குட்டி பட்டாஸ் பாடல். அஷ்வின் நடனமாடியிருந்த இந்தப் பாடலை பத்திரிகையாளரும், பாடலாசிரியருமான அ.ப. ராசா எழுதியிருந்தார். சோனி மியூசிக் தயாரிப்பில் சந்தோஷ் தயாநிதி இசையமைத்திருக்கும் இந்தப் பாடல் பட்டித்தொட்டியெங்கும் ஹிட்.
மணக்கும் அஞ்சடி பெர்ஃபியூம் நீ
மயக்கும் கண்ணுல கஞ்சா நீ
சிரிச்சா சிந்திடும் செந்தேன் நீ
முறைச்ச கீறிடும் கண்ணாடி போன்ற குறும்புத்தனமான வரிகள் கவனம் ஈர்த்தன. இந்தப் பாடலுக்கு பிறகு அ.ப. ராசாவுக்கு ஏராளமான பாடல் வாய்ப்புகள் கிடைத்திருக்கிறது.
மணிகே மாகே ஹிதே:
இலங்கையைச் சேர்ந்த இளம்பெண் யோஹானி என்பவர் பாடிய பாடல் மணிகே மாகே ஹிதே. சிங்கள மொழியில் உருவான இந்தப் பாடல் யூட்யூபில் 140 மில்லியன் பார்வையாளர்களை கடந்திருக்கிறது.
குறிப்பாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தனது பழைய பாடல்களின் நடனங்களுக்கு மிக்ஸ் செய்து வெளியிட்டார். இதனையடுத்து இந்தப் பாடல் பட்டித்தொட்டியெங்கும் ஹிட் அடித்தது. அதுமட்டுமின்றி ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் மதன் கார்க்கியுடன் யோஹானி எடுத்துக்கொண்ட புகைப்படமும் வைரலானது.
பேர் வெச்சாலும் வைக்காம போனாலும்:
இசைக்கு எந்தக் காலத்திலும் இளையராஜா மட்டுமே மன்னன் என நிரூபித்த பாடல் பேர் வெச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம் பாடல்.
கமல் நடிப்பில் இளையராஜா இசையமைத்திருந்த மைக்கேல் மதன காமராஜன் படத்தில் இடம்பெற்ற பாடல். 1990ஆம் ஆண்டு வெளியான இந்தப் பாடல் அப்போதே ஹிட் என்றாலும் யுவன் ஷங்கர் ராஜா இதனை தற்போது ரீமிக்ஸ் செய்தார்.
பழைய பாடலின் ஜீவனை கெடுக்காமல் ரீமிக்ஸ் செய்வதில் தான் எப்போதும் ஒரு கிங் என்பதை யுவன் இந்தப் பாடலில் நிரூபித்திருப்பார். பாடலை கண்ட, கேட்ட 2K கிட்ஸ் அனைவரும் பாடலை கொண்டாடி தீர்த்தனர்.
பரம சுந்தரி:
இசை புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் MIMI படத்தில் ஷ்ரேயே கோஷல் குரலில் வெளியான பாடல் பரம சுந்தரி. பாடல் முழுக்க எனர்ஜியை தூவும் ட்யூனோடு இந்தப் பாடலில் களமிறங்கிய ரஹ்மானுக்கு இந்தியா முழுவதிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்தன.
மேலும், ரஹ்மான் பேக் டூ தி ஃபார்ம் என்றும் அவரது ரசிகர்கள் கொண்டாடினர்.
இதுவும் கடந்து போகும்:
நயன்தாரா நடிப்பில் வெளியான நெற்றிக்கண் படத்தில் இடம்பெற்ற பாடல் இதுவும் கடந்துபோகும். பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா வரிகளில் இசையமைப்பாளர் கிரிஷ் இசையமைப்பில் சித் ஸ்ரீராம் பாடிய பாடல்.
பாடலின் வரிகள் வாழ்வுக்கு தன்னம்பிக்கையின் மொத்த ஊற்றாக அமைந்திருக்கும். இதுவும் கடந்து போகும் என பாடலின் முதல் வரியே கொரோனா காலக்கட்டத்தில் சிக்கியிருப்பவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக பொருந்தியது கூடுதல் சிறப்பு.
அதுவே படைக்கும் அதுவே உடைக்கும்
மனம்தான் ஒரு குழந்தையே
அதுவாய் மலரும் அதுவாய் உதிரும்
அதுபோல் இந்த கவலையே
நாள்தோறும் ஏதோ மாறுதல்
வானும் மண்ணும் வாழும் ஆறுதல்
பேசாமல் வா வாழ்வை வாழ்ந்திருப்போம் போன்ற வரிகள் மூலம் கோலிவுட்டின் பாடலாசிரியர்களில் தான் யார் என்பதையும், தன்னுடைய முக்கியத்துவத்தையும் கார்த்திக் நேத்தா உணர்த்தியிருக்கிறார்.
கண்டா வர சொல்லுங்க:
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் கர்ணன். சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் படத்தில் இடம் பெற்ற பாடலான கண்டா வர சொல்லுங்க கர்ணன கையோட கூட்டி வாருங்க பாடலை இயக்குநர் மாரி செல்வராஜே எழுதியிருந்தார்.
சூரியனும் பெக்கவில்லை சந்திரனும் சாட்சி இல்ல என கிடக்குழி மாரியம்மாள் பாடலை தொடங்கும்போதே ரசிகர்களை பாடலுக்குள் அழைத்து சென்றுவிடுவார். சந்தோஷ் நாராயணின் இசையும், பாடல் காட்சியமைக்கப்பட்ட விதமும் அனைவரையும் கவர்ந்தது.
மாலை டும் டும்:
எனிமி திரைப்படத்தில் இடம்பெற்ற மாலை டும் டும் பாடல் லேட்டஸ்ட் ஹிட்களில் ஒன்று. தமனின் இசையில் விவேக் எழுதிய பாடலுக்கு மிருணாளினி ஆடிய நடனமும், பாடல் படமாக்கப்பட்ட விதமும் பெரிதும் ஈர்த்தது.
மேலும், ஸ்ரீ வர்தினி, அதிதி, ரோஷினி, சத்யா யாமினி, தேஜஸ்வினி ஆகியோரின் குரல்களும் பாடலை வைரலாக்கின. நீண்ட நாள்களுக்கு பிறகு தமிழில் இசையமைப்பாளர் தமனின் கம்பேக் இந்தப் பாடல் என கருதப்படுகிறது.
வாய்யா சாமி:
தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் உருவான படம் புஷ்பா. அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் சமீபத்தில் இந்தப் படம் வெளியானது. அதில் தேவிஸ்ரீபிரசாத் இசையில் இடம்பெற்ற வாய்யா சாமி பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது.
தமிழில் பாடலை ராஜலட்சுமி பாடியிருக்கிறார். ஏற்கனவே நாட்டுப்புற பாடலில் கலக்கிக்கொண்டிருக்கும் ராஜலட்சுமிக்கு இந்தப் பாடலின் ட்யூன் கரும்பு திங்க கூலியா என்ற ரேஞ்சில் அமைந்தது.
இந்தப் பாடலை அவர் பாடியதற்கு பிறகு விஜய் படத்தில் பாட வாய்ப்பு கிடைத்திருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அதை ராஜலட்சுமி மறுத்துவிட்டார். இருப்பினும் இனி ராஜலட்சுமி பாடல்களில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஊ சொல்றியா மாமா:
2021ஆம் வருடம் முடிவடையும்போது படு வைரல் ஹிட் ஊ சொல்றியா மாமா பாடல். வாய்யா சாமி போல் தெலுங்கு மட்டுமின்றி தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளின் வெர்ஷனும் இந்தப் பாடலுக்கு உருவானது.
தமிழ் வெர்ஷனை நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியா பாடினார். போதை ஏற்றும் ஆண்ட்ரியாவின் குரல், ஆண்களை வெளுக்கும் விவேகாவின் வரிகள், சமந்தாவின் நடனம் என இந்தப் பாடல் இந்த ஆண்டின் இறுதியில் மிகப்பெரிய அளவில் ஸ்கோர் செய்தது. இந்தப் பாடலுக்கு எதிராக ஆண்கள் அமைப்பு வழக்கு தொடர்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்