கோவையில் நண்பர்களை செல்போன் எண்களை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட பட்டதாரி இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவையைச் சேர்ந்த வினோத்குமார், ஸ்டான்லி ஜோன்ஸ், ஆனந்தகுமார் ஆகியோ மாவட்ட சைபர் குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்தனர். அதில் தங்களின் செல்போன் எண்களை பயன்படுத்தி தங்களுக்கு தெரியாமல் யாரோ இணையத்தின் வழியாக கடன் அட்டை மற்றும் கடன் அப்ளிகேஷனில் இருந்து பண மோசடி செய்ததாக புகாரளித்தனர்.
இதனைத் தொடர்ந்து மாநகரக் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் சைபர் குற்றப்பிரிவு ஆய்வாளர் அருண், உதவி ஆய்வாளர் சிவராஜ்பாண்டியன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். இதில் கோவைப்புதூரை சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர் சிக்கினார். அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
அதாவது, பி.டெக். பட்டாதாரியான விக்னேஷ் பலரிடம் நண்பர்களாக பேசி பழகுவதோடு, உறவினர்களோடு பேசிவிட்டு தருவதாக கூறி செல்போனை வாங்குவாராம். பின்னர் அதிலிருந்து வங்கிக்கணக்குகள், குறுந்தகவல், ஓடிபியும் தனது எண்ணிற்கு வரும்படி மாற்றியமைத்து பண மோசடியில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது.
இதனைக் கொண்டு சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தெரியாமல் ஆவணங்கள், எண்களை பயன்படுத்தி வங்கிக் கடன் அட்டை கணக்குகள், ஆன்லைன் கடன் அப்ளிகேஷன் மூலம் பண மோசடி செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து விக்னேஷிடம் இருந்து லேப்டாப்கள், பலரின் செல்போன் எண்கள், மின்னணு சாதனங்கள், சிம் கார்டுகள், கார்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதுபோன்று யாரேனும் பாதிக்கப்பட்டால் உடனடியாக சைபர் குற்றப்பிரிவில் புகார் தெரிவிக்குமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.