சென்னை தாம்பரம் அடுத்த ஊரப்பாக்கம் பகுதியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற இளம் பெண், மின்சார ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழப்பு

 

தண்டவாளத்தை கடக்க முயன்ற பொழுது

 

செங்கல்பட்டு  ( Chengalpattu News ): அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மகள் யாழினி (23). சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பகுதியை சேர்ந்தவர் செல்வம் இவரது மகள் செல்சியா (23). தோழிகளான இருவரும் ,  ஊரப்பாக்கம் அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துவிட்டு, பின்னர் மீண்டும் ஊரப்பாக்கம் ரயில் நிலையம் செல்வதற்காக ரயில்வே தண்டவாளத்தில் நடந்து சென்றுள்ளனர். இருவரும் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளனர். அப்போது சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி மின்சார ரயில் வருவதைக் கண்டு இருவரும் தண்டவாளத்தின் ஓரமாக ஒதுங்கியுள்ளனர். ஆனாலும் ரயிலின் ஒரு பகுதி அவர்கள் இருவரும் மீது மோதியதில் இருவரும் தூக்கி எறியப்பட்டனர். இதில் செல்சியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், யாழினி படுகாயம் அடைந்தார்.

 

தீவிர சிகிச்சைப் பிரிவில் மற்றொரு இளம்பெண்

 

இதனை தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் யாழினி மீட்கப்பட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் சம்பவம் குறித்து தகவல் அறிந்த தாம்பரம் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று செல்சியா உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

தொடரும் உயிரிழப்பு சம்பவங்கள்

 

செங்கல்பட்டு முதல் தாம்பரம் வரை உள்ள, ரயில்வே தண்டவாளம் பகுதியில் அடிக்கடி உயிரிழப்பு சம்பவங்கள் நடைபெற்று வருவது தொடர் கதை ஆகிவிட்டது. இப்பகுதியில் வெளி மாவட்டங்களை சேர்ந்த, ஏராளமான கல்லூரி மாணவ மாணவியர் மற்றும் வேலைக்குச் செல்லக்கூடிய நபர்கள் தங்கி பணியாற்றி வருகின்றனர். அதே போன்று உள்ளூர் மக்களும் ஏராளமானோர், இந்தப் பகுதியில் இருந்து பணி நிமித்தமாக வேறு இடங்களுக்கு செல்கின்றனர். பல இடங்களில் ரயில்வே தண்டவாளங்களை ஆபத்தான முறையில் கடக்கும் பொழுது இது போன்ற விபத்துக்கள் ஏற்படுகின்றது. இதை தடுக்க முறையான கண்காணிப்பு மற்றும் ரயில்வே தண்டவாளங்களை கடப்பதற்கு பாலங்கள் அமைத்து தர வேண்டும் என்பது கோரிக்கையாக இருந்து வருகிறது

 


.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்