நவரச நாயகன் கார்த்திக் நடிப்பில் வெளியாகி இன்றளவும் ரசிகர்களின் ஃபேவரைட் ஆக உள்ள கிழக்கு வாசல் படம் இன்றோடு 33 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. 


ஆர்.வி.உதயகுமார்- கார்த்திக் கூட்டணி


1988 ஆம் ஆண்டு பிரபு கார்த்திக் நடித்த உரிமை கீதம் படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமானார் கோவையை சேர்ந்த ஆர்.வி.உதயகுமார். அந்தப் படத்தின் மூலம் கிடைத்த நட்பின் காரணமாக கார்த்தியை வைத்து 1990 ஆம் ஆண்டு கிழக்கு வாசல் என்ற படத்தை இயக்கினார். இளையராஜா இசையமைத்த இந்த படத்தில் ரேவதி,குஷ்பூ,சின்னி ஜெயந்த்,மனோரமா,விஜயகுமார், ஜனகராஜ், சண்முகசுந்தரம், தியாகு, சுலக்ஷனா என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். 


படத்தின் கதை


தெருக்கூத்து கலைஞர் ஆன கார்த்திக்கை, ஊரின் பெரிய குடும்பத்தின் பெண்ணான குஷ்பூ விளையாட்டாக காதலிப்பதாக கூறி வீட்டில் வந்து பெண் கேட்குமாறு கூறுகிறார். பெண் கேட்க சென்ற இடத்தில் ஏற்பட்ட அவமானம் தாங்காமல்  மனோரமா இறந்துவிடுவார். இதனால் சோகத்தில் இருக்கும் கார்த்திற்கு, தாசிகுல பெண்ணாக வந்து தன் கற்பை காப்பாற்றிக் கொள்ள நினைக்கும் ரேவதியுடன் நட்பு ஏற்படுகிறது.


இதனிடையே குஷ்பூவை தனது மகன் தியாகுவிற்கு திருமணம் செய்து வைத்து குடும்ப சொத்தை அபகரிக்க நினைக்கிறார் விஜயகுமார். இந்த நிகழ்வில் பாட்டு பாட வரும் கார்த்திக்கை சந்தித்து மன்னிப்பு கேட்கிறார் குஷ்பூ. இதனை தியாகு பார்த்து விட பிரச்சினை வெடிக்கிறது.  அதேசமயம் விஜயகுமார் ரேவதியை அடைய முயல்கிறார். விஜயகுமார் -ரேவதி, கார்த்திக் - குஷ்பூ இடையேயான கதை என்ன ஆனது என்பது இப்படத்தின் காட்சிகளாக அமைக்கப்பட்டிருந்தது. 


பாராட்டைப் பெற்ற நடிப்பு 


இந்த படத்தில் தெருக்கூத்து கலைஞராக நடித்த கார்த்திக்கு கிடைத்த பாராட்டை விட, ரேவதிக்கு கிடைத்த பாராட்டுகள் அதிகம். தன் அம்மா இறப்புக்கு காரணம் தெரிந்து கார்த்திக் ஆத்திரம் கொள்ளும் இடம் அவர் நடிப்பில் என்றும் நவரச நாயகன் தான் என்பதற்கு சான்று. மனோரமா, குஷ்பூ, சின்னி ஜெயந்த் என அனைவரும் சிறப்பான நடிப்பை வழங்க ‘கிழக்கு வாசல்’ திரையிட்ட இடமெல்லாம் திருவிழாவாக மாறி வெற்றி வாகை சூடியது. 


ஹிட்டடித்த பாடல்கள் 


இளையராஜா இசையில் அட வீட்டுக்கு வீட்டுக்கு, பச்சைமலை பூவு, தளுக்கி தளுக்கி, பாடிப் பறந்தகிளி போன்ற பாடல்கள் இன்றும் ஃபேவரைட் ஆக உள்ளது. மோகன ராகத்தில் உருவான, 'வந்ததே ஓ குங்குமம்’ பாடலுக்கு சிறந்த பின்னணிப் பாடகிக்கான தமிழக அரசின் விருதை, சித்ரா பெற்றார். பெண்ணடிமைத்தனம், தாசிகுலம், சாதி பேதம் ஆகியவற்றை பேசிய இப்படம் இன்றும் பலரின் ஃபேவரைட் ஆக உள்ளது. 


கிழக்கு வாசல் படம் மேரே சாஜன் சாத் நிபானா என்ற பெயரில் ஹிந்தியிலும், சிந்துார திலகா என்று கன்னடத்திலும், சிலகபச்சா காபுறம் என்று தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டது. மேலும் இந்த படத்தின் வெற்றியால் கார்த்திக் - ஆர்.வி.உதயகுமார் கூட்டணி அடுத்ததாக பொன்னுமணி, நந்தவனத்தேரு உள்ளிட்ட படங்களில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.