மயிலாடுதுறை மாவட்டம் பாலையூர் காவல் சரகம் சின்ன கொக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் வயது 60. இவர் அதே பகுதியில் உள்ள தனியார் செங்கல் சூளையில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று அக்கரை கொக்கூர் கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித் குமார் வயது 33 என்ற இளைஞர் மதுபோதையில் செங்கல் சூளைக்கு சென்று அங்கு வெட்டி வைத்திருந்த மரங்களை எடுத்துள்ளார்.
அதனை கண்ட செங்கல் சூளையில் வேலைபார்த்து வரும் கணேசன், எதற்காக சூளையில் உள்ள மரங்களை எடுக்கிறாய் என தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரஞ்சித்குமார் மதுபோதையில் அங்கிருந்த மரக்கட்டையை எடுத்து கணேசனை கடுமையாக தாக்கியுள்ளார். அதனைக் கண்ட சக தொழிலாளி ரவி வயது 50 என்பவர் ஓடிவந்து தடுக்க முயன்றுள்ளார், அவரையும் ரஞ்சித்குமார் கட்டையால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
இதில் தலையில் பலத்த காயமடைந்த கணேசனை அருகில் இருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள பாலையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்துள்ளார், அவருக்கு அங்கு முதல் சிகிச்சை உதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே கணேசன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ரவி அளித்த புகாரின் பேரில் பாலையூர் காவல்நிலையத்தில் கொலை மற்றும் தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ரஞ்சித் குமாரை கைது செய்துள்ளனர். மேலும் கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு மதுபான கடையான டாஸ்மாக் கடை அடைக்கப்பட்டுள்ள நிலையிலும் பலர் தன்னை சுயநினைவை பறக்கும் அளவிற்கு மதுகுடித்து விட்டு மதுபோதையில் இருப்பதை காணமுடிகிறது. இதற்கு காவல்துறையினர் கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெறுவதை சரியான முறையில் தடுக்காததே இதுபோன்ற குற்றச்சம்பவங்களுக்கு காரணம் என சமுக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இந்நிலையில் வயதான முதியவரை மதுபோதையில் இளைஞர் கொலை செய்த சம்பவம் அப்பகுதியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொரோனோ வைரஸ் தொற்றின் அச்சம், ஊரடங்கு உத்தரவால் வேலை இழப்பு, வெளி நிகழ்வுகளில் பங்கேற்பு, விளையாட்டு, பொழுதுபோக்கு என எந்த ஒரு செயல்களிலும் மக்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள முடியாமல் மிகுந்த மன உளைச்சலுக்கும், மன அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளனர். இதன் காரணமாக கொலை, கொள்ளை,பாலியல் வன்கொடுமை, தற்கொலை முயற்சி என ஏராளமான சம்பவங்கள் நடந்தேறி வருகிறது. இதற்காக தீர்வு காண்பதற்கு அரசு இலவச தொடர்பு எண்களை அறிவித்து மனநல ஆலோசகர்களை நியமனம் செய்து ஆலோசனை பெற வழிவகை செய்துள்ளது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்க்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050