ஏழாவது திருமணத்துக்கு தயாராகிக் கொண்டிருந்த மோசடி பெண்ணிடம் ஏமாந்த கணவன் அப்பெண்ணை பொறிவைத்துப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக ஆறாவது திருமணம் முடிந்த 15 நாள்களுக்குள் ஏழாவது திருமணம் செய்து கொள்ளவிருந்த இந்த மணப்பெண்ணையும், அவருக்கு உடந்தையாக இருந்த மூன்றும் பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.
ஆறாவது திருமணம்
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலுார் அருகே உள்ள கள்ளிப்பாளையத்தைச் சேர்ந்தவர் தனபால் (வயது 35). இவருக்கும் மதுரையைச் சேர்ந்த சந்தியா (வயது 26) என்ற பெண்ணுக்கும் செப்டெம்பர் 7ஆம் தேதி திருமணம் நடந்தது.
இந்தத் திருமணத்தை, மதுரையைச் சேர்ந்த பாலமுருகன் (வயது 45) என்ற புரோக்கர் ஏற்பாடு செய்திருந்த நிலையில், திருமணத்தில் கலந்துகொள்ள பெண் வீட்டார் சார்பில் அக்கா, மாமா ஆகிய இருவர் மட்டுமே வந்துள்ளனர்.
அவர்களும் புரோக்கரும் திருமணம் முடிந்த கையோடு 1.50 லட்சம் ரூபாய் கமிஷன் வாங்கிச் சென்றனர். தனபால், சந்தியாவுடன் தன் திருமண வாழ்வைத் தொடங்கிய நிலையில் செப்.9ஆம் தேதி காலை தனபால் கண்விழித்து பார்த்தபோது சந்தியாவைக் காணவில்லை.
மணப்பெண் தலைமறைவு
அவரது மொபைல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்ட வண்ணம் இருந்துள்ளது. தொடர்ந்து அவரது உறவினர்கள், புரோக்கர் பாலமுருகனை தொடர்பு கொள்ள முயன்றபோது அவர்களது மொபைல் போன்களும் ஆஃப் செய்யப்பட்டு இருந்துள்ளன.
இந்நிலையில், வீட்டில் பீரோவில் இருந்த கல்யாண பட்டுப்புடவை, நகைகள், அவர் கொண்டு வந்த துணிகளைக் காணாத நிலையில், அவற்றை எடுத்துக் கொண்டு சந்தியா மாயமானது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து விரக்தியில் முன்னதாக தனபால் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.
இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு திருமணத்துக்கு பெண் பார்த்தபோது, மதுரையைச் சேர்ந்த தனலட்சுமி (வயது 45) என்ற புரோக்கர் மூலம் சந்தியாவின் போட்டோ வந்துள்ளது. அதைப்பார்த்து அதிர்ந்த தனபால் தன்னை ஏமாற்றியவர்களை வளைத்துப் பிடிக்க திட்டமிட்டார்.
ஏழாவது திருமண ஏற்பாடு
இதையடுத்து, புரோக்கர் தனலட்சுமியிடம் தன் உறவினர்கள் மூலம் வேறு நபருக்கு திருமணம் செய்ய பேசி உள்ளார். தொடர்ந்து ஃபோட்டோக்களை மட்டும் பார்த்து போனிலேயே நிச்சயம் செய்யப்பட்ட நிலையில், நேற்று (செப்.22) காலை திருச்செங்கோட்டில் திருமணம் நடத்தி அவர்களை சுற்றி வளைக்கத் திட்டமிட்டனர்.
இதனையடுத்து மணப்பெண் சந்தியா, புரோக்கர் தனலட்சுமி, அவரது உறவினர் அய்யப்பன் (வயது37) ஆகியோர் காரில் திருச்செங்கோடு வந்தடைந்தனர். காரை ஜெயவேல் என்பவர் ஓட்டி வந்துள்ளார்.
இந்நிலையில் அங்கு வந்தடைந்ததும் தான் ஏமாற்றி விட்டுச் சென்ற தனபால் மற்றும் அவரது உறவினர்களைக் கண்டு சந்தியா அதிர்ச்சி அடைந்துள்ளார். தொடர்ந்து ஏமாற்றுக் கும்பலை வளைத்துப் பிடித்த தனபால் குடும்பத்தினர், பரமத்தி வேலுார் காவல் துறையினரிடம் அவர்களை ஒப்படைத்தனர்.
2 நாள் திருமண வாழ்க்கையுடன் ஓட்டம்
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தியாவுக்கு தனபாலுடன் சேர்த்து இதுவரை ஆறு பேருடன் திருமணம் நடந்தது தெரிய வந்தது.
சந்தியாவும் அவரது கூட்டாளிகளும் இப்படி திருமணத் திட்டம் தீட்டி, இரண்டு நாள்கள் மட்டும் குடும்பம் நடத்திவிட்டு சரியான நேரம் பார்த்து கிடைத்ததை எடுத்துக் கொண்டு எஸ்கேப் ஆவதை வழக்கமாகக் கொண்டுள்ளவர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, சந்தியா, புரோக்கர் தனலட்சுமி, அய்யப்பன், ஜெயவேல் ஆகிய நால்வரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.