தமிழ் சினிமா ரசிகர்களால் இன்றைக்கும் கொண்டாடப்படும் பக்தி படமான திருவிளையாடல்  வெளியாகி இன்றோடு 58 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. 


திருவிளையாடலில் இணைந்த பிரபலங்கள்


1965 ஆம் ஆண்டு இயக்குநர் ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில்  சிவாஜி கணேசன் , சாவித்ரி ,கேபி சுந்தராம்பாள்,  டி.எஸ்.பாலையா ,  முத்துராமன் , நாகேஷ் , TR மகாலிங்கம் , K. சாரங்கபாணி , தேவிகா , மனோரமா உள்ளிட்ட பலரும் நடித்த படம் ‘திருவிளையாடல்’. கே.வி.மகாதேவன் இசையமைத்த இப்படத்திற்கு கண்ணதாசன்மற்றும் சங்கரதாஸ் சுவாமிகள் பாடல் வரிகளை எழுதினர்.  இந்த படத்தில் இயக்குநர் ஏ.பி.நாகராஜன் 'நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே' என்று கூறும் நக்கீரர் வேடத்தில் தோன்றினார்.


மெய் சிலிர்க்க வைத்த காட்சிகள் 


தமிழ் சினிமாவின் மறக்க முடியாத பக்தி படங்களில் ஒன்று  'திருவிளையாடல்'.  இந்த படத்தில் நடிகர் திலகம் சிவாஜிக்கு இணையாக நாகேஷும் கலக்கியிருப்பார். திருவிளையாடல் படத்தின் பெரும் பலம் வசனங்கள் தான் என்றால் மிகையல்ல. இப்போது பார்த்தாலும் அதன் பொலிவு மாறாமல் அனைத்து வயதினராலும் ரசிக்கப்படும் அளவுக்கு எடுக்கப்பட்டிருந்தது. நாம் புராணங்களில் படித்த, காதால் கேட்ட கதையை திரைப்படமாக கொடுத்து நம்மை மெய் சிலிர்க்க வைத்த இயக்குநர் ஏ.பி.நாகராஜன்.


குறிப்பாக சிவனான சிவாஜிக்கும், தருமியான நாகேஷூக்கும் இடையிலான கேள்வி பதில் காட்சிகள் இன்றைக்கும் சினிமாவில் பயன்படுத்தப்படுகின்றது. குடும்பம் குடும்பமாக இன்றைக்கும் நாம் காண முடியாத தியேட்டர் நிகழ்வுகளை இப்படம் நிகழ்த்தியது. எந்த விழாவாக இருந்தாலும் அதில் திருவிளையாடல் பட பாடல்கள் ஒலிக்காமல் இருந்தது இல்லை. இன்றைக்கு வாழும் அன்றைய காலத்தில் பிறந்தவர்களை கேட்டால் அடிபிறழாமல் திருவிளையாடல் வசனம் பேசுவார்கள்.  


புராண கதைகளுக்கு தமிழ்நாட்டில் நல்ல மவுசு இருப்பதை அறிந்து கொண்ட இயக்குநர் ஏ.பி.நாகராஜன், திருவிளையாடல் படத்தை கையில் எடுத்தார். நாடகத்துறையில் தன்னுடன் நெருங்கி பழகிய சிவாஜியை ஹீரோவாக்கினார். இப்படம் யாரும் எதிர்பாராத வகையில் பெரும் வெற்றியைப் பெற்றது. அதேபோல் "பழம் நீயப்பா, இசைத் தமிழ், பார்த்தால் பசுமரம், பொதிகை மாலை உச்சியிலே, பாட்டும் நானே, ஒரு நாள் போதுமா”  என அத்தனை பாடல்களும் இன்றைக்கும் இன்பத்தேன் வந்து காதில் பாயும் அளவுக்கு சிறப்பு வாய்ந்தது. இப்படி பல சிறப்புகளை வாய்ந்த திருவிளையாடல் படம் என்றைக்கும் காலத்தால் அழிக்க முடியாத பாடம் என்பது குறிப்பிடத்தக்கது.