பள்ளிக்கரணையில் கணவர் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட 4 மாதத்தில் மனைவி தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


சென்னை பள்ளிக்கரணை அருகே கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி அங்குள்ள மதுபானக்கடை வாசலில் இளைஞர் ஒருவர் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் இளைஞரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியது. அதாவது அந்த இளைஞர் ஆணவப் படுகொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. 


பள்ளிகரணையில் உள்ள அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் பிரவீன். 26 வயதான இவர் தனது தந்தையுடன் இணைந்து பைக் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். ஜல்லடியான் பேட்டையைச் சேர்ந்த ஷர்மி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இதனால் பிரவீனுடனான காதலுக்கு ஷர்மி வீட்டில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 


இதனால் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வீட்டை  விட்டு வெளியேறிய ஷர்மி பிரவீன் வீட்டுக்கு சென்றுள்ளார். பின் இருவரும் சுயமரியாதை திருமணம் செய்துள்ளனர். தொடர்ந்து ஷர்மி வீட்டார் காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில், அவரோ பிரவீனுடன் செல்வதாக உறுதியாக கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து இருவீட்டாரிடமும் ஒப்புதல் எழுதி வாங்கி கொண்டு பிரச்சினையை முடித்ததாக கூறப்படுகிறது. 


ஆனால் ஷர்மி - பிரவீன் திருமணத்தால், பெண்ணின் குடும்பத்தின் கடும் கோபத்தில் இருந்துள்ளனர். குறிப்பாக ஷர்மியின் அண்ணன் தினேஷ் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்று பிரவீனை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி பிப்ரவரி 25 ஆம் தேதி பிரவீனை தினேஷ் மற்றும் அவரது நண்பர்கள் படுகொலை செய்தனர். இதுதொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு தினேஷ் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சாதிய ஆணவப் படுகொலை தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியது. இந்நிலையில் பிரவீன் இறந்த சோகத்தில் இருந்த ஷர்மி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டுமென பிரவீனின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 




வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும்.


மாநில உதவி மையம் :104


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,


எண்; 11, பார்க் வியூவ் சாலை,


ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028. தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)