சேலத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் நிதி நிறுவன அதிபர் உள்ளிட்ட 3 பேரை ஏமாற்றிய மோசடி பெண்ணை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
தொழில்நுட்பங்கள் பெருகிவிட்ட இந்த காலகட்டத்தில் சர்வ சாதாரணமாக மோசடிகளும் அரங்கேறி வருகிறது. குறிப்பாக சமூக வலைத்தளங்களில் போலியான கணக்குகள் உருவாக்கி பண மோசடி, கொலை மிரட்டல், ஆசை வார்த்தை கூறி ஏமாற்றுவது உள்ளிட்ட பல குற்றச் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. இதுகுறித்து எவ்வளவு தான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. இதனிடையே சேலத்தை அதிர வைக்கும் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.
சேலம் மாவட்டம் எம்செட்டிபட்டிப் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி என்பவர் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் நீலகிரி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த ரசிதா என்ற பெண்ணுடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. அழகுக்கலை நிபுணரான ரசிதா தனது பல்வேறு ரீல்ஸ் வீடியோக்களை இன்ஸ்டாகிராமல் பக்கத்தில் பதிவிட்டு வந்துள்ளார். இந்த வீடியோக்களுக்கு தொடர்ந்து மூர்த்தி லைக் போட்டு வந்துள்ளார். இதனைக் கண்ட ரசிதா மூர்த்திக்கு தொடர்ந்து மெசெஜ் அனுப்பி பேசியுள்ளார்.
இன்ஸ்டாகிராமில் பேசிய அவர், தான் கஷ்டத்தில் இருப்பதாக கூறியுள்ளார். அவரது பேச்சில் மயங்கி இரக்கம் காட்டிய மூர்த்தி, தான் ஏற்கனவே விவாகரத்து ஆனவர் என்ற விவரத்தை தெரிவித்துள்ளார். இருவரும் ஒரே மாதிரியான கருத்துடன் உள்ளோம். திருமணம் செய்துகொண்டால் என்ன என ரசிதா, கூற இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர்.
பின்னர் கடந்த மார்ச் 30 ஆம் தேதி சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள ஈஸ்வரன் கோயிலில் இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர். தொடர்ந்து 3 மாதங்கள் ஒன்றாக வாழ்ந்த நிலையில், கடந்த ஜூலை 5 ஆம் தேதி திடீரென வீட்டில் இருந்த ரசிதா மாயமானார். அப்போது வீட்டில் இருந்த ரூ.1.5 லட்சம் ரொக்கம் மற்றும் 4 பவுன் நகையும் காணாமல் போனது. இதனால் அதிர்ச்சியடைந்த மூர்த்தி ரசிதாவை செல்போனில் தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.
இதனால் மூர்த்தி ரசிதாவின் அக்கா மகனை தொடர்பு கொண்டு விவரம் கேட்டுள்ளார். அப்போது அந்த நபர், ரசிதாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டதாகவும், மூர்த்தியை ஏமாற்றிய விஷயத்தை கூறியதாக சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ரசிதா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தொளசம்பட்டி காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
இதுதொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ரசிதா ஏற்கனவே ஊட்டியில் 2 பேரை திருமணம் செய்த நிலையில், 3வதாக மூர்த்தியையும் ஏமாற்றியதாக தெரிய வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் கோவையில் ஆண் நண்பருடன் தலைமறைவாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால் ரசிதாவை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.