கடந்த அக்டோபர் 18 அன்று, டெல்லியில் டாலி பாபர் என்ற 23 வயது பெண் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். அவரைக் கொலை செய்த அங்கித் காபா என்பவர் அவருக்கு ஏற்கனவே பழக்கமான நபர்.
டெல்லி துவாரகா பகுதியில் டாலி பாபர் சுமார் 6 முறை கத்தியால் குத்தப்பட்டு, ரத்த வெள்ளத்தில் அவரது வீட்டின் அருகில் கண்டுபிடிக்கப்பட்டார். டெல்லி காவல்துறை டாலி பாபரின் கொலை வழக்கில், அங்கித் காபா என்பவரையும், அவரது நண்பர்களான மனிஷ், ஹிமான்ஷு ஆகியோரையும் கைது செய்துள்ளது.
இந்தக் கொலை வழக்கை விசாரித்த டெல்லி காவல்துறையினர் அங்கித் காபாவின் காதலை டாலி பாபர் நிராகரித்ததால், கொலை செய்ததாக கூறியுள்ளனர். எனினும் கொலை நிகழ்ந்து 40 மணி நேரங்கள் கழிந்த பின் நடத்தப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பில், டாலி பாபருக்கும் அங்கித் காபாவுக்கு இடையில் நிகழ்ந்த வாக்குவாதத்திற்குப் பின் இந்தக் கொலை நிகழ்ந்துள்ளது.
டெல்லியின் ஓம் விஹார் பகுதியில் தனது நண்பர் வீட்டு நிகழ்ச்சிக்கு இரவில் சுமார் 11.30 மணிக்கு கிளம்பிய டாலி பாபர், தன்னுடைய குடும்பத்தினரிடம் ஒரு மணி நேரத்தில் திரும்பி வருவதாக கூறிவிட்டுச் சென்றூள்ளார். சிசிடிவி காட்சிகளின்படி, சம்பவ இடத்தில் டாலியுடன் மூன்று ஆண்கள் நின்று பேசிக் கொண்டிருந்தது, அவர்களுள் ஒருவர் அவரைக் குத்தி கொலை செய்யும் போது, அதனை மற்ற இருவர் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது தெரிய வந்தது.
காவல்துறையின் அறிக்கையின் படி, டாலி பாபர், அங்கித் காபா மற்றும் அவருடைய நண்பர்களுடன் நிகழ்ச்சிக்குச் சென்றுள்ளார். அங்கு நடந்த வாக்குவாதம் முற்றி, இறுதியில் கொலையில் முடிந்துள்ளது.
அப்பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த ஜொமாட்டோ டெலிவரி பணியாளர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் பெண் ஒருவர் சாலையோரத்தில் இருந்ததைப் பார்த்து காவல்துறையிடம் தகவல் அளித்துள்ளார். `சாலையோரத்தில் பெண் ஒருவர் இருப்பது பற்றிய தகவல் எங்களுக்குக் கிடைத்தது. நாங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்த போது, உடல் முழுவதும் கத்தியால் குத்தப்பட்டிருந்தது தெரிய வந்தது. அவரைக் கொலை செய்த ஆண்கள் தப்பித்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்குத் தகவல் தெரிவித்து, அவரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றோம். எனினும், அவர் உயிருடன் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர். சம்பவ இடத்தில் இருந்தோரிடம் விசாரித்ததில், அங்கித் காபா என்ற நபர் பாதிக்கப்பட்ட பெண்ணைக் கொலை செய்ததாகவும், அவர் ஏற்கனவே டாலியிடம் தனது காதலை வெளிப்படுத்தியதாகவும் தெரிவித்தனர்’ எனக் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
குற்றவாளிகள் சண்டிகர் பகுதிக்குத் தப்பியுள்ளதாகவும், அங்கிருந்து பாட்டியாலா சென்றதாகவும் கூறப்படுகிறது. `அங்கித் பிடிக்கப்பட்ட போது, அவர் கொலை செய்ய பயன்படுத்திய கத்தியும் கிடைத்தது. கொலை நடந்து 24 மணி நேரங்களுக்குள் குற்றவாளி பிடிபட்டுள்ளார்’ எனக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
டாலியின் சகோதரர் லக்ஷய், `அங்கித் காபா டாலியைத் துப்பாக்கி காட்டி மிரட்டியதாகத் தனது நண்பரிடம் டாலி தெரிவித்துள்ளார். காவல்துறை எங்களிடம் தகவலைக் கூறிய போது, நாங்கள் உறங்கிக் கொண்டிருந்தோம். சம்பவ இடத்திற்குச் சென்ற போது, டாலி சாலையோரம் கிடந்தார். அங்கு பலர் இருந்த போதும், ஒருவர் கூட அவருக்கு உதவவில்லை’ எனக் கூறியுள்ளார்.
ஆட்டோ ஓட்டுநரின் மகளான டாலி மாடலிங் துறையில் வளர்ச்சி பெற வேண்டும் என முயன்று வந்தவர் எனக் கூறப்படுகிறது.