தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள பிச்சிவிளை ஊராட்சியில் தேர்வு செய்யப்பட்ட 5 வார்டு உறுப்பினர்கள் திடீரென ராஜினாமா கடிதம் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


                                  

திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது பிச்சிவிளை ஊராட்சி. இங்கு ஊராட்சித் தலைவர் பதவி பட்டியல் இனத்தை சேர்ந்த பெண்ணுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த ஊராட்சியில் மொத்தம் 827 வாக்குகள் உள்ளன. இதில் பட்டியல் இனத்தவர் வாக்குகள் 6 மட்டுமே உள்ளன. ஊராட்சித் தலைவர் பதவியை பட்டியல் இனத்தை சேர்ந்த பெண்ணுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதால் மெஜாரிட்டியாக உள்ள குறிப்பிட்ட சமுதாயத்தினர் அதிருப்தி அடைந்தனர்.

 

கடந்த முறை நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சித் தலைவர் பதவிக்கு பட்டியல் இனத்தை சேர்ந்த ராஜேஸ்வரி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்தனர்கள் தங்களது ஆட்சேபனையை வெளிப்படுத்தும் வகையில் வார்டு உறுப்பினர் தேர்தலில் யாரும் போட்டியிடவில்லை.


                                  

இந்நிலையில் காலியாக உள்ள பிச்சிவிளை ஊராட்சியின் 6 வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு கடந்த 9-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் 1-வது வார்டுக்கு வைகுண்டசெல்வி, 2-வது வார்டுக்கு கேசவன், 3-வது வார்டுக்கு நடராஜன், 4-வது வார்டுக்கு சுஜாதா, 5-வது வார்டுக்கு யாக்கோபு, 6-வது வார்டுக்கு பரிமளசெல்வி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

 

தேர்வு செய்யப்பட்ட வார்டு உறுப்பினர்கள் கடந்த 20-ம் தேதி பதவியேற்று கொண்டனர். இதில் பரிமளசெல்வியின் மகன் இறந்து போனதால் அவர் மட்டும் பதவியேற்கவில்லை. இதையடுத்து பிச்சிவிளை ஊராட்சித் துணைத்தலைவர் தேர்வு நேற்று நடப்பதாக இருந்தது. இதற்காக திருச்செந்தூர் ஒன்றிய ஆணையர் ராணி, ஊராட்சித் தலைவர் ராஜேஸ்வரி உள்ளிட்டோர் நேற்று ஊராட்சி அலுவலகத்துக்கு வந்திருந்தனர். 

 

காலை 10 மணியளவில் ஊராட்சி அலுவலகத்துக்கு வந்த வார்டு உறுப்பினர்கள் வைகுண்டசெல்வி, கேசவன், நடராஜன், சுஜாதா மற்றும்  யாக்கோபு ஆகிய 5 பேரும் திடீரென தங்களது ராஜினாமா கடிதத்தை ஊராட்சித் தலைவரிடம் வழங்கினர். பின்னர் அங்கிருந்து வேகவேகமாக வெளியேறி விட்டனர்.


                                  

இதுகுறித்து அவர்கள் கூறும்போது, எங்களுக்கு பதவியில் தொடருவதற்கு எந்த  விருப்பம் இல்லை. எங்களது ஊராட்சியில் 6 ஓட்டுக்களே பட்டியல் இனத்தவருக்கு உள்ளது. ஆனால் மொத்தம் 827 ஒட்டுக்கள் உள்ளன. பட்டியல் இனத்தவருக்கு குறைந்தது 50 ஓட்டுக்களுக்கு மேல் இருந்தாலும் தலைவர் பதவியை பட்டியல் இனத்தவருக்கு ஒதுக்கீடு செய்திருக்கலாம். எனவே ஊர்மக்கள் முடிவுபடி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டோம். எங்களது ராஜினாமா கடிதத்தை ஏற்கவில்லை என்றால் அடுத்த கட்டமாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்குவோம் என்றனர்.

 

இதுகுறித்து அங்கிருந்த ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கூறும்போது, துணைத்தலைவரை தேர்வு செய்வதற்கான கூட்டம் நடப்பதாக இருந்தது. ஆனால் வார்டு உறுப்பினர்கள் திடீரென ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளனர். இந்த ராஜினாமாவை ஏற்க முடியாது. முறைப்படி கூட்டம் நடத்தி மினிட் புத்தகத்தில்  தீர்மானமாக கொண்டு வந்து ராஜினாமா செய்தால் மட்டுமே பரிசிலீக்கப்படும் என தெரிவித்தனர்.